திங்கள், அக்டோபர் 27, 2014

நானும் என் கவிதைகளும்


நான்

உச்சிமலை மீதிருந்து
  ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி.

காடுமலை மேடுகளைக் 
  கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
  உடைத்துவரும் பெருவெள்ளம்.

காரிருளைக்  கதிர்வீசி
  கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
  சுற்றிவரும் வான்மேகம்.

பாலைவனப் பெரும்புழுதி
  கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச்  சுகந்தங்கள்
  சுமந்துவரும் இளந்தென்றல்.

பார்த்தவற்றைக்  கவிதைக்குள்
  பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
  வரங்கேட்கும் கவிச்சித்தன்.

என் கவிதைகள் 


உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு 
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற 
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.

வீறிட்டு வெளிக்கிளம்பி 
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .

பொங்கிவரும் அலைநடுவே 
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத 
  காலாவதி பழஞ்சரக்கு 
அடைகாக்க முடியாத 
  ஆனையிட்ட பெருமுட்டை.

வர்ணங்கள் வெளுத்திட்ட 
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன 
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற் கடகு வைக்க 
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்
-சிவகுமாரன்

26.10.14 அன்று மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில், பதிவர்கள் சுய அறிமுக நேரத்தின் போது , நான் வாசித்த கவிதை.


அய்யா கரந்தை ஜெயக்குமார் , முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோருடன் - பதிவர் விழாவில்


திங்கள், அக்டோபர் 20, 2014

பிள்ளைக் குறள் 20


கண்டு பிடிப்பாய்! கடவுள் பெருங்கருணை
உண்டு முழுதாய் உனக்கு
.                     
உனக்கென்ற ஒன்றை உனையன்றி யாரும்
தனக்கென்று சொல்லத் தகாது.

தகாத பழக்கங்கள் தன்னுடைய வாழ்வில்
புகாமல் கவனித்துப் போ.

போனதை எண்ணி புலம்பாதே! சாதிக்க
வானளவு வாய்ப்புண்டு வா.

வாவென்றால் முன்னின்று வாய்பொத்தி நிற்காதோ!
நீவென்ற பின்னே நிதி.

நிதிக்கு உலகில் நிகருண்டு! உந்தன்
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.

மாற்றம் பிறக்கும்! மனதில் துணிவிருந்தால்
வேற்றாய் மலரும் விதி.

விதியை எதிர்கொள்ளும் வீரம் இருந்தால்
எதிர்க்க எவருண்டு இங்கு.

இங்குனக்கு ஆண்டவன் ஈந்ததை நீபிறர்க்கு
தங்கு தடையின்றி தா.

தாராளம் காட்டிடு தர்மச் செயல்களில்!
ஏராளம் காட்டும் இறை.                                                                 20

                                                                                                                                      தொடரும்....

சிவகுமாரன்
திங்கள், அக்டோபர் 13, 2014

பிள்ளைக் குறள் 10


தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!
ஊரே வியக்கும் உனை.

உனைவெல்ல  இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.

நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.

சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.

கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.

தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!

கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.

புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.

தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.

இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு.                            10.

                                                                                      தொடரும்.....
-சிவகுமாரன்


அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை.  விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான  மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக  ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, இன்னும் எழுதிக் கொண்டே---யிருக்கிற  குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள்.  என்  மகனைப் போன்ற, இளமையில்  பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.