ஞாயிறு, நவம்பர் 15, 2015

காதல் வெண்பாக்கள் 52



வெங்கனலில்  நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.

காட்டுக்குப் போனாலும்  காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.

சிவகுமாரன் 

(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு  நன்றி.)



திங்கள், நவம்பர் 02, 2015

பிள்ளைக்குறள் 70



வகுப்பறை என்பது வையத்தை வெல்ல
தகுதியாய் ஆக்கும் தளம்.

தளத்தைக் கவனமாய்த் தேர்ந்திட்ட பின்னர்
களத்தில் திறமையைக் காட்டு.

காட்டுவாய் யாரென்று கானக் குயிற்குஞ்சு
ஓட்டை உடைப்பதை ஒத்து
.
ஒத்தக் கருத்துடன் ஒவ்வாத ஒன்றையும்
எத்தன்மை என்றுபார் ஆய்ந்து.

ஆய்ந்து தெளிந்தே அறுதியிடு! இல்லையேல்
பாய்ந்து  வரும்பார் பழி.

பழிக்குப் பயங்கொள்! பழம்பட்ட நோய்போல்
அழித்தே  ஒழிக்கும் அது.

அது-இது என்றெல்லாம் ஐயங்கள் இன்றி
எதிலும் துணிவாய் இறங்கு

இறக்கத்தில் கைதூக்கி ஏற்றியோர் தம்மை
மறக்காமல் என்றும் மதி

மதிப்பில்லை என்றால் மகேசன் எனினும்
விதிப்பயன் என்று வில(க்)கு.

விலக நினைக்காமல் வெல்லும் வெறிகொள்.
இலகுவாய் வெற்றிகள் ஏது?                                           ...70
                                                                                                                                                                                                                தொடரும் 


சிவகுமாரன் 

திங்கள், செப்டம்பர் 28, 2015

நீங்கள் தான்!


காலங்கள் ஓடிடும் நில்லாது.-நம்
கணக்குகள் அதன்முன் செல்லாது.
பாலனாய் தவழ்ந்திட்ட நாள்முதலாய்- நெஞ்சில்
பசுமையாய் பதிந்தவை அகலாது.
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.


கிளைவிட்டு பறவைகள் பறந்திடலாம்- அதன்
கீழ்வளர் விழுதுகள் விலகாது.
முளைவிட்ட நாள்முதல் முகம்பார்த்தே-உச்சி
முகர்ந்திட்ட அன்புக்கு விலையேது?
நான்
வளர்வதினால் அந்த
வான்தொடலாம்-என்
வேர் உங்கள்
பூமியில்
தான்

என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்!
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்.
நீங்கள்....தான்
நீங்கள்... தான்


தன்னில் தாயும்,
நெஞ்சினில் தந்தையும் சுமந்தீர்!
காலங்கள் தோறும்
நீங்கள் சொல்லும்
எந்த
வார்த்தையும் வேதம்,
நீங்கள் செல்லும்
அந்தப்
பாதையில் பயணம்,
நான்
பார்ப்பதெல்லாம்
உங்கள்
விழிவழியே,
உங்கள்
பரம்பரை
பேர்சொல்ல நான்
என்னில்
நீங்கள் தான்!
எண்ணம்
நீங்கள் தான்!
என் வாழ்க்கையின்
ஒளி நீங்கள் தான்.
ஏற்றமும்
இந்தத் தோற்றமும்
வரும்
மாற்றமும்
இனி
நீங்கள்தான்



ஞாயிறு, ஜூன் 28, 2015

ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய  பின்னேதான் நமக்கு உறைக்கிறது

வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.

பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை  கட்டும் மனிதன்  நானில்லை

வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ

சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை  பேசும்படி ஆவேனோ

ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச்  செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்

பாரங்கள் இறக்கிவைக்கப்  பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.

அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்

மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.

 அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன்  பூவுலகில் வாழ்வதற்கு.

இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.

ஒன்றை இழந்தால்தான்  இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ  இழக்கின்றேன்

இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.

சிவகுமாரன் 
22.06.2015


  

வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்


திங்கள், ஏப்ரல் 13, 2015

பிள்ளைக்குறள் 60


துரத்திவரும் வெற்றி, தொலைந்திடும் தோல்வி!
சிரத்தையாய் உன்பணியைச் செய்.

செய்யத் துணிந்தால் சிகரம் தொலைவில்லை
தொய்வின்றி ஏறித் தொடு
.
தொடுவானை நீண்டுபோய்த் தொட்டுத் திரும்பும்.
கடும்முயற்சிக் கொள்வாரின் கை.

கைகூடும் நிச்சயம் காணும் கனவெல்லாம்்
கைவிடாமல் நீமுயலுங் கால்.

கால்போன போக்கில் கடக்காமல் வாழ்க்கையை
நூல்பிடித்தாற் போன்றே நடத்து.

நடத்தையும் செய்கையும் நன்றெனில் உந்தன்
இடத்தைப் பறிப்பவர் யார்?

யாருக்கும் சார்பின்றி யாரோடும் ஒத்துவாழ்
நீருக்கு உண்டோ நிறம்?

நிறம்மாறும் பச்சோந்தி போன்றொரு வாழ்க்கை
அறவழி அல்ல அறி.

அறியாமை, சோம்பல், அலட்சியம் மூன்றும்
குறிக்கோளை.வீழ்த்தும் குழி.

குழிகளும் மேடுகளும் கொண்டதே வாழ்க்கை.
வழிதனை நீயே வகு.          60.