திங்கள், மார்ச் 04, 2013

பாவிகளை மன்னிப்பாய்.



புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு
எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ?

 இனங்காத்த தந்தை இல்லாது போனதனால்
பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா?

வஞ்சக உலகில் வாழ வேண்டாமென
நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா?

நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு
பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா

வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி
தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை  யாடியவை

ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு
மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ?

" அப்பா" வென  அலறியதால்  அச்சமுற்று சிங்களவன்
அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ?

வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென
மலர்ந்ததும் கொன்றாரோ மாபாவிக் கோழையர்கள்

தின்னக் கொடுத்து தீர்த்துக் கட்டியவன்
என்ன பிறப்போ இழிகுலத்து நாய்ப்பிறப்போ ?

சிறுபிள்ளை உனைக்கொன்ற சிங்களவன் நிச்சயமாய்
ஒருதந்தை விந்தணுவில் உதித்திருக்க வாய்ப்பில்லை
                                            ********
இறக்கும் தருவாயில் என்ன நினைத்தாய் ?
பிறப்பேன் மறுபடி பிரபாகரனாய்  என்றா ?

கட்டிச் சுடுகின்ற கருங்காலி நாய்களே
கட்டவிழ்த்து கொடுங்கடா கைத்துப்பாக்கி என்றா?

வங்கக் கடலோரம் வாழும் உறவுகள்
எங்கே போயின இந்நேரம் என்றா ?

புத்தமதப் பேய்களுடன் போர்க்காமம் கொண்டிருந்த
ரத்த உறவுகளின் ரகசியம் அறிந்தாயோ ?

கொலைக்களத்தில் உறவெல்லாம் குற்றுயிராய்க் கிடக்கையிலே
தலைக்கு முக்காடிட்ட தலைவர்களை நினைத்தாயோ?

உடன்பிறப்பே என்று உருகித் தவித்தவர்கள்
கடன்பிறப்பு  என்று கைவிட்டது அறிந்தாயோ?

எப்போதும் நம்பாதே எங்கள்  தமிழினத்தை
ஒப்பாரியைக் கூட ஓசையின்றிப் பாடுவோம்யாம்

கொன்று குவித்தவனை குலவே ரறுத்தவனை
ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் நிற்கின்றோம்.

கொலைகாரப்  பாவிக்கு கூட்டிக் கொடுத்தவரை
தலையாட்டிப் பொம்மைகளை தலைவரென துதிக்கின்றோம்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் வடிக்கின்ற
நீலிக் கண்ணீரை நிஜமென்று நம்புகிறோம்.

இரக்கமின்றி உனைக்கொன்ற ஈழத்துப்  பேய்க்கெதிராய்
உரக்கப்  பேசுவோரில் உத்தமர்கள் யாருமில்லை.

உன்படத்தைப் போட்டு ஓட்டு வாங்க எண்ணுகிற
சின்னபுத்திக் கூட்டம் தான் சிலிர்க்கிறது வேடமிட்டு.

அமெரிக்கத் தீர்மானம் ஆர்ப்பாட்டம் கண்டனங்கள்
திமிர்கொண்ட பக்ஷேயை தீண்டாது அணுவேனும் .

ஆயுதம் விற்பதற்கும் அடக்கி ஆள்வதற்கும்
பாய்கிறது கண்டனங்கள் பச்சைத் தே....த்தனங்கள்.

உன்னினத்தில் ஓர் தலைவன் உதிக்கின்ற நாள்வரையில்
என்னதான் கதறினாலும் எதுவும் நடக்காது.
                                   **********
நிலைகுலைந்து நிற்கின்றோம் நீகிடக்கும் நிலைகண்டு
தலைகுனிந்து நிற்கின்றோம் தமிழராய்ப் பிறந்ததற்கு.

காலம் கடந்து கண்ணீர் வடிக்கின்றோம்
பாலச் சந்திரா பாவிகளை மன்னிப்பாய்.

-சிவகுமாரன் .

(சென்ற வருடம் குமுறியது உன்னை எப்படி மன்னிப்போம் )  


16 கருத்துகள்:

  1. தலைகுனிந்து நிற்கின்றோம் தமிழராய்ப் பிறந்ததற்கு...

    பதிலளிநீக்கு
  2. பிரபாகரனுக்கு மகனாய் பிறந்ததை தவிர இந்த பாலகன் என்ன பாவம் செய்தான் ? இதை படித்துவிட்டு இரவு தூக்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. Engalai mannithuvidu Chanthira... Udhavi seiyatha pavigalaga Nirkindrom...
    Mannithuvidu.. En sagotharanay nee meendum immannil pirathu singala ennaththai verarukka vendum... meendum vanthuvidu Chanthira...

