புதன், டிசம்பர் 29, 2010

நானாச்சு நீயாச்சு








மதுரையில் மீனாட்சி- சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில் ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு. ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு. 


தன்னானே தானேதன்னே  தன்னானே தானேதன்னே 
   தன்னானே தானே தன தானா - தன
 தன்னானே தானேதன்னே  தன்னானே தானேதன்னே 
தன்னானே தானே தன தானா

மாரிமுத்து:    
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
   மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே 
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
   ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.

செல்வராணி: 
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்  
   மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே 
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
   ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .

வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல 
   வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய் 
   நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.

பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார் 
  பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த 
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும்  நெஞ்சுக்குள்ள 
  வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.

பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
  பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா  சேந்திருப்போம்
  கும்பிடுற சாமிகளைப் போலே  .


பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
    பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன் 
    சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
        
தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
   தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட 
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்   
   ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?

உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
   ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா 
    கோவணமும் மிச்சமாகி வருமா ?

வேடிக்கையா  கேட்டுப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
    வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி  - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு 
   வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.


சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு 
   சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
   சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா 

குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
    குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா 
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
   சூடுஏறிப் போகுமடி நரம்பு.

ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
    காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
    ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.

உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
   ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா 
   மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?


கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
   கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம 
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு 
    தேர்தலிலே கோபத்தைநீ காமி . 


                                                            -சிவகுமாரன் 


இதய பலகீனமுள்ளவர்கள் கீழே உள்ள குரல் பதிவை கேட்க வேண்டாம்.


  


பின்குறிப்பு:
இந்தக் கவிதை காஷ்யபன் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.




   

      

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

காதல் வெண்பாக்கள் 14


        மண்ணிலா ?

தரையில் இறங்கிவந்த
  தங்கநிலாக் கீற்றே
கரைகாணா இன்பக்
  கடலே - விரைந்தோடி
வாராயோ வான்மதியே
  வந்தென்றென்     வாழ்வோடு
சேராயோ என்னுயிரே
     சொல்.



                                        
     
        வெம்-மைவிழி 

பூதொட்டுப் போகும்
    பொதிகைபூந் தென்றலென 
நீதொட்டுப் போக 
    நினைத்திருந்தேன் - தீதொட்ட 
கைவிரலில் பட்டதொரு 
    காயமென உன்பார்வை 
மைவிழியே பட்டதுஎன் 
            மேல்.    

                                                                                        

புதன், டிசம்பர் 22, 2010

பொம்மை நாமடா (இசைப்பாடல்)


   (பல்லவி)

மேலிருந்து ஆட்டுகிறான் 
பொம்மை நாமடா
அந்த நூலறுந்து 
போனபின்பு 
வாழ்க்கை ஏதடா 
வாழ்க்கை ஏதடா .

  (சரணம்)

வண்டுகளை எதிர்பார்த்து 
மலர் தேனை சுரப்பதில்லை 
தென்றல் வர வில்லையெனில் 
குயில் கூவ மறுப்பதில்லை 

கொக்கரிக்கும் சேவல் கூவி 
விடிவதில்லை பொழுது 
புற்களுக்கு நீர்பாய்ச்சி 
விதைப்பதில்லை உழுது.
அட 
வேரிழந்து போனபின்பும் 
தாங்கி நிற்கும் விழுது.
தாங்கி நிற்கும் விழுது.                             
                                           ......... (மேலிருந்து ) 

என்னுடைய உடம்பு  கூட 
நான் கொண்டு வந்ததில்லை 
என்னைவிட்டு நான் போகும் 
நாள் எனக்குத் தெரிவதில்லை 

வந்தவுடன் உடம்பில் ஒரு
கோவணமும் இல்லை
வெந்து விழும்போது
இந்த உடம்பு கூட தொல்லை 
இதில்
எனதென்றும் உனதென்றும் 
ஏதுமில்லை போடா 
ஏதுமில்லை போடா
                          .                ........( மேலிருந்து ) 



ஞாயிறு, டிசம்பர் 19, 2010

ஹைகூ கோலங்கள் 35




நீளம் தாண்டிப் பழகணும்
கோலம் போட்டிருக்காக
குமரிப் பொண்ணுக






தெருவடைத்த கோலம்
அழிக்க மனமில்லாமல்
அடுத்த நாள் காலை.



