புதன், அக்டோபர் 12, 2011

கவச குண்டலம்

உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு 
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற 
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.

வீறிட்டு வெளிக்கிளம்பி 
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .


பொங்கிவரும் அலைநடுவே 
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத 
  காலாவதி பழஞ்சரக்கு 
அடைகாக்க முடியாத 
  ஆனையிட்ட பெருமுட்டை.

வர்ணங்கள் வெளுத்திட்ட 
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன 
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற்க் கடகு வைக்க 
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை 
  கவிதையல்ல சத்தியமாய்.  

                                                                                   -சிவகுமாரன் 

  

31 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாங்க வாங்க...
சந்தம் மிக இனிமை...
தொடருங்கள்..

அப்பாதுரை சொன்னது…

வாராது வந்த மாமணி தாராது தந்த தாண்டவம். உக்கிரத் தாண்டவம்.
வருக.

rajamelaiyur சொன்னது…

//
கனவுலகின் வீதிகளில்
கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
நம்பிக்கை வேரோட்டம்


//

அழகான வரிகள்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில் ...

பாவம் நடிகர் விஜய்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை... பயன்படாத அணிகலன்கள் ம்ம்ம்ம்ம்

மோகன்ஜி சொன்னது…

பொங்கி வருகின்ற இந்த புது வெள்ளம் தங்கு தடையின்றி தொடரட்டும் தம்பி! வரிகள் நெஞ்சில் சாதிராட்டம் போட்டபடி...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

வருக,வருக

பத்மநாபன் சொன்னது…

கவிதையையே அணிந்து வந்து இது கவிதையல்ல என்று சொல்லும், சொல் சித்திரம் உங்களால் தான் வரைந்து வண்ணம் தீட்ட முடியும் சிவா...

Yaathoramani.blogspot.com சொன்னது…

மீண்டும் வந்ததற்கும்
மீனாட்சியின் அருளோடு
அருமையான கவிதை தந்ததற்கும்
மனமார்ந்த நன்றி
கட்டு மரங்களுக்குத்தான் தெரியும்
கலங்கரை விளக்கத்தின் அருமை
கலங்கரை விளக்கம் அறியாது போயினும் கூட
தொடர வாழ்த்துக்கள்

Aathira mullai சொன்னது…

//அவசரத்திற்க் கடகு வைக்க
ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
கவிதையல்ல சத்தியமாய். //

கவி தான வீரருடன் வெட்டிப்பிரிக்க இயலாது ஒட்டிப்பிறந்த இந்தக் கவச குண்டலங்கள் கவிக் கொடையாக உலக மக்களின் சிந்தையைக் குளிர வைக்கும். செம்மை படுத்தும். இடர்கள் மறைய... எழுச்சியான மனத்தின் கவிகள் தொடர.. வாழ்த்துகள்.. வாழ்த்துகள் சிவா.

thendralsaravanan சொன்னது…

மன பாரங்கள் கடந்து,கவிதைச் சோலையை மறுபடி பூக்க வைத்த தங்கள் வரவு நல் வரவாகுக!
கவிதை சாரலில் நனைய காத்திருந்த எங்களுக்கு அழகான உங்கள் எழுச்சி கவிதை , வெடித்து புறப்பட்ட வார்த்தை சரங்கள், நீங்கள் தொடர்ந்து கவிதைச் சாரல் பொழிவீர்கள் என்ற பெரும் நம்பிக்கைத் தந்துள்ளது.
வாழ்க நலமுடன்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கர்ணனுக்கு மறந்துபோன
கடைசிநேர அஸ்திரங்கள்.

அருமையாய் முகிழ்த்த
அற்புதமான கவிதை வ்ரிகள். பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

kowsy சொன்னது…

கவிதை அருமை. இறுதிவரிகள் மிகச்சிறப்பு

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதையல்ல சத்தியமாய்...

நிலாமகள் சொன்னது…

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
உலகளக்கும் சிறகோசை .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
குருவிகளின் சிறு கூச்சல் //

அழ‌க‌ழ‌கா சொல்வ‌து உங்க‌ வாடிக்கைதானே சிவா.

G.M Balasubramaniam சொன்னது…

அன்பு சிவகுமரா, எழுத்துக்களில் எண்ணங்களின் உயிரோட்டம். உணர்ச்சிப் பிரவாகம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, ஏற்கனவே சில வரிகளைப்படித்திருப்பதுபோல் தோன்றுகிறதே.ஏன் என்று உனக்குத் தெரியுமா.?

r.v.saravanan சொன்னது…

கருத்தரித்த சிறுகுழந்தை
காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
உள்ளடக்கும் தாய்முனகல்.

கனவுலகின் வீதிகளில்
கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
நம்பிக்கை வேரோட்டம்


இந்த வரிகள் ரசித்தேன் அருமை
சிவகுமாரன்

தீபாவளி வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

சில புதிய வார்த்தைகளின் கையாடல் கண்டு பிரமித்தேன் ..
வாழ்த்துக்கள் ..

ஜீவி சொன்னது…

எல்லாகமே பிரமாதம்
எதை எடுத்துச் சொல்வது
எதை விடுத்து விடுவது
என்று தெரியாத சங்கடம்!

இடையே
நிறையச் சொன்னால்
நீர்த்துப் போய்விடுமோவென்று
நியாயமான பயம் வேறு

அடடா அபாரம் அட்டகாசமென
கைத்தட்டிக் களிப்பதை விஞ்சி
மனத்தில் வந்தமர்ந்த மாண்பை
மாநிலத்திற்கு சொல்ல விழைந்தேன்

எல்லாச் செல்வமும் பெற்று
வாழிய நீ! வாழிய பல்லாண்டு!

மாலதி சொன்னது…

இப்படி எளிமையாக மக்களின் சித்தாந்தமாக இருக்க்வேண்டியவைகள் இந்த நறுக்குகள் உண்மையில் இவைகள் மக்கள் முன் பாடமாகவைக்கப்பட வேண்டியவைகள் காரணம் இன்றைய வாழ்வில் இருந்து விலகியுள்ள எளிமையை மக்கள் முன் வைக்கப் படவேண்டும் பாராட்டுகள்

ananthu சொன்னது…

கவிதை அருமை ...

ஹேமா சொன்னது…

சந்தத்தோடு கருத்தையும் இணைப்பது அற்புதம்.என்னால் முடியவில்லை !

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய சந்தங்களுடன்கூடிய அருமையான கவிதை .நல்ல பொருள்பட எழுதியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் சகோ .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

ஹ ர ணி சொன்னது…

குருவிகளின் சிறுகூச்சல்.உலகளக்கும் சிறகோசை...அடைகாக்க முடியாத ஆனை முட்டை...அருமையான ஞானவெளிச்சமிடும் வரிகள் இவை சிவகுமரன். தொடர்பணிகள் வரயியலவில்லை. இனி குறைந்த இடைவெளிகளில் வருவேன். சொல்லாளுமை மிக்க உங்களின் கவியாற்றல் என்றும் மிளிர இறைவனை வேண்டுகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தக்குடு சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

kashyapan சொன்னது…

அன்புசிவகுமரா! கரிசன்மன உன் விசாரிப்புக்கு நன்றி ! கவிதை என்ற கவசகுண்டலத்தோடு மீண்டு வந்த மகிழ்ச்சி எனக்குப் போதும் மகனே வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

காத்திருந்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Rathesh சொன்னது…

கவிதை உங்களுக்கு கவச குண்டலம் தான்.
கர்ணன் மாதிரி கழற்றி (அறுத்து) கொடுத்து விடாதீர்கள்.
அள்ளித் தாருங்கள் தானமாய் கவிதைகளை.

சபாபதி சொன்னது…

கவிதையல்ல சத்தியமாய்.
...
ஆமாம்
இவை உணர்ச்சி குவியல்கள்.
காலத்தால் கவனிக்கப்படாத
ஒரு கவிஞனின் மனக் குமுறல்கள்.
வல்லாளாரின்
" கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன .

சிவஹரி சொன்னது…

இனிய வரிகளாக கவசகுண்டலம் அமைந்திருக்கின்றது சகோ.!

நற்கவி படைத்தளித்தமைக்கு நன்றி.!