திங்கள், டிசம்பர் 05, 2011

ஊருக்கெல்லாம் வீடுகட்டி
















(ஆறுமுகம் கொத்தனார் - அஞ்சலை சித்தாள் தம்பதியினரின் உரையாடல் )

அஞ்சலை :
ஊருக்கெல்லாம் வீடுகட்டி 
  ஒழைச்சிக் களைக்கிறியே
பேருக்கொரு சின்ன வீடு
  நமக்கு உண்டா சொல்லு மச்சான் .


ஆறுமுகம்:
ஆண்டவன் கொடுத்ததெல்லாம் 
  அளவா இருக்குதடி
வேண்டாத ஆசைகளை 
  வீணாய் வளக்காதடி.

அஞ்சு:
நேத்தடிச்ச மழைத்தண்ணி 
  நெறஞ்சிருக்கு வீட்டுக்குள்ள 
காத்தடிச்ச வேகத்தில 
  கலைஞ்சிருச்சு கூரையெல்லாம் 


பொத்தல் குடிசையில
  பொட்டுத் திண்ணையில 
எத்தனை நாள் வாழுறது ?
  ஏதாச்சும் பண்ணு மச்சான் 

ஆறு :
மாடி வீட்டைக் கண்டு 
  மனசு மயங்காதேடி 
கோடிப்பணம் இருந்தாலும் 
  கெடைக்காதடி இந்தசுகம் 


ஓலைக் குடிசைக்குள்ள 
  ஒன்னோட இருக்கையில 
வேலை செஞ்ச களைப்போடு 
  வேதனையும் தீருமடி.

மாளிகை வீட்டுக்காரன்
  மனசார தூங்கலைடி
தூளி அசைஞ்சாலும் 
  துடிச்சு முழிக்கிறான்டி


ஆசை அதிகரிச்சா 
  அப்புறமா கஷ்டம் தான்டி 
மீசைக்கும் கூழுக்குமாய் 
  மீளாத் துயரந்தான்டி     

அஞ்சு:
அழகான ஓட்டு வீடு
  அருகே ஒரு பூந்தோட்டம் 
பழக ஒரு பசுமாடு
  பார்த்திருக்க ஒங்க முகம் 


ஆசை அதிகமில்லை 
  அளவாத்தான் கேட்கிறேன் நான் 
காசுபணம் இல்லாட்டி 
  கடன்வாங்கி கட்டு மச்சான் 


ஆறு:
என்னைநம்பி கடன்கொடுக்க 
  எவன் இருக்கான் ஊருக்குள்ள ?
உன்னைச்  சொல்லி குத்தமில்லை -உனக்கு 
  உலகம் புரியவில்லை .

அஞ்சு:
கட்டிவந்த தாலியில
  தங்கம் கொஞ்சம் இருக்கு மச்சான்
வட்டிக்கு வச்சுப்புட்டா 
  வழி கிடைக்கும் வீடுகட்ட .

ஆறு:
கழுத்து நகை பறிச்சு 
  கட்ட வேணாம் வீடு ஒண்ணும்
உழைச்சு சம்பாதிச்சு 
  உனக்காக கட்டுறேன்டி.


இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு 
  ஏதாச்சும் கையில் சேர்த்து 
நின்னு நிலைச்சுக்கிட்டு 
  நெனைக்கலான்டி வீடுகட்ட 


அஞ்சு:
இப்படியே சொல்லி சொல்லி 
  என்வாயை அடைச்சிடுறே.
எப்பத்தான் என்பேச்சு
  எடுபடுமோ தெரியவில்லை 


ஆறு:
வேலை நேரத்தில 
  வெட்டிப்பேச்சு பேசுறேன்னு 
மேலே விழுந்து நம்மை 
  மேஸ்திரிதான் கத்துவாரு 

ஓயாம சத்தம்போட்டா 
  ஒதைவிழும் சொல்லிப்புட்டேன்
வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு 
  வந்த வேலை பாரு புள்ள..


35 கருத்துகள்:

  1. //எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே! //
    உண்மையிலேயே மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.மக்கள் மட்டுமல்ல; அரசுகளும் தேவையான கவனம் செலுத்துவதில்லை!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை நண்பரே..

