கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 14, 2025

சீட்டுக்கவி


ஈரேழு உலகிலும் இணையேதும் இல்லாத 
  இன்மொழித் தமிழ்க் காதலன். 
  எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது 
  இயங்கிடும் கொள்கை வெறியன் 
தீராத தமிழ்மோகத் தீயினை நெஞ்சுக்குள் 
  தேக்கிவைத் தலையும் கிறுக்கன் 
  தீந்தமிழ் கவியன்றி செல்வங்கள் ஏதையும் 
  சேர்த்துவைக் காத மூடன்
சீராக கவிசொல்லி சிந்தையை மயக்கிடும் 
   சிவகுமாரன் விடுக்கும் ஓலை.
   செந்தமிழ் கவிதைக்கு செவிசாய்த்து மகிழ்ந்திடும்
   செல்வந்த நண்ப காண்க.
பாராட்டுப் பெற்றபல கவிதைகள் பழசாகி 
   பரண் தூங்கும் நிலைமாறவே 
   பலநூறு படிகொண்ட நூலாக்கி பல்லோரும்
   படித்திட வழி செய்கவே. 


                                                                            சிவகுமாரன் 


செவ்வாய், ஆகஸ்ட் 27, 2024

காதல் மனையாள்




அவளெந்தன் காதல் மனையாள்
    ஐம்பதைத் தாண்டும் இணையாள்
தவறேதும் செய்தி டாமல்
   தண்டனை பெற்ற வினையாள்
கவலைகள் மறைத்துச் சிரிக்கும் 
   கலையினைக் கற்ற துணையாள் .
சிவனவன் அருளால் எதையும்
   சிரிப்புடன் கடக்க முனைவாள்.

பிறந்தநாள் கேடா என்பாள்
   பிறந்தென்ன கண்டேன் என்பாள்
பிறந்ததால் என்னைக் கண்டாய்
   பேறென்ன வேண்டும் என்பேன்
இறந்திட வேண்டும் என்பாள்
   இருக்கிறேன் உனக்காய் என்பேன்.
சிறந்ததோர் வாழ்க்கை தன்னை
   சீக்கிரம் காண்பாய் என்பேன்.

பட்டமேற் படிப்பு கற்று
   பலனென்ன கண்டேன் என்பாள்
பட்டறிவு தன்னைப் பிள்ளை
   பெற்றதே உன்னால் என்பேன்
நட்டமே என்வாழ் வென்பாள்
   நானுந்தன் இலாபம் என்பேன்
கட்டளை இட்டால் போதும்
   கைகட்டிச் செய்வேன் என்பேன் .

நரம்பினில் சக்தி இல்லை
  நடையினில் துள்ளல் இல்லை
கரம்பற்றி வந்த நாளாய்
    கவலைக்குப் பஞ்சம் இல்லை.
வரம்புக்குள் விதித்த நாட்கள்
   வாழ்ந்தென்ன ஆவதென்பாள்
வரம்வாங்கிப் பெற்ற பிள்ளை
   வெல்வதைக் காண வென்பேன்.

நோயுடன் தினம்போ ராட்டம்.
  நொடிக்குநொடி மனதில் மாற்றம்.
ஆயுள் இனி போதும் என்னும்
   அலுப்புடன் பேச்சில் வாட்டம்
ஓயுமோ தேக்கி வைத்த
   உள்ளத்தின் ஆசை ஓட்டம்
தாயுள்ளம் மட்டும் தானே
   தாங்கிடும் விதியின் ஆட்டம் .

இன்னும் சில கடமை உண்டு
   இறையருள் கொஞ்சம் உண்டு
முன்னே நாம் கண்ட தெல்லாம்
  முடிந்தவை முடிந்து போக,
பின்வரும் நாட்களில் நாம்
  பிடித்ததைச் செய்து வாழ்வோம்
அன்பிற்கு பஞ்சம் இல்லை.
  அதுவரை ஆயுள் காப்போம்.

              பிறந்த நாள்
              வாழ்த்துகள்
                 அன்பே .
        Have a Blessed Birthday 
                    25.08.2024

புதன், மார்ச் 16, 2022

கேட்பாரில்லா கீதாஞ்சலி












சலனமற்று 
ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 
உருட்டிச் சிதைத்த 
கூழாங்கற்களின் 
குரலை அமுக்கி. 

விண்முட்ட பறக்கிறது 
வெண்ணிறக் கொடி . 
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில். 

