சனி, ஏப்ரல் 23, 2011

நீ வரும்வரை

எப்படி மனம் வந்தது 
உன் 
முதல் பிள்ளையைத் 
தவிக்கவிட்டு 
தலைப்பிரசவம் செல்ல ?


என்னிலிருந்து 
எல்லாவற்றையும் 
எடுத்துக் கொண்டு
ஏதோ கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போனாய் 
நீ வரும்வரை 
நிலைத்திருப்பதற்கு.

இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்களை ஏன்
விடுவித்துக் கொண்டாய் ?


வாய்பிளந்து 
சோறூட்டச் சொன்னவனுக்கு
சமைக்கக் கற்றுத் தந்தாய்
கூலியாய்
பசியைப் பறித்துக் கொண்டு.


உனக்குத் தெரியுமா
இப்போதெல்லாம்-நம்
கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
வளர்க்கிறேன்.


இமைகளை எடுத்துக்கொண்டு
விழிகளை மட்டும்
விட்டுவிட்டுப் போனாய்
கூடவே
உறக்கத்தைய்ம் 
உடன் அழைத்துக் கொண்டு .


நினைத்த போது எழுந்து
அலுத்தபோது குளித்து
இரண்டுவேளை உண்டு
நான்கு வேளை தூங்கி
நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது
நீ இல்லாத பொழுதுகள்.


உன்
நினைவுச் சிலந்தியின்
எச்சில் வலைகளால்
பின்னப்பட்டிருக்கிறேன்
நீ
திரும்பி வருவதற்குள்
பாதியாய்
தின்னப்பட்டிருப்பேன்.

                        -சிவகுமாரன்
                         21.07.1998

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

கவியென்னும் தேரேறி
நினைவென்னும் முட்புதரின்
  நீண்டமுள் குத்திவிட 
  நெஞ்சுக்குள் இரத்தமழை  
  பொழிகிறது. - அதை
கனவென்னும் அணையொன்று
  கட்டுக்குள் வைத்திருந்தும்
  கரையுடைத்துச் சிலநேரம்
  வழிகிறது.

மனதிற்குள் விழியொன்று
  மறைவாக  உட்கார்ந்து
  மனிதர்களின் நாடகத்தைப்
  பார்க்கிறது - அது
தனதுஇமைத் தாழ்கொண்டு
  தளும்பிவரும் கண்ணீரைத்
  தடுத்தழகுக் கவிதையாகக்
  கோர்க்கிறது.

ஆசைகளை நெஞ்சுக்குள்
  அடக்கிவைக்க ஆலைக்குள்
  அகப்பட்ட கரும்பாகத்
  துடிக்கிறது. - அது
ஊசிமுனை  வார்த்தைகளை
  உள்ளடக்கி ஓர்நாளில் 
  உணர்ச்சியெனும் எரிமலையாய்
  வெடிக்கிறது.

பூட்டிவைத்த பெருங்கோபம்
  பகையென்னும் நெருப்புக்குள்
  போட்டுவைத்த இரும்பாகக்
  காய்கிறது. - அது
ஈட்டிமுனைச் சொல்லெடுத்து
  என்றேனும் ஓர்நாளில்
  எதிர்ப்போரின் முகம்கிழித்துப்
  பாய்கிறது.

நிறைவேறா எண்ணங்கள்
  நெஞ்சமெனும் கொடுஞ்சிறையில்
  நெடுங்காலத் தண்டனையைப்
  பெறுகிறது. - அது
கரையேறா அலையாகக்
  காத்திருந்து பின்னாளில்
  கவியென்னும் தேரேறி
  வருகிறது.

                         -சிவகுமாரன்

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

இன்னொரு முறை


வருகிறது
இன்னொரு தேர்தல்.

காத்திருக்கிறார்கள் மக்கள்  
இன்னொரு முறை
ஏமாறுவதற்க்காக.

கொளுத்தும் வெயிலில் 
திரியும் 
குப்பைமேட்டுக்
கோழிக்குஞ்சுகளாய் 
மக்கள்.
நிழல் தருவதாய் 
சொல்கின்றன 
வல்லூறுகளின் இறைக்கைகள்.

வரிசை வரிசையாய் 
வலம் வருகின்றன 
வாக்குறுதிகள்.

எத்தனையோ முறை 
தேர்தல் வந்தது
ஒவ்வொரு முறையும் 
தோற்றுப் போனது
மக்கள் தான்.

ஒவ்வொரு முறையும் 
அழித்துவிட்டு
அதே நாமத்தைத்
திருப்பிப் போட்டார்கள்.

விரல்களில் வேண்டுமானால் 
வித்தியாசம் இருக்கலாம்.
நாமம் ஒன்றுதான்.

மக்களாட்சி தேர்தலுக்கும் 
மாட்டு வேடிக்கைக்கும் 
வித்தியாசம் ஒன்றுமில்லை.

சாயம் தீட்டப்பட்ட 
கொம்புகளில் 
பட்டுத்துணியும் பணமுடிப்பும் 
கட்டப்படுவதில் 
என்ன பயன் இருக்கிறது 
மாடுகளுக்கு?
அடித்து துரத்தி விரட்டி
அவிழ்த்துக் கொள்வது என்னவோ 
அவர்கள்தான்.

காட்டுவது என்னவோ
தவிடும் வைக்கோலும் தான்,
ஆனால்
கடைசி சொட்டுவரை
கறந்து விடுகிறார்கள்.

வருகிறது
இன்னொரு தேர்தல்.
வாருங்கள் நண்பர்களே
ஒன்றாய்க் கூடி 
மொட்டை அடித்துக் கொள்வோம்,
ஒரு கிண்ணம் சந்தனம்  
இலவசமாய்த் தருகிறார்களாம்.

                                  - சிவகுமாரன்

     வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தேர்தல் வெண்பாக்கள்

                V.O.

எல்லாம் இலவசமாய் 
   இங்கே கிடைப்பதினால்
பொல்லாத வேலைக்குப் 
   போவானேன் ?- சொல்லாமல் 
விட்டுவிடப் போறேன்நான் 
   வேலையை ! வீட்டுக்கு 
பொட்டிகட்டப் போறேண்டா 
        டோய்.

            மனசு 
    
மிக்சி கிரைண்டர் 
   இலவசம் என்றமிஸ்டர்
எக்ஸுக்குத்* தானப்பா 
   என்ஓட்டு - செக்சியாய் 
வேற எதுனாச்சும் 
   வீடுதேடி வந்தாக்க
மாறலாம் ஒய்க்கு**
     மனசு 

(* X க்கு , ** Yக்கு )

                                       -சிவகுமாரன்