புதன், ஜூன் 29, 2011

உறக்கம்
இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ?
நன்றாக உறங்கியபின் "நான்"  இருப்பேனா ?
தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும் 
ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்? 

உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ?
இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?  
கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ?


விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?


இச்சை எல்லாம் உறக்கத்தில் தீர்ந்து விடுவதேன் ?
மிச்சமெனில் மறுநாளில் சேர்ந்து வருவதேன் ?
அச்சமூட்டும் கனவு வந்தால் அதிர்ந்து எழுவதேன் ?
நிச்சயமாய் இன்பமெனில் நீண்டு விடுவதேன் ?


சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.
சக மனித தொந்தரவு , சஞ்சலம் எல்லாம்
புக முடியா தனியுலகம் கனவுலகம் தான்.


நாட்டை ஆளும் மன்னனாக நாமிருக்கலாம்
கோட்டை கட்டி படை நடத்தி கொடியை நாட்டலாம்
வீட்டை விட்டு சுதந்திரமாய் வெளியில் சுற்றலாம்
காட்டினுள்ளே தவமியற்றி கடவுள் தேடலாம் .


எழச்சொல்லி கவிஎழுதி என்ன கண்டேன் நான் ?
அழச்செய்யும் அவலங்கள் நாட்டில் இருக்க ?
விழச்சொல்ல வில்லை நான். எல்லாம் காலச்
சுழற்சியிலே மாறிவிடும் , அதனால் நன்றாய்


உறங்கிடுவீர் உறங்கிடுவீர் உலகத்தீரே
இறங்கிடுவீர் இன்பமெனும் சுரங்கத்துள்ளே
அரங்கனவன் உறக்கத்தை அறிதுயில் என்பார்.
வரங்கொடுக்கும் அவனைமுதல் விழிக்கச் சொல்வோம் .( அப்பாத்துரையின் நசிகேத வெண்பாவில் . அஜாதசத்ரு-பாலயோகியின் உறக்கம் பற்றிய உரையாடலைப் படித்த போது தோன்றிய கவிதை இது . அப்பாஜி எழுதியது தத்துவம் . நான் எழுதுவது வெத்துவம்)  
                                                                                                                                                           -சிவகுமாரன் 

என்  கவிதைகளின் ரசிகர் , என் பெரும்பேறு , சுப்புத் தாத்தாவின் குரலில் , கேட்டு மகிழுங்கள். 
திங்கள், ஜூன் 20, 2011

இனி உனக்காகபோர்முனையில் புறமுதுகு காட்டா வீரன்
மார்புதனில் வேல்பாய்ந்து மாண்டு போனான் .


பீடுநடை போட்டவனை பிணமாய்த் தூக்கி
வீடுதனில் கூடத்தில் கிடத்தி  வைத்தார் .


கண்ணெதிரே பிணமாக .. கட்டியவன்.
பெண்ணவளோ சிலையாக நின்றிருந்தாள்.


மண்ணதிர விழவில்லை , மயங்கவில்லை
சின்னதொரு சலனமில்லை , தேம்பவில்லை .


காலமெல்லாம் படப்போகும் கொடுமை எண்ணி
ஓலமிட்டு  குரலெழுப்பி அழவுமில்லை 


நிலைகுத்திப் போன அவள் விழிகள் பார்த்து
குலைநடுங்கிப் போனார்கள் உறவினர்கள்


கொஞ்சமேனும் குரலெழுப்ப வில்லையெனில்
நெஞ்சமது வெடித்துவிடும் ! மாண்டு போவாய் .


அழுதுவிடு, அழுதுவிடு அவலம் சொல்லி
கழுவிவிடு கவலைகளை கண்ணீர் கொண்டு.


பேச்சின்றி பேய்போல் நீ விழித்திருந்தால்
மூச்சடைத்துப் போவாயே முட்டாள் பெண்ணே .


எவ்வளவோ எல்லோரும் சொன்னார், ஆனால்
அவ்வளவும் அவள் காதில் விழவேயில்லை.


இறந்தவனின் பெருமைகளை ஒருத்தி சொன்னாள்
மறந்துபோன நினைவெல்லாம் வரட்டும் என்று.


உண்மையான வீரனவன் போர்முனையில் .
மென்மையான மனம் கொண்ட மனிதனவன்.


சிப்பாய் தான் ஆனாலும் சிரித்த முகம்
எப்போதும் பழகுதற்கு இனிய குணம்.


இப்படியாய் இறந்தவனின் பெருமைகளை
ஒப்பாரிப் பாட்டில் அவள் ஒப்புவித்தாள்.


கொஞ்சமேனும் அவள்முகத்தில் சலனமில்லை
நெஞ்சமென்ன கல்லாகிப் போனதுவோ ?


சேடிப்பெண் மெதுவாக எழுந்து வந்தாள்
மூடிவைத்த முகத்துணியை விலக்கி வைத்தாள்.


வீறிட்டுக் கிளம்பியது ஓலமெங்கும்.
ஏறிட்டும் பார்க்கவில்லை அவள் எதையும் .