    சென்னை பித்தன் ஐயா, போட்ட கருத்துரை என் தளத்தில் வந்து இருக்கவேண்டியது என நினைக்கிறேன்... :)

    பதிலளிநீக்கு
  3. சிவகுமரன் அவர்களே! "ஓயாம சத்தம் போட்ட ,ஒதை விழும்" என்ற வரிகள் உங்கள் இயல்புக்கு மாறாக உள்ளதே!---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  4. 'ஊருக்கெல்லாம் வீடுகட்டி..' என்னும் தலைப்பே, உழைப்போரின் அவலத்தைக் கதை கதையாய்ச் சொல்லும் கவிதையாக இருக்கிறது.

    கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் அக்கால இதுபோன்ற கவிதைகள் என் நினைவுக்கு வருகின்றன. எழுதிக் குவிக்கும் அத்தனையும் பிற்காலத்து மகுடம் தரிக்கப் போவது உறுதி. 'காலம் ஒன்று கனிந்து வரப்போகுது; காத்திருங்கள்' என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

    அன்பான வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. உழைப்போரின் அவலத்தை சொல்லும் நல்ல கவிதை நண்பரே...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அஞ்சலையின் நியாயமான ஆசையும் ஆறுமுகத்தின் சமாளிஃபிகேசன் கவிதையும் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  7. அஞ்சையின் ஆதங்கமும் ஆறுமுகத்தின் ஆறுதலும் நிறைய விஷயங்கள் சொல்கிறது சிவா!

    மற்றுமொரு நல்ல படைப்பு! :-)

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. எளியோரின் மன அவலத்தை தங்கள் எழுத்து, இசையோடு படிப்பது போல படிக்க வைத்தது மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  10. என் மனதிலும் தோன்றிய அதே வரிகள் kashyapan சார்!

    எளிமையான கவிதை சிவகுமாரன்.. மிகவும் ரசித்தேன் - அந்த ஒரு வரி மாற்றியிருக்கலாமோ? :)

    பதிலளிநீக்கு
  11. தேவைகள் குறித்த ஆண், பெண் சிந்தனைகளும் ,அணுகு முறைகளும் சிவகுமாரன் வரிகளில் அழகு ( பழகு.?)
    தமிழில் பரவசமளிக்கிறது. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. ”காடு வெளெஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்” என்றார் பட்டுக்கோட்டை.காணிநிலம் வேண்டும் என்று பராசக்தியைக் கேட்டான் பாரதி. இங்கே சிவாவின் குரல் உரத்து ஒலிக்கிறது இந்தத்தொழிலாளர்கள் மூலம்!நன்று
    (தவறு எவ்வாறு நேர்ந்தது எனத் தெரியவில்லை.மன்னிக்கவும்)

    பதிலளிநீக்கு
  13. நிகழ்காலம் தந்த பரிதவிப்பும், எதிர்காலம் குறித்த பயமும் அஞ்சலையின் வரிகளில். அவள் கவலையைத் தீர்க்கவியலாத் தவிப்பும், இப்போதைய நிலையைப் பத்த்திரப்படுத்தும் முனைப்பும் ஆறுமுகத்தின் வரிகளில்! ஆன்டாண்டு காலமாய் உழைத்தும் நிலையற்ற அவர்களின் நிலையை ஒருங்கே காட்சிப்படுத்தும் கவிதை. மனம் தொட்டது சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி சென்னைப் பித்தன் சார்... தங்களின் மறு வருகைக்கு..
    நன்றி வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  15. காஷ்யபன் அய்யா.
    என் இயல்புக்கு மாறாகவா?
    எது என் இயல்பு?
    இறுதியில் பஞ்ச் வைத்து எழுதினால் , அது தான் இயல்புக்கு மாறாய் இருக்கும்.
    அந்த வரிகளில் ...
    இல்லாதோரின் இயலாமை தெரியவில்லையா.
    இவை வெறுமனே .. அஞ்சலை ஆறுமுகத்தின் உரையாடல் மட்டும் என்றா நினைக்கிறீர்கள். ?
    வாடகை வீட்டில் தான் தன் உயிர் பிரியக் கூடுமோ என்று விசனப்படும் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வு.

    தேர்தல் வரும் .. நாம் யாரென்று காட்டுவோம் .. தலைவிதி மாறும் . என்றெல்லாம் இறுதி வரிகளை எழுத எனக்கு மனம் வரவில்லை.

    உண்மையான , யதார்த்தமான உரையாடல் இது.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஜீவி சார்.
    தங்களின் பாராட்டுக்கும் , உற்சாகமான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.

