சனி, பிப்ரவரி 19, 2011

மண் சுமந்தவா


நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 





சமர்ப்பணம்
16-02-2011 முதல் இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாத யாத்திரை மேற்கொண்டுவரும் என் சித்தப்பா, என் ஆன்மீக குரு திரு.அரசு அவர்களுக்கு. 


82 கருத்துகள்:

  1. நன்றி.

    - இளமுருகன் அரசு

    பதிலளிநீக்கு
  2. என்ன ஆச்சர்யம் . முதல் கமென்ட் உன்னிடமிருந்து.
    ஆனாலும் நன்றி சொல்லி என்னை வேறுபடுத்தி விட்டாய்.

    பதிலளிநீக்கு
  3. இந்த நன்றி என் தந்தையின் சார்பாக. அதனால்தான் 'இளமுருகன் அரசு' என்று எழுதியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. இருக்கட்டும். ஆனாலும் இந்தப் பாடலைக் கண்ணுற்ற காலத்திலிருந்து, தான் செல்லும் சிவாலயங்களில் எல்லாம் பாடிப் பரவி, பரவசமாகி, பரப்பிக் கொண்டிருக்கும் சித்தப்பாவுக்கு நான் தான் காலமெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். ( ஒரு முறை ஆலங்குடி சிவாலயத்தில் பிரதோஷ வேளையில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாய் இந்தப் பாடலைப் பாடக் கேட்டு சிலிர்த்தேன். )

    பதிலளிநீக்கு
  5. கேட்டேன்.மனதிற்கு இதமாய் இலேசாய் இருக்கு சிவகுமாரன் !

    பதிலளிநீக்கு
  6. படித்தேன் இன்னும் கேட்கவில்லை.. கேட்டுவிட்டு மறுபடியும் ஒரு பின்னூட்டம் போடறேன்

    பதிலளிநீக்கு
  7. பாடலின் முதல் இரு அடிகள் கண்ட உடனேயே ஒரு மெட்டில் பாடினேன்.
    பாடிக்கொண்டே வரும்பொழுது தான் கவனித்தேன். உங்கள் பாடலை
    முன்னமேயே திரு பிரபாகரன் அவர்கள் பாடியிருக்கிறார்கள் . அவர்
    எந்த மெட்டில் ? என கேட்டபொழுது என்ன ஆச்சரியம் !! அதே மெட்டில்
    தான் இருந்தது.

    ஒரு உண்மை புரிந்தது.
    அந்த‌
    ஆனந்தமானவன்
    இடபவாகனன்
    ஈசன்
    என்னில் இருப்பதுபோல்
    எங்குமே உள்ளான்.

    பாடுவது அவனே !! அந்தப்
    பாட்டும் அவனே !!
    பிரபைகள் அனைத்தையும்
    ஆள்பவன் அவனே
    பிரபாகரன் ஆனானோ !!

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சிவ பெருமை சொல்லும் வரிகள் சிவக்குமாரா.. குரலிலும் ஒரு கம்பீரம் இருக்கிறது. அருமை

    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு
  10. மிக மிக அருமை!
    என்னுடைய (speaker)ஒலிப்பான் வேலை செய்யவில்லை .அதனால் பிரபாகரன் பாடலை கேட்க முடியவில்லை...சரி செய்து கேட்டு மறுபடியும் எழுதுகிறேன்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. சிவகுமாரன். நான் சிவப்பிரியன். கேட்க கேட்க இனிக்குதையா உன் பாடல். கேட்கும்போது கைகூப்பத் தோன்றுகிறது. இது எப்போது எழுதியது? எப்போதும் இனிக்கும். மிக்க நன்றி! ;-)))))))

    பதிலளிநீக்கு
  12. படித்தேன்;கேட்டேன்.படிக்கும்போது ஒரு சுவை;அதையே கேட்கும்போது மிகு சுவை!இந்தப் படம்தான் என் பதிவிலும் இருக்கிறது!(நமக்குத்தொழில் பேச்சு)
    எல்லாத் தலங்களிலும் இருக்கும் எந்நாட்டவர்க்கும் இறைவனின் தரிசனம் கண்டேன்!
    நன்றி சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு
  13. ஒரு மாத காலம் ராமேஸ்வரம் காசி யாத்திரை பற்றிய புத்தகம் படித்து விட்டு பரவச நிலை அடைந்த நேரத்தில் இந்த பாடல் வலையில். என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
    உன்னை எழுத தூண்டிய சித்தப்பாவுக்கும் உனக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. தோடணிந்த செவியனுக்கோர் தூயபா!
    அருமை!