தொண்ணூறு வயதான பெண்ணொருத்தி
முன்னொரு நாள் தாதியவள். எழுந்து  வந்தாள்


தவழ்ந்துவந்த அவன்பிள்ளை தன்னைத் தூக்கி
இவள்மடியில் போட்டுவிட்டு எங்கோ போனாள்.


கோடையிடி போல இவள்  குரலெழுப்பி
வீடதிர விண்ணதிர கத்தித் தீர்த்தாள்.


அய்யோ..... ! என் செல்லமே நான் என்ன செய்வேன்
பொய்யாகிப் போனதடா வாழ்க்கை இனி .


சிந்தையை  நான் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்
தந்தையின்றி உனை வளர்த்து காட்ட வேண்டும்.


எனக்கென்று ஏதுமில்லை வாழ்வில் பாக்கி.
உனக்காக வாழ்ந்திருப்பேன் உயிரைத் தேக்கி.

                                                              -சிவகுமாரன்
                                                                                                                                      

(நேற்று ஓர் ஆங்கிலக் கவிதையை படித்தவுடன் , அதை மொழிபெயர்க்கத் தோன்றியது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் , நான் கண்ட, என்னைப் பாதித்த  நிகழ்வினை அடிப்படையாய்க் கொண்டு, இக்கவிதையை எழுதினேன்.
மூலக் கவிதையை  சிதைக்காமல் எழுதி இருக்கிறேனா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது என் கன்னி முயற்சி. )  


மூலக் கவிதை 


Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.
Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.
Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee

                 -Alfred Lord Tennysonவெள்ளி, ஜூன் 17, 2011

காதல் வெண்பாக்கள் 20


          கதி 

பேசிச் சிரித்து
   பெருங்காதல் தூண்டிலிட்டு
ஆசை மனதை
   அபகரித்தாய் - வீசிச்
சுழற்றும் விழியில்
   சுடர்காட்டி உள்ளம்
கழற்றினாய் நீயே
         கதி.


            விதி 
ஆவி துடிக்குதடி 
   ஆருயிரே நீயின்றி.
பாவி எனைக்கொஞ்சம் 
   பாரடி - தாவிக் 
குதித்துத் திரிந்தவனைக் 
   கூப்பிட்டுக் காதல் 
விதிக்குள் விழவைத்தாய் 
             நீ.         


ஞாயிறு, ஜூன் 05, 2011

உள்ளம் குப்பையடி


(தோட்டி துரைச்சாமியும், அவன் மனைவி மாரியம்மாளும் )    

மாரியம்மாள்:
ஊரைப் பெருக்கி தினம் கூட்டி- உடல்
  வருத்திக் குப்பை வண்டி ஓட்டி-நாம் 
யாரை சுத்தம் செய்தோம் மாமா - இங்கு 
  எதிலும் சுத்தம் பார்த்தோமா ?

துரைச்சாமி:
வாழும் இடத்தில் சுத்தம் வேணும் - வாய்
  வார்த்தை தனிலும் சுத்தம் வேணும் 
பாழும் நாட்டில் இந்த சுத்தம் 
  பாழாய்ப் போனதடி பெண்ணே

மாரி:
சுத்தம் சோறு   போடும்   என்று 
  சூடாய்  வாய் கிழிய பேசி 
சத்தம் போடும் இந்த மனிதர் 
  சுத்தம் என்னவென்றே அறியார் 

துரை:
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வார் 
  வீதி பெருக்க நம்மை சொல்வார் 
நாட்டில் அரசியலில் வீசும் - துர்
  நாற்றம் மறப்பாரடி பெண்ணே 

மாரி:
இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார் -தவறு 
  இருந்தால் நம்மைத் திட்டிச் செல்வார்
நடத்தை சுத்தம் கெட்ட மனிதர் - இந்த
  நாட்டில் இருப்பதை அவர் அறியார்

துரை:
லஞ்சப் பணத்தில் தினம் குளித்து - பல 
  லட்சம் திருடும் அதிகாரி 
நெஞ்சம் அசுத்தமடி பெண்ணே - அவன் 
  வேட்டி வெண்மையடி கண்ணே 

மாரி:
அழுக்குப் பணத்தில் அவன் பிழைத்து 
  அழகாய் திரிவதென்ன மச்சான் 
உழைத்துப் பிழைக்கும் நம் கூட்டம் - தம் 
  உடைகள் நாறுவதேன் மச்சான்? 

துரை:
வெள்ளை  வேட்டி தினம் கட்டி- பொய்
  வேடம் புரியும் அந்த மனிதன் 
உள்ளம் குப்பையடி மானே - அவன் 
  ஊரில் பெரிய புள்ளி தானே 

மாரி:
கூவம் நதிக் கரையில் கூட  
  குடலைப் புரட்டும் நாற்றமில்லை  
பாவம் பிறக்கும் சட்ட மன்றம் 
  பார்த்தால் நாறுவது ஏனோ? 

துரை:
அப்பா வேண்டாம் அந்த வம்பு - நமக்கு
  அரசியல் பேச ஏது தெம்பு?
குப்பை வண்டியோடு சேர்த்து - நம்மை
  கொளுத்தி எரித்திடுவார் பெண்ணே