திங்கள், அக்டோபர் 27, 2014

நானும் என் கவிதைகளும்


நான்

உச்சிமலை மீதிருந்து
  ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி.

காடுமலை மேடுகளைக் 
  கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
  உடைத்துவரும் பெருவெள்ளம்.

காரிருளைக்  கதிர்வீசி
  கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
  சுற்றிவரும் வான்மேகம்.

பாலைவனப் பெரும்புழுதி
  கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச்  சுகந்தங்கள்
  சுமந்துவரும் இளந்தென்றல்.

பார்த்தவற்றைக்  கவிதைக்குள்
  பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
  வரங்கேட்கும் கவிச்சித்தன்.

என் கவிதைகள் 


உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு 
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற 
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.

வீறிட்டு வெளிக்கிளம்பி 
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .

பொங்கிவரும் அலைநடுவே 
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத 
  காலாவதி பழஞ்சரக்கு 
அடைகாக்க முடியாத 
  ஆனையிட்ட பெருமுட்டை.

வர்ணங்கள் வெளுத்திட்ட 
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன 
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற் கடகு வைக்க 
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்
-சிவகுமாரன்

26.10.14 அன்று மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில், பதிவர்கள் சுய அறிமுக நேரத்தின் போது , நான் வாசித்த கவிதை.


அய்யா கரந்தை ஜெயக்குமார் , முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோருடன் - பதிவர் விழாவில்


50 கருத்துகள்:

 1. அழகான அறிமுகம்,கவிதையாக.
  உங்களைச் சந்திக்கும் வாய்ப்பொன்று நழுவி விட்டது.
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. சென்னைப் பித்தன் உள்ளிட்ட மூத்த (சீனியர்) பதிவர்களை எதிர்ப்பார்த்து ஏமாந்தோம். உங்களை எதிர்பாராமல் சந்தித்தது பெருமகிழ்வளித்தது. உங்கள் மரபுக் கவிதைப் பயணத்தை மகிழவுடன் தொடர்வேன். நண்பர் விஜூவின் தளதையும் பார்க்க வேண்டுகிறேன்-http://oomaikkanavugal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி./

  சுகந்தமான கவிதை..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 4. சுய அறிமுகத்தை கவிதையில் பாடி நேற்று பதிவர் திருவிழாவில் கலக்கினீர்கள் !இன்று அதையே எழுத்தில் படிக்கையில் ஜிகர்தண்டா மேல்மிதக்கும் ஐஸ் கிரீம்போல் தித்திக்கிறது !

  பதிலளிநீக்கு
 5. முத்து நிலவன் அய்யா,எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தங்களை சந்தித்ததில். தங்களைப் பார்த்ததும் என் சித்தப்பா சுந்தர பாரதியை பார்த்த உணர்வு மேலிட்டது. தங்களுடன் கழித்த என் ஆரம்ப கால கவிதைப் பயணத்தை என்னால் என்றும் மறக்க இயலாது அய்யா. மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. நேற்று தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பகவான்ஜி. நன்றி

  பதிலளிநீக்கு
 7. வாவ். மிக அழகான அறிமுகம்.

  // கடைவிரிக்க இயலாத
  காலாவதி பழஞ்சரக்கு
  அடைகாக்க முடியாத
  ஆனையிட்ட பெருமுட்டை.

  வர்ணங்கள் வெளுத்திட்ட
  வானவில்லின் சோகங்கள்
  கர்ணனுக்கு மறந்துபோன
  கடைசிநேர அஸ்திரங்கள்.

  அவசரத்திற்க் கடகு வைக்க
  ஆகாத அணிகலன்கள்.
  கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்//

  இவற்றை மட்டும் ஒப்புக் கொள்ள இயலாது... உங்கள் கவிதைகள் பழஞ்சரக்குமல்ல, ஆகாத அணிகலங்களும் அல்ல. தமிழுக்கு மகுடம் புனையும் அற்புதக் கவிதைகள் உங்களுடையவை.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள்

  கற்பாறை உயிர்தரிக்கக்
  கண்திறக்கும் கவிச்சிற்பி!
  சொற்பாலம் கட்டுகின்ற
  செந்தமிழப் பெருந்தச்சன்!

  உங்கள் கவிதை,

  மனம்பெய்யும் மாமழையை
  மீட்டுகின்ற ஒளிமின்னல்!
  வனக்கனவை உள்வைத்த
  வித்தொன்றின் பெருமூச்சு!