    பதிலளிநீக்கு
  15. ஒரே சிவமயமாக சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பாடிப் பாடிப் பரவசப்பட்டேன், சிவகுமாரன்!
    உங்கள் தம்பியுடனும் கூடப் பாடி புது அனுபவம் பெற்றேன்..
    ஓரிடத்தில் அவர் நிறுத்திய போது, அவர் பாடி மனத்தில் பதிந்த மாதிரியே, தொடர்ந்து பாடினேன்..!
    பிறவா யாக்கைப் பெரியோன் இதயாசனத்தில் ஏறி அமர்ந்தார்!
    மனம் நெகிழ்ந்த அனுபவத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி, சிவா!

    பதிலளிநீக்கு
  17. அட சூப்பர்!


    வலைசரத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. அருமை.வேறென்ன சொல்ல..
    தொடர வாழ்த்துக்கள்
    ..

    பதிலளிநீக்கு
  19. என் அன்பு சிவா! அற்புதமாய் இருக்கிறது இந்த சிவஸ்துதி.. ஹரிவராசனம் மெட்டில் உள்ளம் உருக்குகிறது.

    பிட்டுக்கு மண் சுமந்தவன் -உன்
    மெட்டுக்கு கண் மயங்குவான்..

    பதிலளிநீக்கு
  20. அருமையான பாடல் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. உங்க சித்தப்பா, குருவின் பாதயாத்திரை சிறக்க வாழ்த்துக்கள். இப்படியெல்லாம் செய்யத் தோன்றுகிறது என்பதே பிரமிப்பாக இருக்கிறது!

    எளிமையான பாடலை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அது பிரபாகரனின் குரலில் அருமையாக இழைகிறது. (மகனோ அப்பனைவிட புத்திசாலியா இருக்காரு :), சமயத்துல பாரதியாகிறாரு; தம்பி தேனாப் பாடுறாரு; அண்ணனோ தமிழையே அப்படி பாக்கெட்டுல அடக்கி வச்சிருக்காரு. குடும்பமே கலைக் குடும்பம் போல. வாழ்க வாழ்க வாழ்க!)

    பதிலளிநீக்கு
  22. பாடலைப் படிக்கையில் சூரி அவர்களின் நினைவு வந்தது - இன்னேரம் பாடத்தொடங்கியிருப்பாரே, அவர் தளத்தில் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்தபடி தொடர்ந்து படித்தால் சூரி ஐயாவின் பின்னூட்டம்!

    இரண்டாவது முறை படித்த போது கவனித்தேன்: 'என்னைத் தோண்டினேன்'. தைக்கிறது சிவகுமாரன் சொல்லாடல்! நன்று!
    (சாமி பாட்டென்றால் கொஞ்சம் சைடு வாங்குவேன்; நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன். நன்றி!)

    பதிலளிநீக்கு
  23. சிவனின் குணங்கள், கலைகள், உடைகள் யாவற்றையும் கொண்டு அழகான சிவபோற்றி பாடலை இயற்றி, உடன் சேர்ந்து பாடும் வண்ணம் தம்பி பிரபாவின் பாட்டு மெட்டும் கூட ஒரு சிவாபிஷகம் செய்துவிட்டீர்கள் சிவா.....

    பதிலளிநீக்கு
  24. என்ன அருமையான கவிதை. உள்ளத்தை உருக்கும் உங்கள் சகோதரனின் குரல்...கேட்டு இரங்கி வர மாட்டானா என்ன ஈசன்?
    பாடலை முழுதாய் பாடியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. பக்தி பரவசமடைய செய்கிறது . என் சமயம் கிறிஸ்தவம் , இருபினும் மற்றும் மதங்களையும் மதிபவள். எல்லோரு போகும்டம் ஒன்று. இறைவனின் சந்திதி . பாதை தான் வேறு . அந்த சக்தியை நினைக்க வைக்கிறது . அழகான் தமிழ் ...உங்கள் ஆக்கத்தால் ஒளிவீசுகிறது

    பதிலளிநீக்கு
  26. பக்தி ரசம் சொட்ட பகிர்ந்துள்ளீர்கள் நன்றி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    பதிலளிநீக்கு
  27. சிவனைப் பற்றிக்கேட்ட கதைகள் அனைத்தும் பாடல்கேட்கும்போது,நெஞ்சில்படமாக ஓடுகிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. இறக்கி வைக்கவா?
    இறக்கி வைக்க, வா!
    நீற்றைத் தந்தவா - திரு
    நீறைச் சுமந்தவா!
    இம்மை சிறக்க வா,
    இம்மையிலேயே சிறக்க வா!
    என்னைத் தோண்டினேன் - அதில்
    உன்னைக் காணவா!

    Completely splendid Sivakumaran!

    பதிலளிநீக்கு
  29. மிகவும் இனிமையான பாடல்!

    பதிலளிநீக்கு
  30. எங்கெங்கோ அழைத்து சென்றது பாடல் அவ்வளவும் ஆனந்தம்

    பதிலளிநீக்கு
  31. கவிதைத்தமிழ் மிக அழகு. இதனை இசையுடன் பாடி பாடலாக பதிவு செய்யலாமே ! அம்மையப்பனின் நாமம் பாடலாய் கேட்கபரவசம் தான்.
    பின்னராவது இதனை அவசியம் செய்யவேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. என்ன சொல்ல‌
    என் தமிழே இனிக்கக் கண்டேன்
    உங்களின் அழகுத் தமிழில்

    ஒவ்வொரு வரியையும்,வார்த்தையும்
    சுவைத்தேன்

    அற்புதம்

    வாழ்த்துகள்

    தமிழுடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  33. இந்த பாடலை பாட தூண்டிய என் அண்ணனுக்கும் என் குரலை ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி .

    பதிலளிநீக்கு
  34. பரவசம் சிவா..பரவசம்..அருமையான பாடல்...அந்த சிவன் சிலை எங்கே இருக்கு சிவா? ரொம்ப அருமையா இருக்கே? நம்ம ஊர்ல தான் இருக்கா? பெங்களூர் இல் இப்படி ஒன்னு இருக்கு..ஆனால் அது மாதிரி இல்லயே...

    பதிலளிநீக்கு
  35. அருமையான துதிப்பா..! நன்றி சிவா!! உடனே பிரதியெடுத்து சிவபக்தையான எனது மாமியாருக்கு அளித்து விட்டேன். பாடப் பாட நாவும் மனசும் இனித்தது. பொதிந்திருந்த திருவிளையாடல் செய்திகள் வெகு சுகம்.

    பதிலளிநீக்கு
  36. பாடலை அருமையாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர் இதை எளிமையான, அழகான 'ஹரிவராசனம்' பாடலின் மெட்டில் பாடி இருப்பது அழகாக இருக்கிறது. இது போல இன்னும் ஒரு பத்து பாடலை நமசிவாய பெயரில் நீங்கள் எழுதி, இது போல மெட்டமைத்து பாடினால், இதை ஒரு ஆடியோ கசெட்டாகவே வெளியிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  37. மிகவும் சிறப்பா இருக்குங்க ...
    நல்ல வரிகள் ..
    கேட்கும்போதே மனது கரைகிறது ,,,

    பதிலளிநீக்கு
  38. சிறப்பான பதிவு. சிவமயம்

    பதிலளிநீக்கு
  39. இந்த பாடல் சாதாரண பக்தி பாடல் இல்லை . இறை மந்திரம்.இந்த பாடலை பாடும் பொது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு கூற விரும்புகிறேன் .இந்த பாடலை பல முறை பார்த்து பாடி என்னால் இந்த வலையில் பதிவேட்ட்ரம் செய்ய முடிய வில்லை .ஏதாவது தடங்கல் வந்தது.கடைசியாக சிவனை நினைத்து கொண்டு சாமி அறையில் அமர்ந்து விபூதி அணிந்து கண்களை மூடி மனப்பாடமாக பாடினேன் .அந்த பதிவு என்னால் பதிவேட்ட்ரம் செய்ய முடிந்தது .பக்தியோடு செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றி பெரும் என்பது இது ஒரு உதாரணம். சிவாய நமஹ

