புதன், நவம்பர் 23, 2011

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 3

நதிநீர் வடிந்தபின்
  நாணலைக் கொல்லும்
விதியே உனது
  வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
  தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
  கரை.


கரைதேடி வந்த
  கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
  இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
  மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்  
  மீண்டு,


2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)

ஞாயிறு, நவம்பர் 13, 2011

மேகங்கள்


வெண்ணிலா மீனவன் 
  விண்ணகக் கடலில்
விண்-மீன் பிடிக்க 
  வீசிய வலைகள்.

நிலவுத் தலைவி
  நந்த வனத்தில்
உலவச் செல்லும்
  வெள்ளித் தேர்கள்.

வான அடுப்பில்
  விறகு தீர்ந்து
போனதால் எழுந்த  
  புகைமண் டலங்கள்.


 நிலவுக் குழந்தை 
   நீண்ட நேரமாய்
அழுததி னாலே
  அன்னை வானம்,

வாங்கிக் கொடுத்த
  பஞ்சுமிட் டாய்கள்.
தூங்கும் நிலவின்
  தொட்டில் மெத்தைகள்.

விண்ணக  வீட்டின்
  விரிந்த கூரையில்
வெண்ணிலாச் சிலந்தி
  பின்னிய வலைகள்.

மண்ணின் மார்பாம்
  மலையை மூட
அன்னை வானம்
  அளித்த தாவணி.

கன்னி நிலாவை
  காவல் காக்கும் 
விண்ணக வீட்டின்
  சன்னல் திரைகள்.

நிலவது கடலில்
  நீந்திக் குளிக்க
விலக்கி எறிந்த
  வெண்ணிற ஆடைகள்.

காற்றுத் தூரிகை
  எடுத்த வானம்
போட்டுப் பார்த்த
  பொன்னிற ஓவியம்.

மிதக்கும் தோணிகள்
  மின்னல் தோழிகள்
விதவை  வானின்
  வெள்ளைச்  சேலைகள்.

புவியை வானை
  புதிராய்க் காணும்,
கவிஞன் எந்தன்
  கண்ணுக்கு அவையோ 

தாகம் தீர்க்கும் 
  தமிழே என்பேன் 
மேகம் என்றே 
  மொழிவர் மூடர்.
                              
                                                      -சிவகுமாரன் 

( என் பன்னிரண்டாம் வகுப்பு பருவத்தில் எழுதி " நீதான் எழுதியதா" என்று என் தமிழாசிரியரை ஆச்சரியப்பட வைத்த கவிதை ) 

புதன், நவம்பர் 09, 2011

காதல் வெண்பாக்கள் 24

        விருந்து  

உந்தன் விழியிரண்டும்
  ஒர்கோடி பண்சொல்ல  
சிந்தும் கவிதை
  சிறப்பாகும் - எந்தன்
புலமைப் பெரும்பசிக்கு
  பேய்த்தீனி போடும்
நிலவுக்கு நீயே
    நிகர்.  

         


           மருந்து

உன்நினைவை நெஞ்சுக்குள்
  ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
  எனக்கில்லை - என்னஇவன்
பைத்தியமா என்றுதான்
  பார்த்தவர்கள் கேட்டார்கள்
வைத்தியமாய் நீயிங்கே
               வா.