    பதிலளிநீக்கு
  4. ஓ.... என்று நெஞ்சு வெடிக்க அழுகை குமுறி வந்தாலும் கைகள் இரண்டும் பின்னால் கட்டியே இருக்கின்றன... என்ன பிறவி இது!

    பதிலளிநீக்கு
  5. எண்ணக் குமுறல்களை எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் சிவகுமார்..

    அவனின் இளமைப் பருவம் குறித்து விகடனில் படித்ததும் மனம் கனத்தது. ஜீரணிக்க முடியாத கொடுமை.

    பதிலளிநீக்கு
  6. கொன்று குவித்தவனை குலவே ரறுத்தவனை
    ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் நிற்கின்றோம்.///
    நீங்கள் சொல்வது உண்மைதான் நாமெல்லாம் நாதியற்ற விலங்குகளாய் மாறினோம்.
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    ஒப்பாரி பாடி உரைத்துநாம் நின்றாலும்
    இப்பாரில் நம்தமிழா் ஏற்பாரோ? - அப்பப்பா!
    என்று திருந்தி இனத்தை நினைப்பாரோ?
    அன்றே அமையும் அரண்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா் - கம்பன் கழகம. பிரான்சு

    பதிலளிநீக்கு

  8. நண்பா் சிவகுமாரன் அவா்களுக்கு

    இரண்டு நாள்களாக என் வலைக்கு வந்து காதல் ஆயிரத்தைப் பாடித்து அளித்த கருத்துகளுக்கு மிக நன்றி!

    நான் பன்னிரண்டு அகவையிலிந்து கவிதை எழுதுகிறேன்!
    பார்க்கும் பார்வையிலேயே சிறந்த கவிதை எது என்பதை அறியும் ஆற்றல் எனக்குண்டு!

    உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறந்த கவிதைகளே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா் - கம்பன் கழகம. பிரான்சு

    பதிலளிநீக்கு
  9. //" அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன்
    அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ?//
    மனதின் வருத்தம் வார்த்தைகளில் தீயாய் சுடுகிறது. இந்தப் புகைப்படம் பார்த்து மனம் புழுங்கியது உண்மை.

    பதிலளிநீக்கு
  10. 'மன்னிக்காதே இந்த‌ இழிபிற‌விக‌ளை
    ம‌ற‌க்காதே இந்த‌ துன்பிய‌லை பால‌கா'

    உன் த‌ந்தையின் மீதெம‌க்கு ஒரு குறை.
    'ஒன்றுப‌ட்டால் உண்டு வாழ்வு, ந‌ம்மில்
    ஒற்றுமை நீங்கிடில் அனைவ‌ர்க்கும் தாழ்வே"
    என்ற பார‌தி வ‌ரியை ம‌றந்தானே என்ப‌துதான்.

    பதிலளிநீக்கு
  11. நிலைகுலைந்து நிற்கின்றோம் நீகிடக்கும் நிலைகண்டு

    பதிலளிநீக்கு
  12. சகோதரா...

    நெஞ்சமதை உலுக்கும் நிழற்படம் பார்க்க...
    கொஞ்சமிருந்த உணர்வும்வேகும் உம்கவிநோக்க...

    உங்கள் வலைப்பூவிற்கு இப்பொழுதுதான் வந்தேன். நுகர நிறைய இருக்கின்றன. வருகிறேன் தொடர்ந்து...

    பதிலளிநீக்கு
  13. சகோதரரே!
    வலைச்சர அறிமுகத்தில் இன்று நீங்கள்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு வரிகளிலும் விலி நிறைந்த உண்மையின் எதிரொலிகள் :( மனத்தைக் கன்னக்க வைதத்தது இக்
    கவிதை வ(லி )ரிகள் !மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள சிவகுமரன்...

    நெஞ்சம் பதறிக்கொண்டேயிருக்கிறது இன்னும் அடங்காமல்.

    இருப்பினும் இனங்காக்கப் போரிட்டவனின் இருப்பின் நிழல்கூட அச்சுறுத்தும் என்பதுபோல இலங்கையின் பய வயது 12.. இருப்பினும் பச்சிளங்குருத்தைக் கொன்றவனை உலகம் என்றைக்கும் மன்னிக்கப்போவதில்லை. இன்றைக்கு வந்த மாலைமலர் செய்தி கருணா காட்டிக்கொடுத்துதான் பாலச்சந்திரனைக் கொன்றதாகத் தகவல் இன்னும் கூடுதலாய் நெஞ்சை யறுக்கிறது. இதற்கு இறைவனின் நியாயம் கண்டிப்பாய் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. கண்ணீர் வரவழைககும் உம்கவிதை கண்டேனும்
    மண்ணின் மைந்தர்க்கு மானம் இளகட்டும்!

    பதிலளிநீக்கு