திங்கள், ஜூன் 20, 2011

இனி உனக்காக



போர்முனையில் புறமுதுகு காட்டா வீரன்
மார்புதனில் வேல்பாய்ந்து மாண்டு போனான் .


பீடுநடை போட்டவனை பிணமாய்த் தூக்கி
வீடுதனில் கூடத்தில் கிடத்தி  வைத்தார் .


கண்ணெதிரே பிணமாக .. கட்டியவன்.
பெண்ணவளோ சிலையாக நின்றிருந்தாள்.


மண்ணதிர விழவில்லை , மயங்கவில்லை
சின்னதொரு சலனமில்லை , தேம்பவில்லை .


காலமெல்லாம் படப்போகும் கொடுமை எண்ணி
ஓலமிட்டு  குரலெழுப்பி அழவுமில்லை 


நிலைகுத்திப் போன அவள் விழிகள் பார்த்து
குலைநடுங்கிப் போனார்கள் உறவினர்கள்


கொஞ்சமேனும் குரலெழுப்ப வில்லையெனில்
நெஞ்சமது வெடித்துவிடும் ! மாண்டு போவாய் .


அழுதுவிடு, அழுதுவிடு அவலம் சொல்லி
கழுவிவிடு கவலைகளை கண்ணீர் கொண்டு.


பேச்சின்றி பேய்போல் நீ விழித்திருந்தால்
மூச்சடைத்துப் போவாயே முட்டாள் பெண்ணே .


எவ்வளவோ எல்லோரும் சொன்னார், ஆனால்
அவ்வளவும் அவள் காதில் விழவேயில்லை.


இறந்தவனின் பெருமைகளை ஒருத்தி சொன்னாள்
மறந்துபோன நினைவெல்லாம் வரட்டும் என்று.


உண்மையான வீரனவன் போர்முனையில் .
மென்மையான மனம் கொண்ட மனிதனவன்.


சிப்பாய் தான் ஆனாலும் சிரித்த முகம்
எப்போதும் பழகுதற்கு இனிய குணம்.


இப்படியாய் இறந்தவனின் பெருமைகளை
ஒப்பாரிப் பாட்டில் அவள் ஒப்புவித்தாள்.


கொஞ்சமேனும் அவள்முகத்தில் சலனமில்லை
நெஞ்சமென்ன கல்லாகிப் போனதுவோ ?


சேடிப்பெண் மெதுவாக எழுந்து வந்தாள்
மூடிவைத்த முகத்துணியை விலக்கி வைத்தாள்.


வீறிட்டுக் கிளம்பியது ஓலமெங்கும்.
ஏறிட்டும் பார்க்கவில்லை அவள் எதையும் .


தொண்ணூறு வயதான பெண்ணொருத்தி
முன்னொரு நாள் தாதியவள். எழுந்து  வந்தாள்


தவழ்ந்துவந்த அவன்பிள்ளை தன்னைத் தூக்கி
இவள்மடியில் போட்டுவிட்டு எங்கோ போனாள்.


கோடையிடி போல இவள்  குரலெழுப்பி
வீடதிர விண்ணதிர கத்தித் தீர்த்தாள்.


அய்யோ..... ! என் செல்லமே நான் என்ன செய்வேன்
பொய்யாகிப் போனதடா வாழ்க்கை இனி .


சிந்தையை  நான் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்
தந்தையின்றி உனை வளர்த்து காட்ட வேண்டும்.


எனக்கென்று ஏதுமில்லை வாழ்வில் பாக்கி.
உனக்காக வாழ்ந்திருப்பேன் உயிரைத் தேக்கி.

