தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!
ஊரே வியக்கும் உனை. 1.
ஊரே வியக்கும் உனை. 1.
உனைவெல்ல இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.
நினைவில் இதனை நிறுத்து.
நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.
சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.
கூர்ந்து கவனித்துக் கொள்.
கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.
தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!
கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.
புனித வழியாய்ப் புரிந்து.
புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.
தெரிந்தோர் தயவால் தெளி.
தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.
எளிதாய் அடைவாய் இலக்கு.
இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு. 10.
கலங்காதே வீணரைக் கண்டு.
கண்டு பிடிப்பாய்! கடவுள் பெருங்கருணை 11
உண்டு முழுதாய் உனக்கு
உண்டு முழுதாய் உனக்கு
.
உனக்கென்ற ஒன்றை உனையன்றி யாரும்
தனக்கென்று சொல்லத் தகாது.
தனக்கென்று சொல்லத் தகாது.
தகாத பழக்கங்கள் தன்னுடைய வாழ்வில்
புகாமல் கவனித்துப் போ.
புகாமல் கவனித்துப் போ.
போனதை எண்ணி புலம்பாதே! சாதிக்க
வானளவு வாய்ப்புண்டு வா.
வானளவு வாய்ப்புண்டு வா.
வாவென்றால் முன்னின்று வாய்பொத்தி நிற்காதோ!
நீவென்ற பின்னே நிதி.
நீவென்ற பின்னே நிதி.
நிதிக்கு உலகில் நிகருண்டு! உந்தன்
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.
மாற்றம் பிறக்கும்! மனதில் துணிவிருந்தால்
வேற்றாய் மலரும் விதி.
வேற்றாய் மலரும் விதி.
விதியை எதிர்கொள்ளும் வீரம் இருந்தால்
எதிர்க்க எவருண்டு இங்கு.
எதிர்க்க எவருண்டு இங்கு.
இங்குனக்கு ஆண்டவன் ஈந்ததை நீபிறர்க்கு
தங்கு தடையின்றி தா.
தங்கு தடையின்றி தா.
தாராளம் காட்டிடு தர்மச் செயல்களில்!
ஏராளம் காட்டும் இறை. 20
நிறைவாய் மனதில் நினை. 21
நினைத்திடு எப்போதும் நீயாய் பிறரை!
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.
அன்பால் நெருங்கி அறிவால் கவர்ந்திடு!
உன்புகழ் பேசும் உலகு.
உன்புகழ் பேசும் உலகு.
உலகே வியக்க உயர்ந்தாலும் என்றும்
தலைக்கனம் வாரா திரு.
தலைக்கனம் வாரா திரு.
இருப்பாய் நிலவாய்! எதிர்ப்போர்க்குக் கொஞ்சம்
நெருப்பாய் முகங்காட்டி நில்.
நெருப்பாய் முகங்காட்டி நில்.
நில்லாமல் ஓடிடும் நேரம்! தவறினால்
சொல்லாமல் ஓடும் சுகம்.
சொல்லாமல் ஓடும் சுகம்.
சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.
அகத்துள் உளதாம் அறி.
அறிவால் பொருளீட்டி அன்பால் பகிர்ந்து
செறிவாய்ச் செயல்களை செய்.
செறிவாய்ச் செயல்களை செய்.
செய்த தவறை திரும்பவும் செய்யாதே.
தெய்வமும் மூடும் திரு.
தெய்வமும் மூடும் திரு.
திருவருள் காட்டிடும் தெய்வம்! மனதை
ஒருமுகம் ஆக்கி உழை. 30.
ஒருமுகம் ஆக்கி உழை. 30.
உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள். 31.
அழைத்துக் கொடுக்கும் அருள். 31.
அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.
பொருளைக் குவிக்கின்ற போது.
போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.
ஊதியத்தில் இல்லை உணர்.
உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும் காண்.
கணக்குத் தவறிடும் காண்.
காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.
