புதன், செப்டம்பர் 29, 2010

ஹைகூ கவிதைகள் 20 (ஈழம்)

இந்தியாவின் கீழே
இரத்தத் துளி
இலங்கை.


நிலவை முத்தமிட 
நீளும் தென்னை.
ஈழக் கனவு.

அமைதிக்குழுவின்  ஆராய்ச்சிமுடிவு.
முத்திரைச் சான்றோடு
முள்வேலிகள்.

இனவாதம் தூண்டும்
இலங்கைத் துறவிகள்.
இரத்தம் மரணம் அச்சோ...மி .

ஆட்டுக்கிடைக்குள்ளும் 
அவதரிக்காதோ ஓர்நாள்
புலிக்குட்டி.

                      -சிவகுமாரன்

சனி, செப்டம்பர் 25, 2010

பால்யம்

அந்தி மயங்கும் நேரம்.
அரிக்கேன் விளக்கு  
அடியில் தொங்க
அசைந்தாடிச் செல்கிறது
மாட்டுவண்டி.

பின்பக்கக் கட்டையை
பிடித்துத்  தொங்கியபடியே
நானும் தம்பியும்.

தெருமுனை தாண்டியதும்,
"டேய் தம்பிகளா
எவ்வளவு தூரம்
வரப்போறீக ...?"
வாஞ்சையுடன்
வண்டிக்காரன்.

இறங்கிவிட
மனசில்லை
இன்றுவரை.

                  -சிவகுமாரன்.

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

கதைக்க வேண்டாம்

எங்கள் தேசம் தமிழீழம்
  எமக்கும் தமிழே மொழியாகும்
உங்கள் புறநா நூற்றுத் தாய்
  தொப்புள் கொடியின் உறவாகும்


சிங்கத் தமிழன் படை நடத்தி
 வென்று முடித்த தேசமிது.
சிங்களப் பேய்கள் வெறி கொண்டு
  தின்ற மயானம் ஆகியது.


விடுதலை என்னும் கனவெல்லாம்
  வீணாய்ப் போனது துரோகத்தால்.
தொட முடியாத தூரத்தில்
   தலைவா தமிழா  பாவம் என்செய்வாய்?


சங்கத் தமிழும் குறளோ வியமும்
  சத்தம் போட்டு பாடுங்கள்
எங்கள் ஓலம் இடைஞ்சல் என்றால்
  இன்னும் உரக்கப்  பாடுங்கள்.


கங்கை கொண்டான் கடாரம்  கொண்டான்
  காவியப் பெருமை பாடுங்கள்
எங்கோ ஈழம் எரிந்தால் என்ன
  இலக்கிய அழகைப்  பாருங்கள்.

செம்மொழி  ஆன தமிழுக்கு
  சீர்மா நாடு நடத்துங்கள்
அம்மா அய்யோ ஓலங்கள்
  அபஸ்வரம் காதைப் பொத்துங்கள்.


சேர சோழ பாண்டிய மன்னர்
  திறமை வியந்து பேசுங்கள்
ஈரம் நெஞ்சில் எஞ்சி இருந்தால்
  எடுத்து துடைத்து வீசுங்கள்.

எம்.பி.க்கள் யாரையும் அனுப்பாதீர் 
  என்ன கிழித்தார் சத்தியமாய்?
நம்பி இருங்கள் அங்கேயே
  நாங்கள் இருப்போம் பத்திரமாய்.

முடங்கிக் கிடக்க முள்வேலி உண்டு.
  மூச்சை சத்தமாய் விடமாட்டோம்.
அடங்கிக் கிடப்போம் அடிமைகளாய்
  ஐ.நா. அமைப்பிடம் சொல்லுங்கள்.

இனியும் இழக்க எதுவும் இல்லை
     எம்மை மறந்து செல்லுங்கள். 
*கணியன் போன்று இனியும் யாரும்
  கதைக்க வேண்டாம் சொல்லுங்கள்.

பிழைக்கத் தெரிந்த மனிதர் நீங்கள்
  பிழைப்பைப் பார்க்கச்  செல்லுங்கள்
இழைத்த கொடுமை போதா தென்றால்
  இலங்கை அரசிடம் சொல்லுங்கள்.


வாழத் தெரிந்த தலைவர் தமிழர் நீங்கள்
  வளமாய் நலமாய் வாழுங்கள்
ஈழம் சொட்டும்   இரத்தம் தொட்டு
  இனவரலாறு எழுதுங்கள்.

                                         -சிவகுமாரன்


*யாதும் ஊரே யாவரும் கேளிர்
                                        -கணியன் பூங்குன்றனார்.

திங்கள், செப்டம்பர் 20, 2010

தவி(ர்)ப்பு

கரிசனம் கொஞ்சமும்
காட்டிவிடக் கூடாதென்பதில்
ரொம்பவே
கவனமாக இருக்கிறாய்.

எங்கள்
இனிய கனவுகள்
சிதைபடும்போது
ஈரக்குலைகள்
அறுபடும்போது
நாயாய் நாங்கள்
உதைபடும்போது
தாயை அயலான்
தாக்கிடும்போது
சிங்கள நாய்கள்
நாக்கைச் சுழற்றி
எங்கள் சகோதரியை
தீண்டியபோது
சேலை இழந்த
பாஞ்சாலியாய்
கைகள் தூக்கி
கதறியபோது

கவனமாக இருந்தாய்
காரியம் பிறிதில்.