                    பூக்கோலம் நடுவே
                    பூத்திருக்கு நிசமாய்
                    பூசணிப் பூ




                                    கோலமிடும் அழகை
                                    கூட்டிக் காட்டுது
                                    கூந்தல் சொட்டு நீர்




               பேகன் வந்தானோ...?
                மார்கழிக் குளிரில்
                மப்ளர் கட்டிய மயில்.









திங்கள், டிசம்பர் 13, 2010

எட்டி உதை


இனிமை இனிமை இந்த வதை 
  இன்னும் நன்றாய் எட்டி உதை
இனிமேல் இல்லை சித்ரவதை
  எப்படிச் சொல்வேன் துன்பமதை ?

கொஞ்சம் நீவர தாமதித்தாய்
  குத்திக் கிழித்தார் வார்த்தைகளால். 
நெஞ்சில் தாய்ப்பால் சுரக்கும்முன்
   நீதான் நெஞ்சில் பால்வார்த்தாய்.

உன்னைப் பெறாது நான்போனால்
  ஊரார் என்னை மலடென்பார் 
என்னை தாயாய் பெற்றதனால்
  எனக்கும் நீதான் தாயன்றோ ?

காய்த்த மரம்தான் கல்லடியால்
  காயம் படுமென சொல்வார்கள்.
காய்க்கவில்லை என்பதனால் 
  காயம் பட்டேன் பலமுறைநான்.


"தள்ளிப் போகா" காரணத்தால்
   தள்ளியே  வைத்தார் உறவெல்லாம்
எள்ளி நகைத்தார் மலடென்றார்
  எதிரே வந்தால் குருடானார்.


அழகாய் குழந்தைகள் கண்டாலே
  அள்ளி அணைக்கத் துடித்தேன்நான் 
குழந்தைக் காகா தெனச் சொல்லி 
  கொடுக்க மறுத்தார் என்னிடத்தில்.


இம்சை அரசி உன் பாட்டி
  இழைத்த கொடுமைக் களவில்லை
வம்சம் தழைக்க வேண்டுமென 
  வரன்கள் பார்த்தார் மறுபடியம்.


மருத்துவம் பார்க்கஉன் அப்பனிடம் 
  மண்டியிட் டழுதேன் பலமுறைநான்  
மறுத்தார் வெறுத்தார் மலடியென்றார் 
  மனமில் லாமலே இற(ர)ங்கி வந்தார்.  


உந்தன் தந்தை உயிரணுவில் 
  ஊட்டம் இல்லை எனச் சொன்னார்
எந்தன் கருப்பை வலுவாக
  இல்லை எனவும் இடி தந்தார்.


சோதனைக் குழாயில் உருவானாய்
  சோதித்து  என்னுள் கருவானாய்
வேதனைப் படிகள் பலதாண்டி 
  விஞ்ஞானத்தின் விளைவானாய்  


சிந்தை குளிர்ந்து  சிலிர்த்துவிட
  செல்லமே கண்ணே எட்டி உதை
எந்தன் அன்னை மலடில்லை
  என்றே சொல்லி எட்டி உதை. 


காளையோ பசுவோ கவலையில்லை 
  களங்கம் தொலைந்தது எட்டி உதை
ஏளனம் செய்தோர் இன்முகத்தில் 
  ஈயா டட்டும் எட்டி உதை.


