புதன், நவம்பர் 21, 2012

எழுதாக் கவிதை

அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.

மூச்சுவிட நேரமின்றி
ஓடுகிற ஓட்டத்தில்
கைக்கு எட்டாமலும்
கண்ணுக்குத் தெரியாமலும்
கரைந்து போகின்றன
விரிந்த மலரிலிருந்து
வெளிப்படும் மணமாய்
நுகரப்படாமலேயே.

ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து  நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய நூல்கண்டின்
சிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி.
சிவகுமாரன் 

வியாழன், நவம்பர் 01, 2012

சீட்டுக்கவி


ஈரேழு உலகிலும் இணையேதும் இல்லாத 
  இன்மொழித் தமிழ்க் காதலன். 
  எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது 
  இயங்கிடும் கொள்கை வெறியன் 
தீராத தமிழ்மோகத் தீயினை நெஞ்சுக்குள் 
  தேக்கிவைத் தலையும் கிறுக்கன் 
  தீந்தமிழ் கவியன்றி செல்வங்கள் ஏதையும் 
  சேர்த்துவைக் காத மூடன்
சீராக கவிசொல்லி சிந்தையை மயக்கிடும் 
   சிவகுமாரன் விடுக்கும் ஓலை.
   செந்தமிழ் கவிதைக்கு செவிசாய்த்து மகிழ்ந்திடும்
   செல்வந்த நண்ப காண்க.
பாராட்டுப் பெற்றபல கவிதைகள் பழசாகி 
   பரண் தூங்கும் நிலைமாறவே 
   பலநூறு படிகொண்ட நூலாக்கி பல்லோரும்
   படித்திட வழி செய்கவே. 


                                                                            சிவகுமாரன்