    \\\எழுதிக் குவிக்கும் அத்தனையும் பிற்காலத்து மகுடம் தரிக்கப் போவது உறுதி.///

    எனக்கு நான் முன்பு எழுதிய " எழுதிக் குவித்துநான் என்னபயன் கண்டேன் " என்ற வெண்பா நினைவுக்கு வருகிறது.
    ( சொன்னால் நீங்கள் கோபிப்பீர்கள் )

    December 10, 2011 3:15 AM

    பதிலளிநீக்கு
  17. தங்களின் புதிய வருகைக்கு நன்றி ரெவரி.
    நன்றி கடம்பவன குயிலே.
    நன்றி RVS
    நன்றி ரத்னவேல் அய்யா
    இசையோடு படித்ததற்கு நன்றி திருமதி ஸ்ரீதர், .

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி அப்பாத்துரை

    \\\அந்த ஒரு வரி மாற்றியிருக்கலாமோ? :)//

    எந்த வரியையும் மாற்ற முடியாது அப்பாஜி. ஏனெனில் இது நான் இப்போது எழுதிய கவிதை அல்ல. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் "வாசுகி" என்றோர் மாதமிருமுறை இதழ் வெளிவந்தது. கொத்தனார் சித்தாள் படம் போட்டு - அதற்கு கவிதை எழத போட்டி வைத்த்திருந்தார்கள்.
    அதற்காக எழுதியது. ( இப்படி ஒரு கவிதையை .. அதுவும் மரபுக் கவிதையை எந்தப் பத்திரிகை பிரசுரிக்கும் ?)
    அந்தக் கவிதை எழுதும் போது எனக்கும் இது போன்ற நிலை வரும் என்று நான் நினைத்ததில்லை.
    சும்மா வீடு வீடுன்னு ஏன் நச்சரிக்கிறே ? இருக்குறவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடு என்று நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு.

    இந்த உரையாடல் ... பல இல்லங்களில் நடக்கும் ஒன்று. தாங்கள் அறிய வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  19. அழகு தமிழ் , பழகு தமிழ் என்றெல்லாம் ரசித்துப் படித்து பரவசுப்படும் GMB அய்யா.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. \\நிகழ்காலம் தந்த பரிதவிப்பும், எதிர்காலம் குறித்த பயமும் அஞ்சலையின் வரிகளில். அவள் கவலையைத் தீர்க்கவியலாத் தவிப்பும், இப்போதைய நிலையைப் பத்த்திரப்படுத்தும் முனைப்பும் ஆறுமுகத்தின் வரிகளில்! ஆன்டாண்டு காலமாய் உழைத்தும் நிலையற்ற அவர்களின் நிலையை ஒருங்கே காட்சிப்படுத்தும் கவிதை.//


    கவிதையை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு பின்னூட்டமிட்டது மகிழ்ச்சியைத் தருகிறது கீதா மேடம்.
    கவிதாயினி வார்த்தைகளில் வாழ்த்து பெறுவது கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  21. கார்த்திகைத் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....

    பதிலளிநீக்கு
  22. இப்படியே சொல்லி சொல்லி
    என்வாயை அடைச்சிடுறே.
    எப்பத்தான் என்பேச்சு
    எடுபடுமோ தெரியவில்லை /

    மனம் கனக்கும் நிதர்சன வரிகள்..

    பதிலளிநீக்கு
  23. //இருக்குறவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடு

    wow!

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. உங்களின் சொல்லாட்சியும் பாத்திரங்களின் வறுமையும் இந்த இருவரின் வாய் வழியே புகுந்து தாட்களில் பிறந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும் அசலாய் இருப்பது அற்புதம் சிவா.

    இப்போதெல்லாம் படிப்பதற்குக் கண்கள் அதிகம் ஒத்துழைப்பதில்லை.படிக்கத் தவறவிடுவதன் காரணம் வேறெதுவுமில்லை.படிக்காமல் விடுபட்டதற்காக நான் வருந்துகிற எழுத்துக்களில் உங்களதும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  26. நன்றி அம்பாளடியாள்
    நன்றி ராஜேஸ்வரி மேடம்.
    நன்றி அப்பாஜி
    நன்றி சுந்தர்ஜி. .

    பதிலளிநீக்கு
  27. மாளிகை வீட்டுக்காரன்
    மனசார தூங்கலைடி
    தூளி அசைஞ்சாலும்
    துடிச்சு முழிக்கிறான்டி


    enjoyed the lines. Super.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லாமார்ச் 18, 2012 7:19 AM

    நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லாமார்ச் 18, 2012 7:20 AM

    நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு