வெள்ளி, பிப்ரவரி 25, 2011

படிச்சுக் கிழிக்க வேண்டாம்



( +2 வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விரும்பிய மகனிடம் ஓர் ஏழைத்  தந்தையின் புலம்பல் ) 

ஏன்டாப்பா எம்மவனே 
   இப்படி நீ செஞ்சுப்புட்ட 
வேண்டாத வேலையெல்லாம் 
   வெட்டியாக பண்ணிப்புட்ட 

படிக்க வேணாமின்னு 
   படிச்சு படிச்சு சொன்னேனே 
அடிச்சு சொன்னேன்- நீ
   அப்படியும் கேக்கலியே

பெயிலாகித் தொலைச்சிருந்தா 
   பேசாமா இருந்திருப்பேன்.
பாஸாகித்  தொலச்சிட்டீயே  
   பாவி இப்ப என்ன செய்வேன் ?

கூழுக்கே வழியில்லை
   கும்பி இங்கே காயுதடா 
காலேஜில் சேத்துவிட
   காசுக்கு எங்க போவேன் ?

மூத்தவ வயசு இப்ப 
   முப்பத்தொண்ணு  ஆகுதடா 
அடுத்தவ ஆளாகி 
   அஞ்சு வருஷம் ஆச்சுதடா 

மாப்பிள்ளை வாங்கத்தான் 
   மாடாய் ஒழைக்கிறேண்டா 
நல்லவரன் தேடித்தேடி 
   நாயா அலையிறேண்டா 

ஒங்க ஆத்தா ஒடம்புக்கு 
   ஒருநூறு கோளாறு
ஒருவாயி மருந்துக்கே 
   நாளெல்லாம் தகராறு

எப்படி நான் சமாளிப்பேன்
   எதைச் சொல்லி நானழுவேன் ?
இப்ப உன்னை படிக்கவைக்க 
   எங்க போயி முட்டிக்குவேன் ?

வடிக்க அரிசியில்லை 
   வாயிக்குத் தண்ணியில்லை
படிக்க வைக்க எனக்கு 
   வழியேதும் தெரியவில்லை 

படிச்சுக் கிழிச்சு நீ 
   பாழாப் போக வேணாம்
வடிச்ச காஞ்சி தூக்கி 
   வாடா நீ வயலுக்கு. 
****************************************

                                                                   
                                              

(இந்தக் கவிதை 1991 ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய பொன்விழா ஆண்டு கவிதைப் போட்டியில் மரபுக் கவிதைப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது )

                                     -சிவகுமாரன் 
                         

சனி, பிப்ரவரி 19, 2011

மண் சுமந்தவா


நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 





சமர்ப்பணம்
16-02-2011 முதல் இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாத யாத்திரை மேற்கொண்டுவரும் என் சித்தப்பா, என் ஆன்மீக குரு திரு.அரசு அவர்களுக்கு. 


வெள்ளி, பிப்ரவரி 11, 2011

என்று மலரும் ?







                  
          
    
             (காவடிச்சிந்து)

ஊரைச் சுரண்டித் தின்னும் கூட்டம் - உடல்
  உழைப்பினில் கொள்வதென்று நாட்டம் ? - பணத்
தேரில் பவனிவந்து
  தின்று கொழுப்பவரின்
  ஆட்டம் - என்று - ஓட்டம் ?

சேற்றினிலே கால்கள் வைத்து நடப்பார் - அவர்
  தின்ன உணவுமின்றி கிடப்பார் - பிறர் 
சோற்றைத் திருடித் தின்று
   தொப்பை வளர்ப்பவர்கள் 
    நடிப்பார் - தின்று - வெடிப்பார்

பொத்தல் குடிசைக்குள்ளே வாழும் - ஏழைப்
  பிள்ளை குடிக்க இல்லை கூழும்- அவர்
நித்தம் வறுமையினில் 
   நீந்தும் நிலைமைஎன்று 
   வீழும் - இன்பம் - சூழும் ?

