புதன், ஜூன் 06, 2012

கேள்விக்கென்ன பதில்?


வான்எனும் வீதியில் வலம்வரும் மேகம்
  வான்மழை நீராய் வருவது எப்படி?
தேன்மழை நீர்த்துளி தெறித்துப் பறந்து
  திரைகடல் சிப்பியில் வீழ்வது எப்படி?
மீன்வகைச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி
  மின்னிடும் முத்தாய் மாறுவ தெப்படி?
நானிதன் ரகசியம் அறிந்திட முனைந்து
  நாட்களை மட்டும் நாயெனக் கழித்தேன்.

ஒருதுளி விந்து உள்ளே விழுந்து
  உயிர்தனைப் பெற்று வளர்வது எப்படி?
சிறு உடல் கைகால் முளைத்து வளர்ந்து
  சின்னக் குழந்தை ஆவது எப்படி?
ஒருதாய் வயிற்றில் வளர்ந்த போதும்
  உதிரம் வேறாய் ஆவது எப்படி?
ஒருவரும் பதிலை உரைக்க மறுத்தால்
  அறியாச் சிறுவன் அறிவது எப்படி?

உடலுக் குள்ளே உள்ளது காற்றெனில்
  உயிரெனும் காற்று உறைவது எங்கே?
சடலம் விட்டுச் செல்லும் காற்று
  சாவுக் கடுத்து செல்வது எங்கே?
"நடப்பது என்றும் நம்கையில் இல்லை
  நாடக மேடையில் நாம்வெறும் பொம்மை.
கடவுள் தானிதன் காரணம் என்றால்
  கடவுள் என்பவன் யாரவன் எங்கே?

-சிவகுமாரன்

(1988 ஆம் ஆண்டு கேள்விகளால் வேள்விகள் செய்த விளங்காப் பருவத்தில் விளைந்த கவிதை)

22 கருத்துகள்:

 1. சிந்திக்க தொடரும்
  இளைய பருவத்தில் எழும் வினாக்கள்
  ரெம்பவே நிறையா சிந்தனை செய்து இருக்கிறீர்கள் தோழரே

  பதிலளிநீக்கு
 2. சிவகுமரன்...

  ஜனனமே கவிஞனாகத்தான் உருவெடுத்திருக்கிறது. விளங்கா வயதில் எழுதிய கவிதை வெகு துலக்கமுடன். துள்ளலுடன். தத்துவ விசாரணையுடன். இன்றுவரை அது உறுதிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இது தமிழ்மொழிக்கு வாய்த்த பயன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இதே கேள்விகளுக்கு நீங்கள் இத்தனை வருடங்கள் பொறுத்து பதில் சொன்னாலோ மறுகேள்வி கேட்டாலோ கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. //உடலுக் குள்ளே உள்ளது காற்றெனில்
  உயிரெனும் காற்று உறைவது எங்கே?
  சடலம் விட்டுச் செல்லும் காற்று
  சாவுக் கடுத்து செல்வது எங்கே?//

  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 5. உடலது இருந்த இடம்தான் எதுவோ,
  உடலும் மறைந்த இடம்தான் எதுவோ !
  இடமது மறைந்தது "வெளி "தானென்றால்,
  "வெளி"யினில் மறைந்தது இடமேயாகும்!

  பி.கு: வெளி=ஆகாயம்= space

  ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 6. அழகான கேள்விகள்.
  சில கேள்விகளுக்கு பதில் இல்லை.
  சில பதில்கள் காலம் கடந்து கிடைக்கும்.
  சில கேள்விகளுக்கோ தவறான பதில்கள்..

  இளமையின் யோசனை அபாரம்!

  பதிலளிநீக்கு
 7. அருமையான கேள்விகள்...

  கவிஞரே இளம்வயதில் எழுந்த கேள்விகள் என்று எழுதியுள்ளீர்கள். அதிலிருந்தே தெரிகிறது நீங்கள் வளர்ந்த பெருங் கவிஞர் என்று...
  அதனால்...

  உங்கள் கெள்விக்கான பதில்களை நீங்களே கவிதை பாணியில் எங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. கவிஞரே...