பேர்சொல்ல பிள்ளை இல்லையெனில் 
  பெண்மட்டும் பொறுப்பிலை என்று உதை.
வாரிசு ஆணுக்கு இல்லையெனில் 
  வைத்தியம் பாரென எட்டி உதை. 


ஆணுக்கு சந்ததி இல்லையெனில் 
  அவனும் மலடென எட்டி உதை.
ஆணோ பெண்ணோ இருவருக்கும் 
  ஆகும் பொறுப்பென எட்டி உதை.


இனிமேல் எல்லாம் இன்ப வதை 
   எப்படி சொல்வேன் இன்பமதை
இனிமை இனிமை இந்த வதை
  இன்னும் நன்றாய் எட்டி உதை.

சனி, டிசம்பர் 11, 2010

பாரதி


பாரதி....
உன்
முறுக்கு மீசையினில் முண்டாசு மடிப்புகளில்
எரிக்கும் விழியிரண்டில் எத்தனை கவிநயங்கள்.

வானத்துச் சூரியனை வரவழைத்துப் பொடியாக்கி - தன்
கானத்தில் கலந்துவிட்ட காவியச் சித்தன் நீ.

ஊருக்குக் கவியெழுதி   உணர்ச்சிகளில் உயிர்வாழ்ந்து 
யாருக்கும் பயமின்றி நடைபோட்ட சிங்கம் நீ.

ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப்  போராடி 
சாகாத கவிபடைத்த  சரித்திர நாயகன் நீ.

மண்ணை அடகுவைத்து  மனதில் கவலையின்றி
விண்ணைத் தொட்டுவிடும் வீணான கதைபேசி

கண்ணை மூடி கனவில் மிதந்தவரை 
எண்ணித் தெளியவைத்த எழுச்சிக்  கவிஞன் நீ.

மன்னனை அவன்வீட்டு மங்கையரின் பேரழகை 
சின்ன வீட்டுப் பெருமைகளை சித்தரித்துக் கவியெழுதி 

பொற்கிழிக்கும் புகழுக்கும் பைந்தமிழின் பெருமையெலாம் 
விற்கத் துணிந்திருந்த வீணர்களின் மத்தியிலே 

காசுக்கு அடிமையாகி கால்பிடித்து வாழாமல் 
தேசத்தின் நலனொன்றே தேவையென எண்ணியவன்.

அலியாய் தமிழனெல்லாம் அவதரித்த காலத்தில் 
புலியாய்ப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் நீ.

ஆண்டாண்டு காலம் அடிமைகளைப் பெற்றுவிட்டு 
மாண்டுவிட எண்ணி மரணத்தின் வாயிலிலே 

தமிழ்த்தாயோ தனைமறந்து தலைசாய்ந்து கிடந்திட்டாள்
உமிழ்ந்திட்டார் அவர்முகத்தில் உலகத்து மாந்தரெலாம்

உனைப்பெற்ற பின்னால்தான் உயிர்பெற்று எழுந்திட்டாள்
எனைவெல்ல எவனிங்கே என்றவளும்   முழங்கிட்டாள்

நீகொடுத்த கவி  குடித்து நிமிர்ந்திட்டாள் தமிழ்ப் பெண்ணாள்
தீயாக சுட்டெரித்தாள் தினவெடுத்த மாந்தர்களை.

தீபறக்கும் நின் கவியைத் தினந்தோறும் படிக்கின்றேன்,
நீபிறந்த இந்நாளில் நின்பாதம்  தொழுகின்றேன்.

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

இந்தாய்யா தாலி

  

















(குடிகாரனும் அவன் மனைவியும்)
            
               ( வெண்பா )

ஏண்டி கடங்காரி எங்கேடி காசுவச்சே
நாண்டி ஒழைச்சிருக்கேன் நாமுழுக்க- தோண்டி
முழியை எடுத்துருவேன் மொத்தமும்  தல்லே
புழிஞ்சு எடுத்துருவேன் போட்டு,

ஒழச்சாக ளாமுல்ல , ஒப்புரான நாந்தேன்
களையெடுத்து சேத்துருக்கேன் காசு - ஒழைக்காம
நீதின்ன சோத்துக்கும் நீபோட்ட தண்ணிக்கும்
பீதின்னப் போகலாம் போ......

அடியே சிறுக்கிமவ ஆரையடி சொன்னே
முடிய புடிச்சிழுத்து மோதி - அடிச்சேநான்
கொன்னு குலையறுத்து கோத்துவச்சு மாட்டிருவேன்
என்ன நெனச்சேடி ஏய்..... .

அடிப்பே தெரியாது, ஆம்பிளைன்னா என்ன
முடிமேல  கொம்பிருக்கோ  முட்ட? - குடிகாரா
ஒன்னால நானும் ஒருசொகமும் காணல்லே
சொன்னாலே வெக்கமய்யா தூ.....

நிறுத்தடி வாயை , நிறுத்தாட்டி தாலி
அறுத்து அனுப்பிருவேன் ஆமா - பொறுத்து
ஒருநிமிஷம் பாப்பேன்டி ஒண்ணும் வரலே
அருவா எடுத்துருவேன் ஆங்.

இந்தாய்யா தாலி, இதவச்சு தண்ணியடி
மொந்தை கணக்கா முழுங்குய்யா - எந்திரிச்சு
ஓடுய்யா, நாந்தேன் உசுரவிட்ட பின்னாடி
பாடுய்யா ஒப்பாரி பாடு.
 
                                                     -சிவகுமாரன்
                                                 (படம் உதவி- தேன்மொழி )
                                                   

புதன், டிசம்பர் 01, 2010

ஆலைக் "குரல்" 15




பாதுகாப்புப் பயிற்சி பயிலாதான் உயிருக்கு
ஏது காப்பு இயம்பு.                                                                          1.

ஆலைக்குள் பாதுகாப்பு அவசியம்- இல்லையேல்
வேலைகள் எல்லாமே வீண்.                                                    2.

காலணி தலைக்கவசம் கண்ணாடி இம்முன்றும்
ஆளைக் காக்கும் அரண்.                                                             3 .

காரமும் அமிலமும் கையாளும் இடத்தில்
வீரத்தைக் காட்டாதே வீணாய்.                                                4 .

உயரத்தில் பணியா? உறுதிசெய் பாதுகாப்பை.
துயரின்றி தொழிலை துவக்கு.                                                  5 .


கருகும் வாசனை  நுகர்ந்தால் கவனி.
அருகே எங்கோ ஆபத்து.                                                              6.

ஈரத்தில் மின்கசிவு இருந்தால் நிச்சயம்
தூரத்தில் இல்லை துயர்.                                                               7 .

குப்பையும் கூளமும் குடிகொண்ட ஆலைக்குள்
எப்படி விலகும் இருள்?                                                                  8 
.
வழுக்கும் தரையும் ஒழுகும் குழாயும்
இழுக்கு ஆலைக்கு  என்றும்.                                                         9

தூசியும் கழிவும் துளிகூட  தேங்காத
மாசில்லா ஆலையாய் மாற்று.                                                  10 
.
தரத்தின் விதிகளைத் தளர்த்தாதே - அதுநம் 
வரத்தைக் கெடுக்கும் வழி.                                                            11     
 (வரம்- Boon)  (வரத்து - Income)


ஒன்றாய்க் கூடி உழைத்தே இலக்கை 
வென்று காட்டுவோம் வா.                                                             12   


கூட்டு உழைப்பே திறவுகோல் - அதுவரை 
பூட்டிக் கிடக்கும் புகழ்.                                                                      13.

சொற்புத்தி சுயபுத்தி இல்லாதான் பணியாலே
உற்பத்தி பெருகுமோ உரை.                                                           14  

அலட்சியம் சோம்பல் அறியாமை இம்மூன்றும் 
இலட்சியப் பாதைக்கு இடர்                                                             15 .




