நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு
அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு .
கோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு
கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு
பூவினில் உறைவாள் அருள்தான் போ தாத குறையும் உண்டு.
பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.
திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும்.
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்
காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும்.
-சிவகுமாரன்
( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)