    பதிலளிநீக்கு
  40. உண்மை பிரபு,
    பல இக்கட்டான சூழ்நிலைகளின் போது இந்த பாடலை பாடி நான் மனம் தெளிந்ததாய் உணர்ந்திருக்கிறேன். திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நாம் இதைப் பாடியது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  41. நன்றி
    இளமுருகன், சித்ரா, ஹேமா, வினோ, ஸ்ரீ அகிலா, ஜீ, கவிதைகாதலன், நாகா, ரஹீம் கசாலி, தென்றல், சென்னைப்பித்தன், சிவமணி அண்ணா, அண்ணாமலை, வை.கோ, ராஜி, ரமணி,
    லக்ஷ்மி, பத்மநாபன், ராதேஷ், மதி சுதா, GMB சார், எஸ்.கே, தினேஷ்குமார்,ஸ்ரீராம், அரசன் & கோபி ராமமூர்த்தி,
    அவனருளாலே அவன் தாள் வணங்கியதால், உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தையும் எனையாளும் ஈசனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. சூரி சொன்னது
    \\\ஈசன்
    என்னில் இருப்பதுபோல்
    எங்குமே உள்ளான்.

    பாடுவது அவனே !! அந்தப்
    பாட்டும் அவனே !!///

    அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் அய்யா. தங்களின் தொடர் வருகையை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  43. RVS சொன்னது

    \\\நான் சிவப்பிரியன். கேட்க கேட்க இனிக்குதையா உன் பாடல். கேட்கும்போது கைகூப்பத் தோன்றுகிறது. இது எப்போது எழுதியது? எப்போதும் இனிக்கும்.///

    ரொம்ப சந்தோசமாக இருக்கிறது . நானும் சிவப்பிரியன் தான். மாதா கோயில் மணியடிக்கும் போதும், பள்ளிவாசலில் பாங்கு ஒதும்போதும் நமசிவாய சொல்லிக்கொள்ளும் அளவுக்கு.
    இந்தப் பாடல் 2001 ஆம் ஆண்டு எழுதியது. நான் எழுதிய 2 வது பக்திப் பாடல் இது. நான் பூஜை யறையில் பாடுவதற்காய் எழுதியது . பின்னர் என் சித்தப்பா தான் வெளியிட்ட பிரதோஷ வழிபாட்டு மலரில் வெளியிட்டு பெருமை சேர்த்தார்.

    பதிலளிநீக்கு
  44. ஜீவி சொன்னது
    \\\பாடிப் பாடிப் பரவசப்பட்டேன், சிவகுமாரன்!
    உங்கள் தம்பியுடனும் கூடப் பாடி புது அனுபவம் பெற்றேன்..
    ஓரிடத்தில் அவர் நிறுத்திய போது, அவர் பாடி மனத்தில் பதிந்த மாதிரியே, தொடர்ந்து பாடினேன்..!
    பிறவா யாக்கைப் பெரியோன் இதயாசனத்தில் ஏறி அமர்ந்தார்!//

    நான் எழுதியதை நீங்கள் பாடியது அவனருளன்றி வேறென்ன ?

    பதிலளிநீக்கு
  45. மோகன்ஜீ சொன்னது
    \\பிட்டுக்கு மண் சுமந்தவன் -உன்
    மெட்டுக்கு கண் மயங்குவான்..//

    மயங்கியிருக்கிறான். உணர்ந்திருக்கிறேன்.
    (சிலரின் சிரிப்பு என் காதில் விழுகிறது. அதையும் தாண்டி ஒலிக்கிறது ஐந்தெழுத்து மந்திரம். )

    பதிலளிநீக்கு
  46. அப்பாத்துரை சொன்னது

    \\சாமி பாட்டென்றால் கொஞ்சம் சைடு வாங்குவேன்; நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன்.//

