வியாழன், மே 19, 2011

வாராதோ அந்த நாட்கள்


ஆற்று மணல்வெளியில்
  அழகாய் வீடுகட்டி
  ஆடித் திரிந்த நாட்கள்.
மாற்றான் தோட்டத்திலே
  மாங்காய் பறித்துவிட்டு
  மாட்டித் தவித்த நாட்கள்.

மரத்தில் கயிறு கட்டி
  அமர்ந்து ஊஞ்சலாடி
  மகிழ்ந்து இருந்த நாட்கள்.
அறுந்து கீழ்விழுந்து
   அடிகள் தாங்கிக் கொண்டும் 
  ஆடி மகிழ்ந்த நாட்கள்

திண்ணை மீதமர்ந்து
  சின்னஞ்சிறு கதைகள்
  சொல்லி மகிழ்ந்த நாட்கள்
கண்ணை கருந்துணியால்
  கட்டி மற்றவரை
  கண்டு பிடித்த நாட்கள்.

பைக்குள் பம்பரத்தை 
  பதுக்கி வைத்துக் கொண்டு 
  பள்ளி சென்ற நாட்கள்.
சைக்கிள் டயர் கிடைத்தால் 
  "பைக்"கே கிடைத்ததென 
    உருட்டி மகிழ்ந்த நாட்கள்.

சிகரெட் அட்டைகளை 
  கரன்சி நோட்டுகளாய்
  சேர்த்து மகிழ்ந்த நாட்கள்
தகர டின் முழுக்க 
  பளிங்கு கோலிக்குண்டு
  போட்டு வைத்த நாட்கள்   

  
மன்னன் மந்திரியாய்
  பள்ளி மேடையிலே  
  மாறி நடித்த நாட்கள்
வண்ணப் பட்டம் செய்து
  வாலும் காலும் வைத்து
  வானைத் தொட்ட நாட்கள்.

அடுத்த தெருப்பசங்க 
   அணியை கபடியினில் 
    அடித்துத் துவைத்த நாட்கள்.
கிடைத்த வெற்றியினில் 
   கிறுக்குப் பிடித்துத் தலை 
    கனத்துத் திரிந்த   நாட்கள்.

கொட்டும் மழை நடுவே
  குளிரில் நடுங்கிக் கொண்டு
  குதித்து மகிழ்ந்த நாட்கள்.
திட்டும் செம அடியும்
  சேர்த்து வாங்கிக் கொண்டு
  துடைத்துப் போட்ட நாட்கள்.

வீட்டுக் கவலையின்றி
  வேலை ஏதுமின்றி -விளை
   யாடித் திரிந்த நாட்கள்
ஆட்டம் போட்டுவிட்டு
  அன்னை மடிதனிலே
  அயர்ந்து படுத்த நாட்கள்.

சின்னஞ் சிறு வயதில்
  எந்தத் துயருமின்றி
  சிரித்துப் பறந்த நாட்கள்.
என்ன இனிமை அவை
  என்ன இனிமை அவை
   எங்கே அந்த நாட்கள்.

                              -சிவகுமாரன்

வெள்ளி, மே 06, 2011

ஹைக்கூ கல்லூரி 45

போகட்டும் விடு 
அடுத்த பஸ்ஸில் ஏறலாம்
கூட்டமேயில்லை .

பூக்கள் வேண்டாம்
பூஜைக்குப் பறித்துக் கொள்
அவளுக்கு லீவு

டக்கர் பிகரு
சைட் அடிக்க முடியாமல் ...
லேடி கான்ஸ்டபிள் .

அவளின் ரிங்டோன் 
இடைஞ்சலாய் 
அப்பாவின் குறட்டை.

பைக் இல்லை செல் இல்லை
பழக  ஒரு பிகர் இல்லை 
பாழாய்ப் போக,,, கல்லூரி.



ஞாயிறு, மே 01, 2011

மே... வெண்பாக்கள்


மெய்யாலும்ம்ம்ம்ம்ம்..மே


உழைப்பே உயர்வா ? 
  உளறல் ! பிதற்றல்!
பிழைக்கத் தெரியாதோர் 
  பேச்சு - உழைக்காமல் 
முன்னேறிக் காட்டலாம்.
   முன்னேற்றக் கட்சியில் 
என்னோடு  இணையுங்கள்  
   இன்று. 



   
  ம்ம்ம்ம்ம்ம்மே . ....


உழைத்துக் களைத்தோரே
   ஓடோடி வாரீர் !
அழைக்கின்றார் நம்தலைவர் 
  அன்பாய் -  உழைப்போரின்
வாழ்வை வளமாக்க 
  வாரி வழங்குவீர் !
ஏழ்மை ஒழிப்பு நிதி 
   இன்று. 
  


                                                  -சிவகுமாரன்