                                                              -சிவகுமாரன்
                                                                                                                                      

(நேற்று ஓர் ஆங்கிலக் கவிதையை படித்தவுடன் , அதை மொழிபெயர்க்கத் தோன்றியது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் , நான் கண்ட, என்னைப் பாதித்த  நிகழ்வினை அடிப்படையாய்க் கொண்டு, இக்கவிதையை எழுதினேன்.
மூலக் கவிதையை  சிதைக்காமல் எழுதி இருக்கிறேனா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது என் கன்னி முயற்சி. )  


மூலக் கவிதை 


Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.
Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.
Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee

                 -Alfred Lord Tennyson



44 கருத்துகள்:

  1. //
    எனக்கென்று ஏதுமில்லை வாழ்வில் பாக்கி.
    உனக்காக வாழ்ந்திருப்பேன் உயிரைத் தேக்கி.
    ///
    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. மனதை கனமாக்கும் வரிகள் சிவகுமார்...

    தன்னைப்பற்றி நினைக்கவில்லை, தன் எதிர்காலம் எப்படி ஆகும் என்று யோசிக்கவில்லை....

    ஆனால் குழந்தையை பார்க்கும்போது தான் தந்தையின் முக்கியத்துவம் உணர்ந்தாள், தெளிந்தாள், தேக்கி வைத்த சோகமெல்லாம் வெடித்து தீர்த்தாள்?

    கேள்விக்குறியாகி போன வாழ்க்கையை இனி தந்தையில்லாமல் வளர்க்கப்போகும் கொடுமையை நினைத்து அதிர்ந்து நின்றாள்..

    எத்தனை அழகாய் வரிகளில் சோகத்தையும் தாக்கத்தையும் கொண்டு வந்து இப்படி ஒரு கவிதை உங்களால் கொடுக்க முடிந்தது....

    இது கன்னி முயற்சியா ஹுஹும் இல்லை... அருமையான முயற்சி வெற்றியை சாதித்து காட்டி இருக்கிறது... இனியும் தொடருங்கள் மொழி பெயர்ப்பு கவிதைகளை...

    ஹாட்ஸ் ஆஃப் சிவகுமாரன், என் அன்பு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. சிவக்குமாரா! உங்கள் கவிதையில் நுழைந்தபோது வாய்விட்டு வாசித்தேன். வரிக்குவரி என் உச்சத்தானியை உயர்த்திப் பார்த்தேன். அற்புதம். கடைசியில் ஆங்கிலக்கவியின் மொழிபெயர்ப்பு என்று அறிந்தும், உங்கள் சொல்லாட்சியில் கவிதை உயிர்பெற்றிருக்கின்றதல்லவா. சிறப்பாகக் கவிதை எழுதுகின்றீர்கள். ஒவ்வொரு கவிதையிலும் ஓசைநயம் வந்து சேருகின்றது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான கவிதை. அக்கரைக் கவிதை என்றாலும் உங்கள் எழுத்தில் அது இக்கரைக் கவிதை.. நன்று. ;-))

    பதிலளிநீக்கு
  5. படிக்கப்படிக்க காட்சியாய் ஓடியது மனதில்.

    பதிலளிநீக்கு
  6. ”இனி உனக்காக”

    சோகத்திலும், இறுதியில் நம்பிக்கை என்ற சுகம் கொடுக்கும் வரிகளுடன், கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஆங்கில மூலமென்றாலும பொருள் சிதையாமல், சுவை குறையாமல், ஏன் , இன்னும் சற்று கூட்டியே, அழகு தமிழில் யாத்து அளித்திருக்கிறாய். வளர்க உன் திறமை, வாழ்க நீ வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. நான் பார்த்து அவதிப்பட்ட நிகழ்வு இந்தக் கவிதை !

    பதிலளிநீக்கு
  9. சிவகுமாரன் ! வாழ்க வளம் பெற்று!
    உங்களுக்குத் தெரியுமா இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ,ஏழாம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்ற ,என் மாணவர்கள் விரும்பி தத்ரூபமாக நடித்த ஒரு அற்புதம்.
    உங்கள் மொழிபெயர்ப்பு மிக மிக அற்புதம்.என் கண்களில் கசியும் நீரினை தடுக்க முடியவில்லை.
    உங்களுடைய அனுமதி கிடைத்தால் உங்களின் இந்த படைப்பை என் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பேன்.
    நன்றி வாழ்த்துக்களுடன்!