    உங்களைப் போன்றோரின் உணர்வுகளை மதித்து , இது போன்ற இறைபக்தி கவிதைகளுக்காக தனியே ஒரு வலைத்தளம் தொடங்க எண்ணியுள்ளேன். உங்களுக்கு ஏற்புடையாதாய் இல்லாமல் போனாலும், சைடு வாங்காமல் என் தமிழையும் என் தம்பியின் குரலையும் ரசிப்பதற்க்காகவேனும் நீங்கள் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  47. பத்மநாபன் சொன்னது

    \\\சிவனின் குணங்கள், கலைகள், உடைகள் யாவற்றையும் கொண்டு அழகான சிவபோற்றி பாடலை இயற்றி, உடன் சேர்ந்து பாடும் வண்ணம் தம்பி பிரபாவின் பாட்டு மெட்டும் கூட ஒரு சிவாபிஷகம் செய்துவிட்டீர்கள் சிவா....///

    நன்றி ரசிகமணி சார்.
    இறைவனுக்கு என் தமிழால் தான் நான் அபிஷேகம் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  48. நிலாமதி சொன்னது

    \\\பக்தி பரவசமடைய செய்கிறது . என் சமயம் கிறிஸ்தவம் , இருபினும் மற்றும் மதங்களையும் மதிபவள். எல்லோரு போகும்டம் ஒன்று. இறைவனின் சந்திதி . பாதை தான் வேறு . அந்த சக்தியை நினைக்க வைக்கிறது . அழகான் தமிழ் ...உங்கள் ஆக்கத்தால் ஒளிவீசுகிறது.//

    மனம் நெகிழ்கிறது சகோதரி. உங்களைப் போன்றோரால் தான் இந்த தேசம் இன்னும் மதப பேய்களிடம் மாட்டாமல் இருக்கிறது.
    நீங்கள் ஆமென் என்கிறீர்கள். நாங்கள் ஓம் என்கிறோம். ஆதியில் வார்த்தைகள் தோன்றியது என்று விவிலியம் கூறுகிறது. பிரணவம் என்னும் ஒலி தோன்றியதாக வேதம் கூறுகிறது.
    உங்கள் ஜீசஸும், என் ஈசனும் ஒருவனே,.

    பதிலளிநீக்கு
  49. ஜீவா சொன்னது
    \\\இறக்கி வைக்கவா?
    இறக்கி வைக்க, வா!
    நீற்றைத் தந்தவா - திரு
    நீறைச் சுமந்தவா!
    இம்மை சிறக்க வா,
    இம்மையிலேயே சிறக்க வா!
    என்னைத் தோண்டினேன் - அதில்
    உன்னைக் காணவா!

    Completely splendid Sivakumaran!///


    கவிதையின் மைய இழையை பிடித்துவிட்டேர்கள்.
    இறக்கி வைக்கவா ?
    இறக்கி வைக்க வா
    அடிமையாக்கவா ?
    அடிமையாக்க வா .
    சொந்தமாகவா ?
    சொந்தமாக்க வா.

    .... நானே ரசித்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  50. திகழ் சொன்னது

    \\என்ன சொல்ல‌
    என் தமிழே இனிக்கக் கண்டேன்
    உங்களின் அழகுத் தமிழில்
    ஒவ்வொரு வரியையும்,வார்த்தையும்
    சுவைத்தேன்
    அற்புதம்
    வாழ்த்துகள்//

    உங்கள் ரசனை எனக்குப் பெருமை திகழ்.

    பதிலளிநீக்கு
  51. ஆனந்தி சொன்னது.
    \\\பரவசம் சிவா..பரவசம்..அருமையான பாடல்...அந்த சிவன் சிலை எங்கே இருக்கு சிவா? ரொம்ப அருமையா இருக்கே? நம்ம ஊர்ல தான் இருக்கா? பெங்களூர் இல் இப்படி ஒன்னு இருக்கு..ஆனால் அது மாதிரி இல்லயே...///

    நன்றி ஆனந்தி.இந்த சிலை பெங்களூருவில் உள்ளது தான் என்று நினைக்கிறேன். .

