சனி, ஜனவரி 06, 2018

ஆப்பிரிக்கக் காடு


நெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.
   நெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.
குடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும்
   குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
திடுதிடென பேரருவி திமிராட்டம் போடும்
   திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
அடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்?
   அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.சடசடென மழையொன்று உடல்நனைத்துப் போகும்.
   சட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.
தடதடென சிற்றோடை நீர்தளும்பிப் பாயும்
   தலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.
படபடென கிளிக்கூட்டம் படையெடுக்கும் வானை.
   படையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை
கடகடென புறப்பட்டு ஆப்பிரிக்கா 
வாரீர்.
 கண்கொள்ளா காட்சிகளைக் காட்டுக்குள் பாரீர்.


                                                                                                             
சிவகுமாரன்


.