    பதிலளிநீக்கு
  10. இந்த பாடலின் review-வை என் வலைப்பூவில் முன்பே கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  11. டென்னிஸனின் மூலத்தைச் சிதைக்காமலும் தமிழ் வேரின் மணத்தை எடுத்து நிறுத்தியும் கிளர்ந்த இக்கவிதை அபாரம் சிவா.

    நெகிழ்வூட்டும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மொழி மாற்றம் செய்யப்பட்ட கவிதை போல் இல்லை
    சிறப்பான மொழி மாற்றம்
    நல்ல தரமான பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. நம்ம ஊர் டெனிசன். மிகவும் நேர்த்தியாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். டெனிசன், கீட்ஸ், யங், ஏஞ்சலோ என்று நிறைய அற்புதமான கவிஞர்களின் கவிதைகள் காத்துக் கிடக்கின்றன...

    பதிலளிநீக்கு
  14. ஆங்கில மூலம் அப்படியே இருக்க ,தமிழில் உருக்கமாக கவி வடித்துள்ளீர்கள் சிவா.. அவ்வப்பொழுது அக்கரை சென்று எடுத்து தமிழில் தாருங்கள்...

    பதிலளிநீக்கு
  15. எனக்கென்று ஏதுமில்லை வாழ்வில் பாக்கி.
    உனக்காக வாழ்ந்திருப்பேன் உயிரைத் தேக்கி.


    அன்னையின்
    அன்பை
    அலங்காரமில்லாத
    அற்புத நடையில்
    அந்நிய கவிதை என்று
    அறியா வண்ணம்
    அளித்தவிதம்
    அருமை

    பதிலளிநீக்கு
  16. இளமுருகன்ஜூன் 21, 2011 11:40 PM

    அக்கரைக் கவிதை....தாயின் அக்கறைக் கவிதை

    பதிலளிநீக்கு
  17. அழகான சந்தச்சுவையுடன் குமரனின் தமிழ் சுவையும் பாங்குடன் கலக்கப்பட்ட அருமையான கவி விருந்து! நாற்றங்காலில் இருந்து கவனமாய் எடுக்கப்பட்ட நாற்றுகள் அழகாய் நடப்பட்டது போன்று டென்னிஸனிடம் ஆங்கில கரு பெற்ற கவிதை குமரனின் கைகளால் தமிழ் உருப்பெற்றது. வாழ்த்துக்கள் குமரா!!

    பதிலளிநீக்கு
  18. நம் புறநானூறும், அக்கரைக் கவிதையும் ஒரே கதைக்களம். காட்சியைக் கண்முன் கொண்டு வநத அவலச்சுவை.

    பதிலளிநீக்கு
  19. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நன்றி மஞ்சுபாஷினி . முதலில் தயங்கித்தான் இந்த மொழிபெயர்ப்புக் கவிதையை வெளியிட்டேன். உங்கள் பின்னூட்டம் தான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையை தந்தது.
    ஆங்கிலக் கவிதை மூலம் என்றாலும் , இது நாம் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு , மனம் பதைத்த நிகழ்வு தான்.
    மிக்க நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  21. நம் கவிதையை இன்னொருவர் ரசிப்பதே சுகம் . அதிலும் நீங்கள் வாய்விட்டு படித்தீர்கள் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்தி.
    மிக்க நன்றி சந்திர கௌரி மேடம்

    பதிலளிநீக்கு
  22. நன்றி RVS,சத்ரியன், வைகோ சார், GMB சார் & ஹேமா .
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  23. நன்றி தென்றல் . இது பள்ளிப் பாடத்தில் இடம் பெற்றிருக்கிறதா? மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி.யா அல்லது ஸ்டேட்டா?
    உங்கள் மாணவர்களுக்கு படித்துக் காட்டினால் நான் மிகவும் சந்தோசப்படுவேன் மேடம். அது என் பேறல்லவா ? மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  24. \\\இந்த பாடலின் review-வை என் வலைப்பூவில் முன்பே கொடுத்துள்ளேன்.//



    தேடினேன். எங்கும் கிடைக்கவில்லையே . சுட்டி தாருங்கள் மேடம் .

