முல்லைப் பெரியாற்றில் மூழ்கிப் போயின பாவப்பட்ட பயணிகளை பாதி வழியில் இறக்கிய கட்டணம் உயர்ந்த பேருந்துகள்
கூடங்குளத்தில் வெடித்துச் சிதறின இரு வேளை தேநீரை ஒருவேளை ஆக்கிய பால் பாக்கெட்டுகள்.
தானே புயலில் தரை மட்டமாகின கோடிகளை விழுங்கிய தலைமைச் செயலகமும். கோர்ட்டுக்குப் போன நூலகமும்.
முப்பதாண்டு கால தோழியின் பிரிவில் மறந்தே போயின அடித்த கொள்ளையும் அனுபவித்த சிறையும்.
ஏற்றிய விலையையும் இம்சை அரசையும் இடைத் தேர்தல் தீர்ப்பளித்து ஏற்றுக் கொண்டார்கள் இனிய தமிழ் மக்கள்.
அசைக்க முடியாதினி அம்மாவை யாரும்.
இன்னும் கூட ஏற்றலாம் விலையை கல்லா கட்டலாம் கஜானா(!?) நிரப்பலாம்
மக்கள் கிளர்ந்தால் மறக்கடிக்க மவிவாய் கிடைக்குது மருந்துகள் ஆயிரம்.
மாதமிருமுறை மந்திரிசபை மாற்றலாம். தீய சக்தியைத் திட்டித் தீர்க்கலாம். துரத்தியடித்த தோழியோடு கூடலாம். இலங்கை நெருப்பில் எண்ணெய் ஊற்றலாம் இன்னும் கொஞ்சம் இலவசம் தரலாம். குடிசையில் கொடுத்து குடிக்கவைத்து பிடுங்கலாம்.
ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது அல்லல் போயிற்றா? - பல் ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும் அவலம் போயிற்றா ? மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும் மேன்மை தெரிகிறதா ? - இல்லை மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய் மேலும் தொடர்கிறதா?
நேற்றைப் போலே இன்றும் இருந்தால் நாளைக்கென்ன பயன்? - அட நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம் நிலத்திற் கென்ன பயன் ? காற்றைப் போலே காலம் எல்லாம் வீசிட வேண்டாமா? - நம் காலம் முடிந்து போனதும் நம்மைப் பேசிட வேண்டாமா ?
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நமக்கு பங்கென்ன ? - அட நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு நகர்வோம் வேறென்ன ? மாற்றம் பிறக்க மகேசன் என்ன மண்ணில் பிறப்பானா ? - நம் மந்தையை மேய்க்க மாயக் கண்ணன் மறுபடி வருவானா ?
ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால் உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ? உதறிட வேண்டாமா ? நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம் வாங்கிடத் துணிவாரா ? -இந்த நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை நசுக்கிட வேண்டாமா ?
கோடிக் கணக்கில் கொள்ளை அடித்து குவித்ததை மீட்போமா ?- அங்கே குவிந்ததை எல்லாம் கொணர்ந்துநம் வறுமைக் கோட்டை அழிப்போமா ? கூடித் திருடும் கொள்ளையர் வீழ குழிபறித் திடுவோமா - வெறுங் கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர் கொள்கை வகுப்போமா ?
உண்ணா விரதம் ஊர்வலம் தாண்டி ஓர் உறுதி எடுப்போமா ? இனி ஊழல் லஞ்சப் பேய்களை எல்லாம் உலுக்கி எடுப்போமா? அண்ணா காட்டிய வழியில் வந்தோர் ஆட்டம் தடுப்போமா ? - இனி அன்னா காட்டிய வழியில் ஒன்றாய் அணிவகுத் திடுவோமா ?