இனவரலாறு
எழுதிடும்போதும்
செம்மொழி பற்றி
சிலாகிக்கும் போதும்
தவிப்போடு
தவிர்த்து விடுகிறாய்
ஈழம் என்ற
இழவு வார்த்தையை.

எனக்குத் தெரியும்
அது
உனக்கும்  தெரியும் .
எனக்கும் உனக்குமான
தூரம்
உன்
உதட்டிற்கும்
மனசுக்குமானது தான்.

                        -சிவகுமாரன்

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஹைகூ கவிதைகள் 15

ஓவியம் பழகும்
தூளிக் குழந்தை.
மூத்திரக் கோடுகள்.

இடையே வலிக்குமோ
இறக்கைகள்.
கடல் தாண்டும் பறவை.

தொலைந்த பர்ஸில்
பணம் அட்டை இத்யாதியுடன்
அம்மாவின் படம்.

நீருக்குள் வாளி
சுலபமாய் இழுத்தேன்
கவிதையுடன் வாழ்க்கை.

கிளைத்து வளர்ந்தது
கிளியின் எச்சம்
சுவற்றில் ஆலமரம்.

                               -சிவகுமாரன்

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

காதல் வெண்பாக்கள் 6

      போலிமரம்???

வீதிவழி நீநடந்தால்
  வெள்ளிக் கொலுசொலியில்
பாதிஉயிர் போகுதடி
  பின்தொடர்ந்து - போதிமரம்
தேடிப்போய் நானமர்ந்தேன்
  தேன்மொழியே  உன்நினைவால்
ஆடியதே வேரும்
    அசைந்து.

                    

  •   வாசம் தேடி
நீ-நகர்ந்து போனாலும்
  நெஞ்சுக்குள் நீ உதிர்த்த
பூ-நகர்ந்து போகவில்லை.
  பெண்ணே என் - பாநகர்ந்து
உன்னால் மயங்கி
  உனைத்தொடர்ந்து வந்திருக்கும்
பின்னால் திரும்பித்தான்
       பார்.
                                
                                                     -சிவகுமாரன்

வெள்ளி, செப்டம்பர் 10, 2010

எங்கே?

இத்தனை நேரமாய்
என்னைத் தொடர்ந்த
நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?

                    -சிவகுமாரன்

பிரிவு

         

# சலனமற்ற வாழ்க்கையில்
   பூகம்பமாய்
   உன் பிரிவு.

# எங்கோ தொலைவிலிருந்து
   நிவாரண நிதியாய் 
   நீ அனுப்பும்
   குறுஞ்செய்திகள்.

# இடிபாடுகளுக்கிடையே
   என்
   இதயம்.

# மீட்புப் படையாய்
   நீ
   வருவது எப்போது?

                       -சிவகுமாரன்,

திங்கள், செப்டம்பர் 06, 2010

ஹைகூ கவிதைகள் 10

     

வரதட்சணையாய் வந்த டீவியில்
பரிதாபமாய்
மாமனார் முகம்.

மாமனார் வாங்கித்தந்த
ஃபிரிட்ஜ் முழுவதும்
ஐஸ் வாட்டர்.

இன்று ஏன் வரவில்லை
பிச்சைக்காரர்கள்?
பானை நிறைய பழையது.

ஊர் கிடக்கட்டும்
ஓடிப் போகலாம் வா.
நகைகளுடன்.

வரைந்த கோலத்தில்
மறைந்து போயின
புள்ளிகள்.

              -சிவகுமாரன்.

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

திண்ணை ராஜ்ஜியம்

                           

# புண்ணியவதி போய்ச்சேர்ந்து
   பத்து  வருஷமாச்சு.
  அவளோடு சேர்ந்து
  ஆதரவும் போயாச்சு!

# வருடம் ஒருமுறை
  அவள் திதிக்கு மட்டும்
  வக்கணையாய்
  சாப்பிட  முடிகிறது.

# பரிணாம வளர்ச்சியில் 
  அப்பா என்ற
  அழகிய சொல்
  முன்னிலையில்
  "பெரிசு" என்றும்
  படர்க்கையில்
  "கிழட்டுச் சனியன்" என்றும்
   உருமாறிப் போனது.

# முதியோர் இல்லம்
  அனுப்பிட 
  முனைப்போடிருக்கிறான்
  செல்லமகன். 
  மருமகளுத்தான்
  மனசில்லை.

# நர்சரி பேரனை
  அழைத்துவர,
  கமிஷன் அடிக்காமல்
  காய்கறி வாங்கிவர,
  வெளியூர் சென்றால்
  வீட்டைக் கவனித்துக்கொள்ள
  நம்பிக்கையான
  வேலையாள்
  கிடைக்கவில்லையாம்.

# விருந்தாளிகளை
   விவஸ்தையின்றி
   கடிக்கிறதாம் அல்சேஷன்.
   விற்றுவிட்டார்கள்.

# இப்போது எனக்கு
  வேலைமாற்றம் வந்திருக்கிறது.
  வீட்டுத்திண்ணைக்கு!

# வீசியெறியப்படுகிறது
  சோற்றுத்தட்டு.
  வாலிருந்தால்
  ஆட்டிக்காட்டலாம்
  பதிலாய்த்தான்
  ஆடிக்கொண்டிருக்கிறது
  தலை.

                       -சிவகுமாரன்