திங்கள், பிப்ரவரி 29, 2016

பிள்ளைக்குறள் 90வெட்கிக் குனிதலுக்கும், வெற்றிக்கும் காரணமாம்
நட்பைக்  கவனமாய் நாடு.                                                                        81.

நாடிவரும் வெற்றியுனை, நம்பி முயற்சித்துக்
கோடி வளங்கள் குவி.

குவிப்பாய் மனதை குறிக்கோளை நோக்கி
தவிர்ப்பாய் விரயம் தனை.

தனையே வினவு! தவறெங்கே தேடு.
உனையேத் திருத்தி உயர்.

உயர்வதும் தாழ்வதும் உந்தன் உழைப்பில்
அயலார் எவர்பொறுப்பும் அன்று.

அன்றைய வேலையை அன்றைக்கே செய்துவிடில்
என்றைக்கும் இல்லை இடர்.

இடர்வரும் வேளை இரும்பெனத் தாங்கிக்
கடப்பதே வாழும் கலை.

கலைகளில் ஒன்றினைக் கற்றதில் மூழ்கி
மலைபோல் துயரும் மற.

மறந்தும் தொடாதே மதுவகை! மீண்டும்
பிறந்தும் தொடரும் பிணி.

பிணியிலாத் தேகமும் பிள்ளை மனமும்
இனியதோர் வாழ்வின் எழில்.                                                                  90.

                                                                    

(தொடரும்...)
சிவகுமாரன் 

வியாழன், பிப்ரவரி 18, 2016

கடல் தாண்டும் காலம் (:இறைவனடி விரையும் 
ஆன்மா அறியுமா
கடல் தாண்டி 
கண்டம் தாண்டி 
பிழைக்கப் போனவனின் 
சொல்லியழ முடியா 
சோகம்?

 காலம் மறக்கடித்துப் போன
சோகத்தைத்
தோண்டிஎடுத்துத்
துயர் கொள்ள வைக்கிறது
வெளிநாடு சென்று
திரும்பியவனின்
துக்க விசாரிப்பு.

கண்ணியம் தருகிறது
புண்ணியம் சேர்க்கிறது
கர்வம் தருகிறது
கடன் தீர்க்கிறது
.....................
பதிலாய்
ஈடு  செய்ய இயலா
காலத்தைக்
கபளீகரம் செய்கிறது
கடல்கடந்து தேடிய
காசு.

கடல்தாண்டி வரும் காசு
கணக்கில் வராது
என்னும் மாயையில்
மறைந்து போய் விடுகிறது
கடல் தாண்டியவனின்
கணக்கில் வாராத
காலம்.

அறுசுவை ஆயினும்
கடல் தாண்டியவனின்
விருந்தில்
சற்றே தூக்கலாய்
கரிப்பு.

சிவகுமாரன் 
16.02.2016