அருட்கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருட்கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 31, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 5

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான்  தொழுவதுண்டு 
   கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு  
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

-சிவகுமாரன் 


( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)
  

சனி, பிப்ரவரி 19, 2011

மண் சுமந்தவா


நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 





சமர்ப்பணம்
16-02-2011 முதல் இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாத யாத்திரை மேற்கொண்டுவரும் என் சித்தப்பா, என் ஆன்மீக குரு திரு.அரசு அவர்களுக்கு.