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு 
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
 ஒரு வனத்தையே எரிக்கும் 
வன்மத்துடன். 

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின் 
வேகவேகமாய் 
புனரமைப்பு வேலைகள். 
பறவைக்கூட்டில்
பாம்புகளைக் குடியேற்ற.

கிளிகளும் குயில்களும் 
கீதாஞ்சலி இசைக்கின்றன. 
கேட்பாரற்றும் 
கிளைகளற்றும்! 

ஒப்பாரிப் பாடலில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது. 
ஓர் அறைகூவல். 
                                                      -சிவகுமாரன்


திங்கள், அக்டோபர் 04, 2021

இ(னி)ணைய நினைவுகள்.

னிணைய நினைவுகள் .















நினைவுகளாகிப்
போகிறார்கள்
மனிதர்கள்.
இருந்தும்
இறந்தும்.

இனிய நினைவுகள்
இணைய நினைவுகளாய்
மாறி விட்டன

காலப்போக்கில்....
என்றிருந்தது
கணத்தில்....
என்றாகி விடுகிறது
இப்போதெல்லாம்.

அறிவியல் வளர்ச்சியில்
மாயப் பிம்பங்களாய்
மனிதர்கள்.
ஐம்புலன்களின்
அனுபவங்களை
அலைபேசி எனும்
மாயப் புலன்களால்
பரிமாறிக் கொள்கிறார்கள்.

தனித்தனித்
தீவுகளாய்
இதயங்கள்.
இணைத்து வைப்பதாய்
இறுமாப்பு கொள்கிறது
இணையம்.

கறிச்சுவை
தருமோ
இணையச் சுரைக்காய்.??!!

                        
                                  - சிவகுமாரன்

ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

கெட்டிக்காரன் புளுகு




திட்டமிடப்பட்டு
கட்டமைக்கப்பட்ட
பொய்கள்
அரியணை ஏறி
அதிகாரம் செய்கின்றன.

முச்சந்தியில் வைத்து
முகத்திரை கிழித்து
போட்டு உடைக்காத வரை
எட்டு நாளைக்கு அல்ல
இருபது வருடமானாலும்
இற்றுப் போவதில்லை
கெட்டிக்காரன் புளுகு.

         -சிவகுமாரன்

வெள்ளி, அக்டோபர் 16, 2020

காட்டுக்குள்ளே

            
                (காவடிச் சிந்து)

ஓங்கி உயர்ந்து நிற்கும் காடு- அதன்
  உள்ளே சிறியதொரு   வீடு - நீர்
தேங்கிடும் குளத்தருகே
  துள்ளித்துள்ளி மானினங்கள்
  ஓடும்-விளை-யாடும்.

அன்னை நிலத்தின் வளைக் கரங்கள்-போல
  அங்கே வளர்ந்திருக்கும் மரங்கள் -அதன்
சின்ன இலை நடுவே
  சிந்தும் பனித்துளிகள்
  இறங்கும்-வந்து-உறங்கும்.

காய்ந்த இலை மேலிருந்து உதிரும்-சிறு
  காற்றடித்தால் பூமரங்கள் அதிரும்-நீர்
பாய்ந்துவரும் ஒடையினில்
  பால்நிலவும் சூரியனின்
  கதிரும்-பட்டுச்- சிதறும்.

கொட்டும் மழை போன்றதொரு ஊற்றும்-உடல்
  தொட்டுச் செல்லும் தென்பொதிகைக் காற்றும்-தேன்
சொட்டும்பல கீதங்களை
  சொல்லுமொரு பூங்குயிலின்
  பாட்டும்- சுவை- கூட்டும்.

நாட்டுக்குள்ளே பேய்கள் பல கோடி- அவை
  நம்மைத் துரத்தும் முன்னே ஓடி -அந்தக்
காட்டுக்குள்ளே வீடுகட்டி
  காலம் கழித்து வந்தால்
  தொல்லை-ஏதும்-இல்லை.

                                                               -சிவகுமாரன்.




இது ஒரு மீள் மீள்பதிவு. இந்தக் கவிதை 1986 ஆம் ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் போது எழுதி என் தமிழ் அய்யா திரு.மாரிமுத்து அவர்களால் பாராட்டப் பெற்றது.
34 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையில் இந்தக் கவிதைக் கனவு பலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆப்பிரிக்காவின் காட்டுக்குள் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடி இருக்கிறேன்.:) )