வீண்பெருமை வேண்டாம் விடு.
விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!
சுடும்வரை தாங்கிடு சூடு!
சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.
கேடாய் முடியுமாம் கேள்.
கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.
கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.
அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர். 40.
தவம்போல் தவறைத் தவிர்.
தவிர்ப்போரை நீயும் தவிர்த்திடு! பின்னால்
தவிப்பார் அவர்கள் தனித்து. 41.
தவிப்பார் அவர்கள் தனித்து. 41.
தனித்த திறம்தான் தலைமை வகிக்கும்.
தனித்தே நிமிர்வாய் தலை.
தனித்தே நிமிர்வாய் தலை.
தலைவணங்கு! ஆனால் தலைகுனிவால் வாழ்வில்
நிலைகுலைந்து போகாமல் நில்
நிலைகுலைந்து போகாமல் நில்
நில்லாதே எங்கும்! நிறுத்தாதே ஓட்டத்தை!
வெல்லாமல் ஓய்வெனில் வீண்.
வெல்லாமல் ஓய்வெனில் வீண்.
வீணாக்கும் நேரத்தில் வெற்றிச் சுவடுகள்
காணாமல் போகும் கரைந்து.
காணாமல் போகும் கரைந்து.
கரைதொட்ட பின்னே களைப்பாறு! உண்டோ
இரைதேடிச் சோர்ந்த எறும்பு?
இரைதேடிச் சோர்ந்த எறும்பு?
எறும்பாய் உழைப்பாய்! இரும்பாய் இருப்பாய்!
அறும்,பார்! தடைகள் அகன்று.
அறும்,பார்! தடைகள் அகன்று.
அகன்றுசெல் தீயவர் அண்டுமிடம் விட்டு!
நகர்ந்துகொள் தேவையில்லை நட்பு.
நகர்ந்துகொள் தேவையில்லை நட்பு.
நட்பெனக் கொள்ளுமுன் நன்மையும் தீமையும்
நுட்பமாய் ஆராய்ந்து நோக்கு.
நுட்பமாய் ஆராய்ந்து நோக்கு.
நோக்கம் நிறைவேறும் நாள்வரை சோம்பலும்
தூக்கமும் தூரத் துரத்து. 50
தூக்கமும் தூரத் துரத்து. 50
துரத்திவரும் வெற்றி, தொலைந்திடும் தோல்வி!
சிரத்தையாய் உன்பணியைச் செய். 51.
சிரத்தையாய் உன்பணியைச் செய். 51.
செய்யத் துணிந்தால் சிகரம் தொலைவில்லை
தொய்வின்றி ஏறித் தொடு
தொய்வின்றி ஏறித் தொடு
.
தொடுவானை நீண்டுபோய்த் தொட்டுத் திரும்பும்.
கடும்முயற்சிக் கொள்வாரின் கை.
கடும்முயற்சிக் கொள்வாரின் கை.
கைகூடும் நிச்சயம் காணும் கனவெல்லாம்்
கைவிடாமல் நீமுயலுங் கால்.
கைவிடாமல் நீமுயலுங் கால்.
கால்போன போக்கில் கடக்காமல் வாழ்க்கையை
நூல்பிடித்தாற் போன்றே நடத்து.
நூல்பிடித்தாற் போன்றே நடத்து.
நடத்தையும் செய்கையும் நன்றெனில் உந்தன்
இடத்தைப் பறிப்பவர் யார்?
இடத்தைப் பறிப்பவர் யார்?
யாருக்கும் சார்பின்றி யாரோடும் ஒத்துவாழ்
நீருக்கு உண்டோ நிறம்?
நீருக்கு உண்டோ நிறம்?
நிறம்மாறும் பச்சோந்தி போன்றொரு வாழ்க்கை
அறவழி அல்ல அறி.
அறவழி அல்ல அறி.
அறியாமை, சோம்பல், அலட்சியம் மூன்றும்
குறிக்கோளை.வீழ்த்தும் குழி.
