வெள்ளி, அக்டோபர் 21, 2016

மரங்கள்


எல்லா மரங்களும்
போதிமரங்களே.
பொல்லா மரங்களென்று 
பூமியில் இல்லை.

மரங்கள்
புத்தனைப் போன்றவை.
அதிகம் ஆசைப்படுவதில்லை .
வேர்நீட்டம் தாண்டி
விருப்பம் வளர்ப்பதில்லை.

மரங்கள்
வரையறுத்து வாழ்கின்றன.
இருக்கும் இடம்விட்டு
எங்கும் பறப்பதில்லை
இரைதேடி.

மரங்கள்
இயேசுவைப் போன்றவை.
ஒருகிளை வெட்டினால்
மறுகிளை காட்டுகின்றன.

மரங்கள்
கீதைக்கும் மேலானவை.
அவை
கடமையச் செய்கின்றன.
நாம்
பலனை அனுபவிக்கின்றோம்.

எல்லாப் புகழும் 
இறைவனுக்கே என்றார் நபிகள்.
எல்லா உறுப்பும் 
மனிதனுக்கே என்கின்றன
மரங்கள்.

மரங்கள்
பொதுவுடைமைவாதிகள்
அகன்ற  மரங்கள்
அணைத்துக் கொள்கின்றன.
பலமற்றக் கொடிகள்
பற்றிக் கொள்கின்றன.

மரங்கள் 
வழிப்போக்கர்களின் 
வசந்த மண்டபங்கள்.
களையெடுக்கும் பெண்களின் 
கைக்குழந்தைக் காப்பகங்கள் .

அழகுப் பிள்ளையாரின் 
அரச மரத்தடி. 
புத்தனின் போதிமரத்தடி
மாணிக்க வாசகரின் 
குருந்த மரந்தடி
எத்தனையோ ஞானிகள்
இருந்த மரத்தடி.
.......……………
ஞானம் பிறப்பித்தவை
மதங்கள் அல்ல.
மரங்களே.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.
வீட்டுப் பிள்ளைகள்
விட்டுப் போனபின்
தோட்டத்து மரங்களே
துணையிருக்கின்றன.

ஈசன் எந்தை இணையடி நிழலே
என்றார் அப்பர்.
வீசும் தென்றல் மரத்தடி நிழலே
என்பேன் நான்.
சிவகுமாரன்