வெள்ளி, ஜூன் 15, 2012

எக்காலம்?


இல்லறக் கடமைகள் இனிதே முடித்து
நல்லற வாழ்வை நாடுவது எக்காலம்?

இரைதேடிப் பறந்து ஏமாறும் காலம்போய்
இறைதேடி என்னுள் இறங்குவது எக்காலம்?

மாய உலகின் மயக்கம் அறுத்திட்டு
காயக் கடலின் கரைசேர்வ தெக்காலம்?

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் காலம் போய்
அஞ்செழுத்தை ஓதி அமர்ந்திருப்ப தெக்காலம்?

வட்டிக்கு கடன்வாங்கி வாழ்ந்திருக்கும் காலம்போய்
கொட்டிக் கிடப்பதை கொண்டாடுவ தெக்காலம்?

சோற்றைத் தின்று சோர்ந்திருக்கும் காலம் போய்
காற்றைப் புசிக்கும் கணக்கறிவ தெக்காலம்?

வாடிச் சுழன்று வதைபட்ட காலம் போய்
பாடித் திரிந்து பறந்திருப்ப தெக்காலம்?

போடா போவென்று பூவுலகை புறந்தள்ளி
வாடா மலராக வாழ்ந்திருப்ப தெக்காலம்?

கைதட்டல் சுகத்துக்காய் காத்திருக்கும் காலம்போய்
மெய்விட்டு மெய்தேடி மேய்ந்திருப்ப தெக்காலம்?

வருத்தத்தில் தோய்ந்து வாடிடும் காலம்போய்
இருத்தலில் இல்லாது இருப்பது எக்காலம்?

உள்ளம் திறக்கும் உபாயம் கண்டறிந்து
கள்ளத் தனங்கள் களைந்தெறிவ தெக்காலம்?

வெட்ட வெளியெங்கும் வியாபித்த சிவம்தன்னை
கொட்ட விழித்திருந்து கூத்தாடுவ தெக்காலம்?

தேனில் இனிப்பாகத் தித்தித் திருப்பானை
ஊனில் உள்ளுணர்வில் ருசித்திருப்ப தெக்காலம்?

மலருக்குள் மணமாக மறைந்திருப் பானோடு
கலந்திருந்து இன்பம் காணுவது எக்காலம்?

கோவில் குளமென்று கும்பிட்டு அலையாமல்
ஆவியில் அவனை அமர்த்துவது எக்காலம்?

அவனை அமர்த்தியபின் அங்கிங்கு அலையாமல்
சிவனே நானென்று சிலிர்த்திருப்ப தெக்காலம்?

உண்டு உறங்கி உடல் வளர்க்கும் காலம்போய்
கண்டு தெளிந்து கட்டறுப்ப தெக்காலம்?

எல்லாம் சுமையென்று ஏகாந்தம் தேடி
பொல்லா உலகை புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லுக்குள் இல்லா கடவுளைத் தேடாமல்
உள்ளுக்குள் தேடி உட்காருவ தெக்காலம்?

பேச்சை நிறுத்தி பேரின்பக் கடலுக்குள்
மூச்சை அடக்கி முக்குளிப்ப தெக்காலம்?

வானை நோக்கி வணங்கும் காலம்போய்
நானே இறையென்று நம்புவது எக்காலம்?

சிவகுமாரன் 

புதன், ஜூன் 06, 2012

கேள்விக்கென்ன பதில்?


வான்எனும் வீதியில் வலம்வரும் மேகம்
  வான்மழை நீராய் வருவது எப்படி?
தேன்மழை நீர்த்துளி தெறித்துப் பறந்து
  திரைகடல் சிப்பியில் வீழ்வது எப்படி?
மீன்வகைச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி
  மின்னிடும் முத்தாய் மாறுவ தெப்படி?
நானிதன் ரகசியம் அறிந்திட முனைந்து
  நாட்களை மட்டும் நாயெனக் கழித்தேன்.

ஒருதுளி விந்து உள்ளே விழுந்து
  உயிர்தனைப் பெற்று வளர்வது எப்படி?
சிறு உடல் கைகால் முளைத்து வளர்ந்து
  சின்னக் குழந்தை ஆவது எப்படி?
ஒருதாய் வயிற்றில் வளர்ந்த போதும்
  உதிரம் வேறாய் ஆவது எப்படி?
ஒருவரும் பதிலை உரைக்க மறுத்தால்
  அறியாச் சிறுவன் அறிவது எப்படி?

உடலுக் குள்ளே உள்ளது காற்றெனில்
  உயிரெனும் காற்று உறைவது எங்கே?
சடலம் விட்டுச் செல்லும் காற்று
  சாவுக் கடுத்து செல்வது எங்கே?
"நடப்பது என்றும் நம்கையில் இல்லை
  நாடக மேடையில் நாம்வெறும் பொம்மை.
கடவுள் தானிதன் காரணம் என்றால்
  கடவுள் என்பவன் யாரவன் எங்கே?

-சிவகுமாரன்

(1988 ஆம் ஆண்டு கேள்விகளால் வேள்விகள் செய்த விளங்காப் பருவத்தில் விளைந்த கவிதை)