    பதிலளிநீக்கு
  25. நன்றி சுந்தர்ஜி, ஸ்ரீராம் & , ரமணி,

    பதிலளிநீக்கு
  26. நன்றி அப்பாஜி. நீங்கள் குறிப்பிடும் கவிஞர்களின் கவிதைகளை எல்லாம் முதலில் நான் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.. பிறகல்லவா மொழிபெயர்ப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்? டென்னிசன் மாதிரி வேறு யாருடைய கவிதைகள் எளிமையாக இருக்கும்.? கொஞ்சம் டிப்ஸ் தாருங்கள். (ஆங்கிலத்தில் என்னுடைய Vocabulary knowledge ரொம்ப கம்மி. )

    பதிலளிநீக்கு
  27. நன்றி ரசிகமணி. தங்களுக்கு பிடித்த ஏதாவது அக்கரைக் கவிதைகளை சொல்லுங்கள். முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ,ARR தக்குடு & இளமுருகா
    மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  29. நன்றி , இராஜராஜேஸ்வரி மேடம்.
    எனக்கும் இந்தக் கவிதை , நம் புறநானூற்றுக் கவிதையைத் தான் நினைபடுத்திற்று. அவலச்சுவை தான்.ஆனாலும் எங்கும் நிலவும் சுவை(?) அன்றோ ?

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. அன்பு சிவா! எப்படி இதைப் பார்க்கத் தவறினேன்? அண்மையில் , அருணாச்சலப் பதிவைப் பார்த்துவிட்டு அப்படியே போய் விட்டேன் போலிருக்கிறது.

    இந்த டென்னிசன் கவிதை எட்டாம்வகுப்பில் படித்தது.. இன்னமும் அதன் வரிகள் மனப்பாடமாய்.. என்னை மிகவும் பாதித்த கவிதை..

    இந்தத் தமிழாக்கம் பற்றி என்ன சொல்ல?. மொழிபெயர்ப்பில் நழுவிப்போவதே மூலக் கவிதானுபவம் என்று சொல்வார்கள். ஆனால் உன் மொழிபெயர்ப்பில் அதை சிதைக்காமல், சந்தவேட்டையில் அந்தம் தொலைக்காமல் இழைத்திருக்கிறாய்.

    ஆங்கிலக் கவிதைகளில் ஆயிரமாய் வைரங்கள் கிடக்கின்றன.. அவ்வப்போது உன் ரசவாதத்தில் தமிழன்னையை மகிழ்விப்பாயா என் செல்வமே?

    27 ஜூன், 2011 9:23 pm

    பதிலளிநீக்கு
  32. நன்றி மோகன் அண்ணா.மொழிபெயர்ப்பை சுலபமாய் செய்துவிட்டேன்.ஆனால் மிகுந்த பயத்துடன் தான் பதிவிட்டேன். தங்களின் பின்னூட்டம் உற்சாகத்தைத் தருகிறது. மேலும் முயற்சிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  33. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு
  34. மிக நல்ல முயற்சி! வாசிக்க இதமாக, ஏற்றதாக உள்ளது. பிழை ஒன்றுமில்லை சிவகுமார சகோதரா! ரசித்தேன் நிறைந்த வாழ்த்துகள்!
    http://kovaikkavi.wordpress.com
    Veth. Elangathilakam.
    Denmark.