    பதிலளிநீக்கு
  52. போளூர் தயாநிதி,

    உங்களை போன்று நிறைய பேர்களுக்காக்
    தனி வலைத்தளம் தொடங்க இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  53. நிலமகள் சொன்னது
    \\அருமையான துதிப்பா..! நன்றி சிவா!! உடனே பிரதியெடுத்து சிவபக்தையான எனது மாமியாருக்கு அளித்து விட்டேன்.///

    நன்றி சகோதரி. உங்கள் மாமியாரிடம் என் வணக்கத்தை தெரிவியுங்கள். அவர்களுக்காக் தனி வலைத்தளம் தொடங்க உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  54. மீனாக்ஷி சொ ன்னது.
    \\இது போல இன்னும் ஒரு பத்து பாடலை நமசிவாய பெயரில் நீங்கள் எழுதி, இது போல மெட்டமைத்து பாடினால், இதை ஒரு ஆடியோ கசெட்டாகவே வெளியிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்///.

    பத்து பாடல் இல்லை ஒரு புத்தகம் போடுமளவுக்கு எழுதிருக்கிறேன். எல்லாம் அவனருள்.

    பதிலளிநீக்கு
  55. மிகச் சிறப்பான பாடல் வாழ்க

    பதிலளிநீக்கு
  56. 'ம‌ண் சும‌ந்த‌வ‌ருக்கு'
    ப‌ண் சும‌ப்ப‌வ‌ரின் வ‌ரிக‌ள்
    ப‌டிப்ப‌வர் நாக்கிலொல்லாம்.
    ஒரு குட்டி ஞானச‌ம்ப‌ந்த‌ராய்
    சிவ‌குமார‌ன்.வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  57. தென்னாடுடைய சிவனே போற்றி!
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
    அத்தனை சிவலீலை, திருவிளையாடல்களையும் தரிசிக்கவைத்து கேட்கவும் வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  58. நல்ல யோசனை. அவசியம் தொடங்குங்கள்.

    சைடு வாங்குவது என்றால் ஏற்கவில்லை என்று பொருளா சிவகுமாரன்? தமிழின் காலத்தாலழியாத சுவை இலக்கியங்கள் பெரும்பாலும் இறையிலக்கியங்கள் தானே? திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் பாடல்களை ரசிக்காமல் இருக்க முடியுமா? திருப்புகழைப் பிரமிக்காமல் இருக்க முடியுமா? சிவகுமாரன் தமிழைச் சிலாகிக்காமல் இருக்க முடியுமா?

    நான் அடிக்கடி படிக்கும் சைவ சமயம், திராவிட வேதம் தளங்களுடன் உங்கள் தளத்தையும் சேர்த்துப் படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  59. நன்றி
    இராஜராஜேஸ்வரி, வாசன் & அகரம்அமுதன்,

    பதிலளிநீக்கு
  60. தவறாக புரிந்து கொண்டேன்.
    பிழை பொறுத்தருள்க அப்பாஜி.
    புதிய தளங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
    திராவிட வேதம் பார்த்தேன்.
    சைவ சமயம் திறக்க முடியவில்லையே

    பதிலளிநீக்கு
  61. ஒரு பிழையுமில்லை சிவகுமாரன்.
    கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்று ஒதுங்கிவிட்டேன் என்றவுடன் என் கையில் கல்லிருக்கிறதா என்பதைக் கவனிக்கிறார்கள் என்பதையும் கவனிக்கிறேன் :).

    சைவம் தளம் திறக்கிறதே? http://www.shaivam.org/

    பதிலளிநீக்கு
  62. ஆகா, திகழ்!
    >>>என் தமிழே இனிக்கக் கண்டேன்

    பதிலளிநீக்கு
  63. நன்றி அப்பாஜி.
    என்ன கொடுமை.
    சைவதளத்தை click செய்தால், web filter violation என்று வருகிறது.
    வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  64. சிவக்குமாரா..அருமை..அருமை...
    ஆட வா..ஆட வா..ஆட வா..
    ஆடப் பிறந்தவனே ஆட வா...
    அந்த சிவனுக்கல்லவோ பொருந்தும்?
    ரொம்ப..ரொம்ப..சந்தோஷம்..வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்..சிவக் குமாரா.. நீ மெய்யாலுமே இன்னொரு ஞான சம்பந்தன்!