  உங்களின் கவிதை என்னை பலமுறை படிக்கத் துர்ண்டியது. அழகான கவிதை.
  ஆழமான கருத்துள்ள கவிதை. விரும்பி படித்துச் சுவைத்தேன்.
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஹரணி சார்.
  தங்கள் பாராட்டு பெருமிதம் கொள்ள வைக்கிறது - நான் அதற்கு முழு தகுதியற்றவன் என்றாலும்.

  பதிலளிநீக்கு
 10. அப்பாஜி.
  இந்த கவிதை எழுதி சில வருடங்களுக்கு பிறகு "கடவுள் எங்கே?"
  என்றொரு கவிதை எழுதி என் சித்தப்பாவிடம் பாராட்டும் என் அப்பாவிடம் திட்டும் வாங்கினேன்.
  http://sivakumarankavithaikal.blogspot.in/2010/09/kadavul-engay.html

  பதிலளிநீக்கு
 11. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாய் சார்

  பதிலளிநீக்கு
 12. காஷ்யபன் அய்யா,
  திருமந்திரம் போல் இருக்கும் இந்தப் பின்னூட்டக் கவிதையை எழுதியது தாங்களா?
  அருமை.

  பதிலளிநீக்கு
 13. ||சில கேள்விகளுக்கு பதில் இல்லை.
  சில பதில்கள் காலம் கடந்து கிடைக்கும்.
  சில கேள்விகளுக்கோ தவறான பதில்கள்//

  சில கேள்விகளுக்கு பதில்கள் - வேறு சில கேள்விகள்.

  சரியா மோகன்ஜி அண்ணா?

  பதிலளிநீக்கு
 14. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது என்றால் அது தமிழின் பெருமை. நன்றி அருணா செல்வம்

  பதிலளிநீக்கு
 15. சிவகுமரன்.

  கடவுள் எங்கே கவிதையையும் தேடிப் படித்துவிட்டேன். இந்தப் பதிவிற்கு சொன்ன கருத்துதான் கடவுள் எங்கே கவிதையைப் படித்ததும் தோணியது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. சிவகுமரன் அவர்களே! " வெளி"என்ற தலைப்பில் ஒரு இடுகை இட்டிருந்தேன்.இயற்கையின் தர்க்கவியல் என்ற நூலிலிருந்து எடுத்தது. மார்க்ஸ் சொன்னதுதான். கவிதைஎன்றால் அதனை எழுதியது நான் தான்.திருமூலர் சொன்னது பற்றி தெரியாது---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 17. எனக்குள்ளும் இருக்கும் நெடுநாள் கேள்வி இது. பதில் சொல்வார் தான் யாருமில்லை.

  கவியாக்கம் அருமை சிவா.

  பதிலளிநீக்கு
 18. கவிஞரே.... “கடவுள் எங்கே?” கவிதை அருமையிலும் அருமைங்க.

  நல்ல ஆழ்ந்த கருத்தை அலட்டாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
  ஒவ்வொரு அடியிலும் கடவுள் தெரிகிறார்.

  உண்மையில் உங்கள் கவிதை என் மனத்திற்கு நிறைவைத் தந்தது.
  நன்றி சொல்லி வாழ்த்தி வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நாட்களை மட்டும் நாயெனக் கழித்தேன்//

  சிந்தையின் வீச்சு கேள்விக‌ளாக‌ விடைதேடும் வாழ்வில் நிலையுய‌ர்ந்து சித்த‌னாகிறாய் சிவா.

  பதிலளிநீக்கு
 20. நன்றி நிலா மேடம். சித்தனாவது எல்லாம் சாதாரணமானதா ? ஆனாலும் தங்கள் வாயால் கேட்கும் போது மனம் துள்ளுகிறது. ( மனம் துள்ளினால் அவன் அவன் சித்தனல்லன்)

  பதிலளிநீக்கு
 21. நன்றி
  ஹரணி சார், காஷ்யபன் அய்யா, சத்ரியன். & அருணா செல்வம்
  நன்றி

  பதிலளிநீக்கு