குறிக்கோளை.வீழ்த்தும் குழி.
குழிகளும் மேடுகளும் கொண்டதே வாழ்க்கை.
வழிதனை நீயே வகு. 60.
வழிதனை நீயே வகு. 60.
வகுப்பறை என்பது வையத்தை வெல்ல
தகுதியாய் ஆக்கும் தளம். 61.
தகுதியாய் ஆக்கும் தளம். 61.
தளத்தைக் கவனமாய்த் தேர்ந்திட்ட பின்னர்
களத்தில் திறமையைக் காட்டு.
களத்தில் திறமையைக் காட்டு.
காட்டுவாய் யாரென்று கானக் குயிற்குஞ்சு
ஓட்டை உடைப்பதை ஒத்து
ஓட்டை உடைப்பதை ஒத்து
.
ஒத்தக் கருத்துடன் ஒவ்வாத ஒன்றையும்
எத்தன்மை என்றுபார் ஆய்ந்து.
எத்தன்மை என்றுபார் ஆய்ந்து.
ஆய்ந்து தெளிந்தே அறுதியிடு! இல்லையேல்
பாய்ந்து வரும்பார் பழி.
பாய்ந்து வரும்பார் பழி.
பழிக்குப் பயங்கொள்! பழம்பட்ட நோய்போல்
அழித்தே ஒழிக்கும் அது.
அழித்தே ஒழிக்கும் அது.
அது-இது என்றெல்லாம் ஐயங்கள் இன்றி
எதிலும் துணிவாய் இறங்கு
எதிலும் துணிவாய் இறங்கு
இறக்கத்தில் கைதூக்கி ஏற்றியோர் தம்மை
மறக்காமல் என்றும் மதி
மறக்காமல் என்றும் மதி
மதிப்பில்லை என்றால் மகேசன் எனினும்
விதிப்பயன் என்று வில(க்)கு.
விதிப்பயன் என்று வில(க்)கு.
விலக நினைக்காமல் வெல்லும் வெறிகொள்.
இலகுவாய் வெற்றிகள் ஏது? . 70
இலகுவாய் வெற்றிகள் ஏது? . 70
ஏதும் அறியாமல் ஏமாளி ஆகாதே
சூதும் அறிந்து துற. 71.
சூதும் அறிந்து துற. 71.
துறப்பதும் மீண்டும் தொடர்வதுமோ வீரம்?
புறப்படு வெல்லட்டும் போர்.
புறப்படு வெல்லட்டும் போர்.
போர்க்களம் போன்றதே போகின்ற பாதைகள்.
சேர்க்கும் சிகரத்தில் சென்று.
சேர்க்கும் சிகரத்தில் சென்று.
சென்றதின் தோல்விகள் சேமித்து வைத்திடு.
வென்றபின் பாடமாய் வை.
வென்றபின் பாடமாய் வை.
வையமே உன்னை வரவேற்கும் நாள்வரும்
ஐயமின்றி வைப்பாய் அடி.
ஐயமின்றி வைப்பாய் அடி.
( வேறு )
வையத் தலைமைக்கு வாய்மை வழிதன்னில்
ஐயமின்றி வாய்ப்பை அடி .
அடித்தளம் தன்னை அசையா தமைத்து
முடிப்பாய் எதையும் முயன்று.
முடிப்பாய் எதையும் முயன்று.
முயன்றால் எதுவும் முடியாத தில்லை.
இயன்றவரை வானோக்கி ஏறு.
இயன்றவரை வானோக்கி ஏறு.
ஏறினாலும் கீழே இறங்கினாலும் கொஞ்சமும்
மாறி விடாதே மனம்.
மாறி விடாதே மனம்.
மனம்போன போக்கில் மதிபோனால் உன்னை
இனங்கண்டு சேரும் இழுக்கு.
இனங்கண்டு சேரும் இழுக்கு.