    பதிலளிநீக்கு
  65. "கங்கையை சடையுள் வைத்தார்
    கதிர்பொறி அரவும் வைத்தார்
    திங்களை திகழ வைத்தார்
    திசை திசை தொழவும் வைத்தார்...."னு ஒரு பாடல்

    பள்ளி நாளில் தமிழ் ஆசிரியரிடம் கற்றது... ஏனோ உங்க பதிவு படித்ததும் அந்த பாடலும் அது தொடர்பான நிகழ்வுகளும் நினைவு வந்தது...நன்றி பாடலை பகிர்ந்ததுக்கு... உங்கள் தம்பியின் குரலில் கேட்டதும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
  66. அருட்கவிதை, வாசிக்கவும் கேட்கவும் மிகவும் இதம் சிவகுமாரன்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  67. எல்லாம் சிவமயம். அருமை சிவகுமார்.

    பதிலளிநீக்கு
  68. இன்று வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/1.html

    பதிலளிநீக்கு
  69. திங்கள் கிழமை திருச்சியில் உங்களை பார்க்கமுடியாமல் பொனது வருத்தம்தான். இன்று வந்ததும் கவிதையைப் படித்தேன்.கெட்டேன். உங்கள் இதயத்திலிருந்து பீரிட்டுக்கிளம்பிய சொற்கோவை அது.மகனே! ஈசனும் , ஜீசஸும் மட்டுமல்ல,யக்ஞவல்கியரும்,கபிலரும், பத்ஞ்சலியும்,புத்தனும் அவர்களொடு ஒரு வகையில் சேர்க்கப்படவேண்டும்.கூட்டங்களில் பெசும் போது " I dont beleive in God. But I beleive those who beleive in God" என்பேன். அது எவ்வளவு சரியானது!.உதாரணம் சிவகுமரனே!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  70. நன்றி அய்யா. நானும் ஆவலோடு இருந்தேன் தங்களை சந்திக்க. தங்கள் அனுபவத்தில் என்னைப் போல் ஆயிரம் பேரைச் சந்தித்திருப்பீர்கள். இழப்பும் வருத்தமும் எனக்குத்தான். தாங்கள் வருத்தப் படுவது தங்களின் பெருந்தன்மை.
    தங்களின் பின்னூட்டம் வராமல் அடுத்த கவிதை இடுவதில்லை என்றுக் காத்திருந்தேன்.
    நிம்மதியாகிப் போனது மனது.
    நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  71. நன்றி ஆர்.ஆர்.ஆர், சார். தாங்கள் என் வலைக்கு வரமாட்டீர்களா என்று ஏங்கினேன். மிக்க மகிழ்ச்சி.
    இன்னும் ஓரிரு நாளில் புதிய வலைத்தளம் உருவாகிவிடும்
    தங்கள் ஆதரவு என்றும் வேண்டும் சார்.

    பதிலளிநீக்கு
  72. நன்றி அப்பாவி தங்கமணி மேடம்.
    அந்தக் கவிதை அருமையாக் உள்ளது.
    முழுதும் படிக்க ஆசை. தங்கள் பதிவில் வெளியிடுகிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  73. நன்றி சுந்தரா & தேனம்மை மேடம்.

    பதிலளிநீக்கு
  74. நன்றி பிலாசபி பிரபாகரன். இந்தச் சிறியேனை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு.

    பதிலளிநீக்கு
  75. சிவகுமரன்..

    பொருத்தமான பெயர். பிறவா யாக்கைப் பெரியோனுக்குப் பாடிய பாமாலை மனதிற்கு எத்தனை நிம்மதி. மனம் இறுக்கமாக இருக்கும்போதெல்லாம் உங்கள் வலைக்குள் வந்துவிடலாம். இறைவ்ன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் எல்லா வளங்களையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். தம்பி பிரபாகரனின் குரலில் சிவதரிசனம் கண்டேன். கவிதை வளம் பொங்கியோடுகிறது ஒரு நிறைந்து இருக்கும் கடலைப்போல. இதுகூட இறைவன் கொடுப்பினைதான். மனவெளியெங்கும் நிறைவாய் உணர்கிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  76. பேராசிரியரின் வருகையும் வாழ்த்தும் எனக்குப் பெருமை.
    மிக்க நன்றி அய்யா

    பதிலளிநீக்கு