    பதிலளிநீக்கு
  35. நல்ல மொழிபெயர்ப்பு உணர்வூட்டுவதாய்...நம் சங்க இலக்கியப்பாடல் ஒன்று இதே பொருளுடன் படித்த நினைவுள்ளது...தேடிப்பார்த்துச்சொல்கின்றேன் சார்...நன்றி

    பதிலளிநீக்கு
  36. உன்னதமான மொழிபெயர்ப்பு. !!! இதை விடச் சிறப்பாக யாரும் மொழிபெயர்த்து விட முடியாது....!!! It is God's gift to you. அபாரம்...அற்புதம்...!!! 50 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த ஆங்கிலக் கவிதையை, வகுப்பறையில் கற்றுக் கொடுத்த ஆங்கில ஆசிரியரை விட,
    சிறப்பாக, மொழிபெயர்த்துள்ளீர்கள்...சிவக்குமரன்....!!! அன்று எனது வயது 16.பத்தாம் வகுப்பு. அர்த்தம் தெளிவாகத் தெரிந்தாலும், இள வயது காரணமாக, கண்களில் கண்ணீர் முத்துக்கள், கண்களை மறைத்து, பார்வைக்குத் திரையிடவில்லை...!!! ஆனால் இன்றோ...???? !!!!
    Silver tears start rolling down my cheeks....So, a temporary stop...
    ( NB.:- இது போல,
    Shelley's "Ozymandias"

    I met a traveller from an antique land
    Who said: "Two vast and trunkless legs of stone
    Stand in the desert. Near them, on the sand,
    Half sunk, a shattered visage lies, whose frown,
    And wrinkled lip, and sneer of cold command,
    Tell that its sculptor well those passions read
    Which yet survive, stamped on these lifeless things,
    The hand that mocked them and the heart that fed:
    And on the pedestal these words appear:
    'My name is Ozymandias, king of kings:
    Look on my works, ye Mighty, and despair!'
    Nothing beside remains. Round the decay
    Of that colossal wreck, boundless and bare
    The lone and level sands stretch far away.
    இந்த ஆங்கிலக் கவிதையையும், உங்கள் சிறப்பான மொழிபெயர்ப்பில்,கற்பனைத்திறம் மிக்க உங்கள் வார்த்தைகளில் வடிவமையுங்களேன்...மகிழ்ச்சியடைவேன்.
    என் உள்ளம் கனித நல்லாசிகள்....

    பதிலளிநீக்கு
  37. https://www.google.co.in/search?q=Ozymandias&biw=1366&bih=643&tbm=isch&imgil=xrXDI8JxuId-YM%253A%253BFaSfJIa8hziKBM%253Bhttps%25253A%25252F%25252Fwww.youtube.com%25252Fwatch%25253Fv%2525253DhtN7sOi8VSI&source=iu&pf=m&fir=xrXDI8JxuId-YM%253A%252CFaSfJIa8hziKBM%252C_&usg=__CFRWbsGhmv5z7N2M9WVu63c64co%3D&dpr=1&ved=0ahUKEwj2w_iAzf7LAhUKno4KHdsIABoQyjcIOw&ei=4WgHV7bPK4q8ugTbkYDQAQ#imgrc=xrXDI8JxuId-YM%3A
    Shelley's "Ozymandias"

    I met a traveller from an antique land
    Who said: "Two vast and trunkless legs of stone
    Stand in the desert. Near them, on the sand,
    Half sunk, a shattered visage lies, whose frown,
    And wrinkled lip, and sneer of cold command,
    Tell that its sculptor well those passions read
    Which yet survive, stamped on these lifeless things,
    The hand that mocked them and the heart that fed:
    And on the pedestal these words appear:
    'My name is Ozymandias, king of kings:
    Look on my works, ye Mighty, and despair!'
    Nothing beside remains. Round the decay
    Of that colossal wreck, boundless and bare
    The lone and level sands stretch far away.

    பதிலளிநீக்கு