இழுக்கன்று வீழ்தல், எழுந்திடச் சோம்பி
விழுந்து கிடக்கவே வெட்கு.. 80.
விழுந்து கிடக்கவே வெட்கு..
வெட்கிக் குனிதலுக்கும், வெற்றிக்கும் காரணமாம்
நட்பைக் கவனமாய் நாடு. 81.
நட்பைக் கவனமாய் நாடு. 81.
நாடிவரும் வெற்றியுனை, நம்பி முயற்சித்துக்
கோடி வளங்கள் குவி.
கோடி வளங்கள் குவி.
குவிப்பாய் மனதை குறிக்கோளை நோக்கி
தவிர்ப்பாய் விரயம் தனை.
தவிர்ப்பாய் விரயம் தனை.
தனையே வினவு! தவறெங்கே தேடு.
உனையேத் திருத்தி உயர்.
உனையேத் திருத்தி உயர்.
உயர்வதும் தாழ்வதும் உந்தன் உழைப்பில்
அயலார் எவர்பொறுப்பும் அன்று.
அயலார் எவர்பொறுப்பும் அன்று.
அன்றைய வேலையை அன்றைக்கே செய்துவிடில்
என்றைக்கும் இல்லை இடர்.
என்றைக்கும் இல்லை இடர்.
இடர்வரும் வேளை இரும்பெனத் தாங்கிக்
கடப்பதே வாழும் கலை.
கடப்பதே வாழும் கலை.
கலைகளில் ஒன்றினைக் கற்றதில் மூழ்கி
மலைபோல் துயரும் மற.
மலைபோல் துயரும் மற.
மறந்தும் தொடாதே மதுவகை! மீண்டும்
பிறந்தும் தொடரும் பிணி.
பிறந்தும் தொடரும் பிணி.
பிணியிலாத் தேகமும் பிள்ளை மனமும்
இனியதோர் வாழ்வின் எழில். 90.
இனியதோர் வாழ்வின் எழில். 90.
எழிலென்ப உந்தன் இலக்கை அடைய
பழுதின்றிச் செய்யும் பணி. 91
பழுதின்றிச் செய்யும் பணி.
பணிவுகொள் வென்றால்! பயமறு தோற்றால்!
துணிவுதான் வாழ்வின் துணை.
துணிவுதான் வாழ்வின் துணை.
துணையென என்றும் தொடர்ந்திடும் கல்வி!
இணையதற் குண்டோ இயம்பு.
இணையதற் குண்டோ இயம்பு.
இயம்புவது ஒன்றும், இயல்வது வேறும்
கயமைக் குணமாய்க் கருது.
கயமைக் குணமாய்க் கருது.
கருதியது கைகூட காலம் கடந்தால்
உறுதியாய் ஆக்கு உளம்.
உறுதியாய் ஆக்கு உளம்.
உளமார நேசித்து வேலையைச் செய்தல்
வளமாக வாழும் வழி.
வளமாக வாழும் வழி.
வழியொன்று மூடினால் வேறொன்று தேடு!
செழிப்பாகும் என்றெண்ணிச் செல்.
செழிப்பாகும் என்றெண்ணிச் செல்.
செல்லும் பயணத்தில் சிந்தை முழுதாக்கு.
வெல்ல வழியுண்டோ வேறு.
வெல்ல வழியுண்டோ வேறு.
வே(ற்)று இலக்கிலும் வெற்றிகள் காணலாம்.
தோற்றதாய் எண்ணாதே சோர்ந்து.
தோற்றதாய் எண்ணாதே சோர்ந்து.
சோர்ந்து விடாதே, சுடரட்டும் நெஞ்சுக்குள்
தீர்ந்து அணைந்திடாத் தீ. 100
தீர்ந்து அணைந்திடாத் தீ.
...முற்றும்
சிவகுமாரன்
2014 ஆம் ஆண்டு. ஜூலை மாதம்.
அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை. விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள். என் மகனைப் போன்ற, இளமையில் பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.