(Slogan என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் தெரிந்தால் யாரேனும் சொல்லுங்களேன். )    

ஞாயிறு, நவம்பர் 28, 2010

உயர....உயர....



நான்
ஊர்க்குருவி தான்.
நான்
உயரப் பறப்பதில் 
கொஞ்சம் 
உயரப் பார்ப்பதில்
என்ன தவறு ?

நான்
பறக்கும் போது மட்டும்
உங்கள் 
பார்வையில் ஏன் 
ஓர் இனம்புரியாத
இளக்காரம்?

நீங்கள் சொல்லலாம்
" உயர உயரப் பறந்தாலும்....."
என்று.
ஆனால் நண்பர்களே
எனக்கும் சிறகுகள் இருக்கிறதே,

பரந்து விரிந்த வானம்
பருந்துகளுக்குத் தானென்றால்
சின்னஞ்சிறு குருவி எனக்கு
சிறகுகள் எதற்கு ?

என் மேனியில் 
முளைத்த சிறகுகள் 
முடங்கிவிடக் கூடாதே 
என்பதற்காக நான்
பறந்து பார்க்கிறேன்
நீங்கள் ஏன்
பருந்து பார்க்கிறீர்கள் ?

தவறு 
நான் பறப்பதில் அல்ல.
நீங்கள்
பார்ப்பதில் தான்.

ஒன்றைப் 
புரிந்து கொள்ளுங்கள்.
நான் ஒருபோதும்
பருந்தாக வேண்டியதில்லை
ஆனால் நிச்சயம்
பறந்தாக வேண்டுமே.

                             --சிவகுமாரன் 


.


வியாழன், நவம்பர் 25, 2010

காதல் வெண்பாக்கள் 12

                    
                                             உருபு மயக்கம் 
                                      ஆரஞ்சுத் தேன்சுளையா !
   அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
  கோவையா- யார்தான் 
பவளத்தைக் கீறிவைத்தார்
   பார்ப்போம் ! அடடா
                                       அவளின் இதழா
                                              அவை.


       மாது மயக்கம் 
அதுவென்ன உன்விழிக்குள்
  ஆளை இழுக்கும்
மதுக்கிண்ணப் போதை
  மயக்கம் ? - எதுக்கும்
தனியாகச் செல்லாதே
   தேனில் திராட்சைக்
கனியாகத் தோன்றும்உன்
      கண்.



திங்கள், நவம்பர் 22, 2010

வளர்சிதை மாற்றங்கள்

வருடக் கடைசியில்
காலண்டரை
கழற்றும் போதுதான்
தெரிகிறது,
"இவ்வளவு
வெள்ளையாகவா இருந்தது
என் வீட்டுச் சுவர்?"


ஒவ்வொரு நாளும் நான்
உருமாறிக் கொண்டுதான்
இருக்கிறேன்.
அடிக்கடி
கண்ணாடி பார்ப்பதால்
என் தேகமாற்றம்
எனக்குத் தெரியாமலே
போய்விடுகிறது.

கண்கள் ஒன்று போலத்தான்,
பார்வைகள்தான் பலவிதம்.
எடை குறைக்க
நடைபயிலச் சொன்னார்
மருத்துவர்.
எத்தனை கிலோ ஏறினாலும்
இளைத்துப் போயிருப்பதாகத் தான்
சொல்வாள் அம்மா.

கிளைகளை பலரும்
கிள்ளி விடுவதால்
என்னில்
வேர்கள் மட்டுமே
வளர்ந்து கொண்டிருக்கின்றன.

வளர்ச்சி என்பது
இங்கு
கிளைகளைக் கொண்டே
கணக்கிடப் படுவதால்
நான் இன்னும்
அரைகுறையாகவே
காட்சி தருகிறேன்.

பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?
                         
                           - சிவகுமாரன்