வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

காதல் வெண்பாக்கள் 56


போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது 
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில் 
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.

ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத 
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம். 

சிவகுமாரன்

ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு நன்றி.

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

காதல் வெண்பாக்கள் 54

                     
     
                   

எனக்குள்ளே நீயும் இருப்பதினால், மோகம் 
தனக்குள்ளே  பேசித் தணியும் - உனக்குள்ளும் 
நானிருக்க என்றும் நலியாது நம்காதல் 
வானிருக்கும் காலம் வரை.


                     

வரைந்தேன் இதயத்தில், வண்ணமாய் நானே 
கரைந்தேன் அதனுள் கலந்து - திறந்தே 
அடிக்கடி பார்த்துநான் ஆறுதல் சொல்வேன் 
துடிக்கும் இதயத்தைத் தொட்டு 

சிவகுமாரன் 


ஞாயிறு, நவம்பர் 15, 2015

காதல் வெண்பாக்கள் 52



வெங்கனலில்  நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.

காட்டுக்குப் போனாலும்  காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.

சிவகுமாரன் 

(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு  நன்றி.)



வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்


ஞாயிறு, டிசம்பர் 21, 2014

காதல் வெண்பாக்கள் 47


உன்பாதம் போகும் வழியெல்லாம் பின்தொடர்ந்து
என்பாடல் கேட்குமடி எந்நாளும் - வெண்பாவில்
பாடுகிறேன் உன்னழகை! பாடும் கவியினிலும்
தேடுகிறேன் உன்னைத் தினம்.

தினமுன்னைக் கண்டாலும் தீர்ந்திடாது உன்மேல்
மனங்கொண்ட காதல் மயக்கம் - சினங்கொண்டு
பார்த்தாலும் போதுமடி! பாலை நிலந்தன்னில்
நீர்த்துளிபோல் கொள்வேன் நினைத்து.

சிவகுமாரன் 

வெள்ளி, டிசம்பர் 05, 2014

கொள்வோர் கொள்க


பண்டாரம் என்றே பரிகசித்துக் கைகொட்டி
கொண்டாடும் அன்பர் குரைக்கட்டும் - திண்டாடிப்
போவதில்லை எந்தன் புலமைப் பெரும்பயணம்
ஆவதில்லை ஒன்றும் அதற்கு.
சிவகுமாரன் 
04.12.2014

புதன், நவம்பர் 26, 2014

ஆரண்ய கண்டம்!!!



பாதுகையை வைத்துப்  பரதன் அரசாண்டான் 
போதுமய்யா அந்தப் பழங்கதைகள் - மாதுகளின் 
லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே 
பிஞ்ச செருப்புக்கும் பேறு.

சிவகுமாரன் 

ஞாயிறு, நவம்பர் 16, 2014

நன்றி


என்னிதய நன்றிகளை எப்படி நானுரைப்பேன்?
கன்னித் தமிழ்க்கவியைக் காதலித்து- தன்னிதயக் 
கூட்டில் குடிவைத்துக் கொண்டாடும் அன்பருக்கென் 
பாட்டைப் படைத்தேன் பணிந்து.

கன்னல் கவிஞர் களத்தில் பலரிருக்க 
என்னதான் கண்டாரோ என்னிடத்தில் - சின்ன
மடுவை மலையாய் மதித்துப் பரிசை 
நடுவர் அளித்தார் நயந்து.

                                                                                                                       -சிவகுமாரன்

குறிப்பு : ரூபன்& யாழ் பாவாணன்  நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.



புதன், நவம்பர் 12, 2014

சேராதோ


வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே
நாதன் ஒருவனென்ற நாமந்தான் - மோதல்கள்
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச்
சேராதோ நெஞ்சமே சொல்.

சிவகுமாரன்
06.12.1992

சனி, செப்டம்பர் 13, 2014

காதல் வெண்பாக்கள் 45


கவிதை 1

(படத்துக்குக் கவிதை)

பூத்துக் குலுங்குதையா

(வெண்பா அந்தாதி) 

எப்ப வருவீக ? ஏங்கித் தவிச்சிருக்கேன்.
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.

பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச்  சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!

வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.

விழித்தால் கனவு விலகுமென  எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?

-சிவகுமாரன் 

கவிதை 2
(விருப்பக் கவிதை)

கேட்பாரில்லா  கீதாஞ்சலி 


சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.                                        

விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.                        

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.                                        

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக்  குடியேற்ற.                  

கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!                                      

ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.                                            
சிவகுமாரன் 

காதல் வெண்பாக்கள் 45

சனி, மே 24, 2014

காதல் வெண்பாக்கள் 40


பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை 
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப் 
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும் 
அழுதநீர் ஆனதடி ஆறு.



ஆறாத் துயராய்  அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா 
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி 
வலியாய்  நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன் 

சனி, ஜூன் 01, 2013

காதல் வெண்பாக்கள் 38




கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப்
பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும்
அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம்
இதர சுவைகள் இனி .




இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே
எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்கும்
அறுசுவை இன்பங்கள் ஆகுமோ அந்த
இறுகிய முத்தத்திற்கு ஈடு?


சிவகுமாரன் 


ஞாயிறு, மார்ச் 31, 2013

காதல் வெண்பாக்கள் 36



எப்போது இளகும் இரும்பு இதயமடி?
அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே 
வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும்.
முந்திக்கொள் காலனுக்கு முன்.

உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து
கணக்கின்றி போனதடி காலம் - பிணக்காட்டில்
நொந்து விழுந்து நெருப்புக் கிரையாகி
வெந்து மடியும்முன் வா!

சிவகுமாரன் 


வெள்ளி, மார்ச் 22, 2013

தேறாத் தேடல்


தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப்
போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில்
வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும்
தேடுதல் இல்லாத் தினம்.

தினமொரு போராட்டம், தேயும் இளமை
கனவினில் மட்டும் களிப்பு - மனதினில்
மாறா வடுக்கள் , மகேசா இனிநானும்
தேறாமல் போவேனோ தீர்ந்து?



-சிவகுமாரன் 
22.03.2013

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

சொல்லக் கொதிக்குதடா



பள்ளிக்குச் செல்லவே பாதுகாப்பு இல்லையே
உள்ளம் கொதிக்குதடா உண்மையில் - கள்ளமிலா
பிஞ்சை சிதைத்த பெரும்பாவிக் காமுகனின்
குஞ்சை நறுக்கியேக் கொல்.

சிவகுமாரன் 

திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



வெள்ளி, மே 18, 2012

காதல் வெண்பாக்கள் 32



அபாயம்

என்னைக் குருடாக்கி ஈர்க்கும் இருவிழிகள்!
மின்னல் தெறித்தாற்போல் முத்துப்பல்!-கன்னத்தில்
தப்பிப் பிழைக்கத் தகையின்றிச் செய்தென்னைக்
குப்புறத் தள்ளும் குழி.








அபயம்

காற்றில் பறக்கும் கருங்கூந்தல்! செங்கரும்புச்
சாற்றாய் இனிக்கும் செவ்விதழ்"கள்" - மாற்றுக்
குறையாத பொன்மேனி கொண்டென்னைத் தாக்கி
சிறையிட்டாள் மெல்லச் சிரித்து.




-சிவகுமாரன்

செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )