வெள்ளி, அக்டோபர் 16, 2020

காட்டுக்குள்ளே

            
                (காவடிச் சிந்து)

ஓங்கி உயர்ந்து நிற்கும் காடு- அதன்
  உள்ளே சிறியதொரு   வீடு - நீர்
தேங்கிடும் குளத்தருகே
  துள்ளித்துள்ளி மானினங்கள்
  ஓடும்-விளை-யாடும்.

அன்னை நிலத்தின் வளைக் கரங்கள்-போல
  அங்கே வளர்ந்திருக்கும் மரங்கள் -அதன்
சின்ன இலை நடுவே
  சிந்தும் பனித்துளிகள்
  இறங்கும்-வந்து-உறங்கும்.

காய்ந்த இலை மேலிருந்து உதிரும்-சிறு
  காற்றடித்தால் பூமரங்கள் அதிரும்-நீர்
பாய்ந்துவரும் ஒடையினில்
  பால்நிலவும் சூரியனின்
  கதிரும்-பட்டுச்- சிதறும்.

கொட்டும் மழை போன்றதொரு ஊற்றும்-உடல்
  தொட்டுச் செல்லும் தென்பொதிகைக் காற்றும்-தேன்
சொட்டும்பல கீதங்களை
  சொல்லுமொரு பூங்குயிலின்
  பாட்டும்- சுவை- கூட்டும்.

நாட்டுக்குள்ளே பேய்கள் பல கோடி- அவை
  நம்மைத் துரத்தும் முன்னே ஓடி -அந்தக்
காட்டுக்குள்ளே வீடுகட்டி
  காலம் கழித்து வந்தால்
  தொல்லை-ஏதும்-இல்லை.

                                                               -சிவகுமாரன்.




இது ஒரு மீள் மீள்பதிவு. இந்தக் கவிதை 1986 ஆம் ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் போது எழுதி என் தமிழ் அய்யா திரு.மாரிமுத்து அவர்களால் பாராட்டப் பெற்றது.
34 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையில் இந்தக் கவிதைக் கனவு பலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆப்பிரிக்காவின் காட்டுக்குள் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடி இருக்கிறேன்.:) )  

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

எங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.



கட்டை விரலை அல்ல.
ஏகலைவனையே
காவு கேட்கிறீர்கள்
துரோகித் துரோணர்களே.
உங்கள்
குருச் சேத்திரத்தில்  
நீண்டு கொண்டே 
போகின்றன
நீட்டு கொலைகள்.

முட்டையிடும் போட்டியில்
உங்கள் கோழிகளோடு
எங்கள் சேவல்களை
கலந்து கொள்ளச்
சொல்கிறீர்கள்.

ஓரிரண்டு முட்டைகளை
இட்டும் தொலைக்கின்றன
எங்கள் சேவல்கள்.

இடத் தெரியா இயலாமையில்
தங்களையே
அறுத்துக் கொள்கின்றன
அப்பாவிச் சேவல்கள்.

ஆடுகளம்
எங்களுடையது.
அடை காக்க
வராதீர்கள்
பெட்டைக் கோழிகளே.
                                             -சிவகுமாரன்.