.பத்துமாடிக் கட்டிடத்தில் சிலரும் - வீதிப் 
 பாலம் அதனடியில் பலரும் - இன்னும் 
எத்தனை நாள் வாழ்ந்திருப்பார்  
  இங்குஒரு மாற்றமென்று
  மலரும் - சுகம் - வளரும் ? 
                                      
                                            -சிவகுமாரன்


இந்தக் கவிதையை அய்யா சூரி (சுப்பு ரத்தினம் ) அவர்கள் இனிமையாக பாடி என் கவிதைக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தைக்  கொடுத்திருக்கிறார்.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

காதல் வெண்பாக்கள் 16

                         முத்திரை

              அங்கிருந்து நீயனுப்பும்
                    அஞ்சலுறைக் குள்தேடி
              எங்கேயும் இல்லையடி
                    இன்பங்கள் - இங்கெனக்கு
              முத்தங்கள் சேர்ந்துபோய்
                    மூச்சிரைப்பு வாங்குதடி
              இத்தோ  டிணைத்துள்ளேன்
                                  இச்



                     கடித்தம் 


           கிடைத்தது உங்கள்
               கிறங்கிய முத்தம்
           அடைத்துத் திணித்திருந்த
                அஞ்சல் - எடைக்கு 
           எடைதருவேன் முத்தங்கள்
                இங்குவந்தால்- கொஞ்சம்
           அடக்கி இருந்திடுங்கள்
                             அங்கு.


      

புதன், பிப்ரவரி 02, 2011

போதைப்பொருட்கள்.


விடியும் பொழுதின் கீற்றும், புல்லில் 
வடியும் பன்னீர்த் துளியும் முல்லைக்
கொடியும், முகில்கள் ஒன்றாய்க் கூடி 
படியும் மலையும் பச்சை வயலும் 

கவிதை  பாடிக் களிப்போ டிருக்க 
புவியில் எத்தனை போதைப்  பொருட்கள். 
மாதர் விழியும் மயக்கும் அவரின் 
காதல் மொழியும் மனதைச் சுண்டிப்

பார்க்கும் நடையும் புலமை இல்லா 
யார்க்கும் கவிதை எழுதத் தோன்றும்.
கொஞ்சும் குரலில் கூவும் குயிலும் 
பிஞ்சுக் குழந்தை பேசும் பேச்சும்

நெஞ்சக் குகையில் நுழைந்து சென்று 
செஞ்சொற்க் கவியாய் சீறிப் பாயும்.
ஆற்றங் கரையில் ஆடும் படகும்
காற்றுக் கடங்கி ஓடும் நீரும்

வேற்று நினைவை விரட்டி அடித்து 
ஊற்றாய்க் கவிதை ஓடச் செய்யும்.
கடலாம் மங்கை கரைக்கு எழுதும் 
மடலாம் அலையின் மயக்கும் மொழியும்

வான வீதியை வளைத்துப் போட்டு 
கானம் பாடிக்  களிக்கும் பறவையும் 
தூக்கணாங் குருவியின் திறமையும் ஏரியில்
தூக்கிய காலொடு தவம்செயும் கொக்கும்  

பூவின் இதழின் புன்னகை முகமும் 
ஆவின் கன்று அடிக்கும் லூட்டியும்
சுட்டிக் குரங்கின் "சுர்"ரெனும் முறைப்பும்
குட்டி அணிலின் கொய்யாக் கொறிப்பும்

 இருட்டுப் பூனையின் மிரட்டும் விழியும்
குருட்டுப் பாடகன் குரலின் சுகமும் 
உருக்கிய வெள்ளியை  உரைத்துப்  பூசி 
நறுக்கிப் போட்ட நகமாய் நிலவும்

வெள்ளி நிலவு வீசும் ஒளியும்
அள்ளித் தெறித்த விண்மீன் காசும்
துள்ளும் மனதில் தூண்டில் போட்டு 
அள்ளும்  கவிதை ஆயிரம் கோடி.

தரையைப் பிளக்கும் தளிரின் துணிவும்
கரையில் நாணல் காட்டும் பணிவும்
காட்டு மூங்கில் காட்டும் திமிரும் 
ஊட்டி ரோஜா உதிர்க்கும் சிரிப்பும்

தோட்டக் கட்டில் தூக்கக் கனவும்
வீட்டுத் திண்ணை வெட்டிப் பொழுதும்
தென்னந் தோப்பின் தென்றல் காற்றும்
சன்னல் ஓரம் கிடைத்த சீட்டும்

ஓடும் ரயிலோ டோடும் மரமும்
ஆடும் மயிலின் அழகும் மெல்ல
அசையும் மலையாம் ஆனை நடையும்
இசையும் கூத்தும் ஏழையின் சிரிப்பும் 

கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றும் 
விண்ணைக் கிழித்து வீழும் மழையும்
மண்ணும் விண்ணும் மானும் மீனும்
இன்னும் இன்னும் இன்னும் இன்னும் 

மனதின் கவலைகள் மறக்கச் செய்து
கனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க 
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்.

                                                       -சிவகுமாரன்