ஞாயிறு, மார்ச் 13, 2016

மயிலைத் தேடிய மழைநீயிருந்து பெய்தமழை 
   நேற்று வந்தது-இங்கு
   நீயில்லாமல் என்னைக்கண்டு 
   திகைத்து நின்றது.

வாயில்வரை வந்துபின்னே 
   வரமறுத்தது-என்
   வாசல்சன்னல் கதவுடைத்து 
   வேகங்கொண்டது

கோயிலுக்குள் சிலையைத் தேடி 
    கோபம் கொண்டது-தன்
    கோபம்காட்ட வீதியெங்கும் 
    கொட்டித் தீர்த்தது.

போயிருக்கும் மழைமீண்டும் 
    தேடிவந்திடில்- என்ன
    பொய்யுரைத்து நான்பிழைப்பேன் 
    பெண்மயிலே சொல்.
சிவகுமாரன்
13.03.16
                 

செவ்வாய், மார்ச் 08, 2016

என்ன எண்ண ?


என்ன என்ன  என்று
எண்ண எண்ண
எண்ணிக்கையற்றுப்
போகிறது
இன்னும் இன்னும்
எண்ண எண்ண !

கூட்டலில் பெருக்கலில்
குறைந்து போகிறது
வகுத்தலில் கழித்தலில்
வளர்ந்து வருகிறது .

எண்ண எண்ண
எண்ண முடியவில்லை
எத்தனை என்று

எண்ண எண்ண
எண்ண முடியவில்லை
எது சரி என்று 

எண்ணிலடங்கா
எண்ணங்கள்
நிலைகொள்வது என்னவோ
சூன்யத்தில் தான்.

எண்ணில் அடங்கினாலும்
என்னில் அடங்காதவை .
என்னில் அடங்கினாலும்
எண்ண அடங்காதவை .

ஒருநாள் வரும்,
எண்ணக் குப்பைகளை
எரித்த சாம்பலில்
உயிர்த்தெழுவேன்
எண்ணங்களற்று.
சிவகுமாரன்