  வாழ்த்த வயதில்லை. தங்களை வணங்குகிறேன் அண்ணா!!!
  வேறென்ன சொல்ல!
  நன்றி

  பதிலளிநீக்கு
 9. நன்றி கவிநயா. இந்தக் கவிதை.நான் மேம்போக்காக எழுதியதில்லை. என் உணர்ச்சிகளின் வடிகால் இந்தக் கவிதைகள். தாங்கள் ஒப்புக் கொள்ள மறுக்கும் வரிகள் என் அனுபவத்தின் விளைவுகள். வேறென்ன சொல்ல.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. "கற்றோரை கற்றோரே காமுறுவர்" என்பது போல நான் தங்கள் கவிதைகள் கண்டு வியக்க நீங்கள் என் கவிதைக்கு வாழ்த்து, என் கவிதை நடையிலேயே தந்து அசத்தி இருக்கிறீர்கள். நன்றி விஜூ(ஊமைக் கனவுகள்)

  பதிலளிநீக்கு
 11. அறிமுகக் கவிதை ஜோர். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் கவிதைகளை நிறையப் படித்து ரசித்திருக்கிறேன் என்றாலும் சுய அறிமுகத்திற்கு மேடையேறிய நீங்கள் வார்த்தைகளாகக் பேசாமல் அருவியாய் தங்குதடையின்றி கவிதை மழை பொழிவீர்கள் என்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைய்யா. ஆனந்த அதிர்ச்சி என்கிற மாதிரியான ஒரு விஷயம் அது. வெகு சிறப்பாக இருந்தது உங்களின் கவியும் அறிமுகமும்.

  பதிலளிநீக்கு
 13. மதுரை வலைப்பதிவர் விழாவில்
  தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 14. அன்பின் இனிய தம்பி!

  சூழ்நிலையின் காரணமாக தங்களை , நேரில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன்!ஆனாலும்
  தங்கள் அறிமுகக் கவிதையைக் கேட்டும் படித்தும் சுவைத்தேன்!
  ஏனென்றால் நான் உங்கள் இரசிகனல்லவா!!!!!

  பதிலளிநீக்கு
 15. நானும் என் கவிதைகளும் = சிவகுமாரன் கவிதைகள் = சிவகுமாரன் = கண்டெடுத்தேன் நல்முத்தை. Dash Board இல்லாததால் நிறைய பதிவுகள் படிக்கும் வாய்ப்பை இழந்தேன். மதுரை பதிவர் திருவிழாவில் திரு சிவகுமாரன் அவர்கள் கவிதை படித்தபின்பு அவரைத் தேடிப் பிடித்து பேசினேன். நன்றி, மகிழ்ச்சி. = திரு சிவகுமாரன் கவிதை வாசித்தமைக்கான இணைப்பும் இருக்கிறது. நண்பர்கள் கேட்க வேண்டுகிறேன். அவரது அற்புதமான பதிவை படிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் திரு சிவகுமாரன் = தொடர்ந்து எழுதுங்கள். மனம் தளராதீர்கள். - நண்பர்கள் Kirthika Tharan, Ram Kumar, Rajanna Venkatraman படிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. அற்புதமான கவிதை படையல் நண்பரே ...

  கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
  நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்//

  பதிலளிநீக்கு
 17. அற்புதமான கவிதை படையல் நண்பரே ...

  கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
  நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்//

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே!

  உணர்வு கூட்டி உயிரெழுப்பி
  உரைத்திட்ட ஒண்கவி!
  திணறடித்துத் திகைக்க வைத்துத்
  தேடவிடும் பெரும்புதையல்!
  கணத்துக்குள் காட்சி பல
  காட்டிவிடும் கவித்திறமை!
  மனம் வியந்து நிற்கின்கிறேன்!
  மாகவியே வாழ்க பல்லாண்டே!

  உங்கள் கவியில் உள்ளம்
  உறைந்து நிற்கின்றேன்!
  கவிதையில் சொல்லிச் சென்ற விடயங்கள் பேசுவதற்கு எம்மிடம்
  வார்தைகளை இல்லாமற் செய்துவிட்டன!

  வலிகள் சுமந்த வரிகள் ஆயினும்
  மிக அருமை!
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 19. உடனே கருத்திட ஒவ்வாதே, ஆழக்
  கடலில் குளித்துக் கரையேற வேண்டும்!
  படரும் கவியனைத்தும் பார்த்துவந்து சொல்வேன்,
  தொடர்க உமதுதமிழ்த் தொண்டு.

  பதிலளிநீக்கு
 20. சிலிர்க்க வைத்தது.

  நேரில் வராமல் போனேனே!

  பதிலளிநீக்கு
 21. wow பொங்கியே வருகிறது வார்த்தைகள் அத்தனையும் தங்கு தடையின்றி! எங்கும் பிரவாகமாய் வங்கக் கடல் போல விரிந்து பரவட்டும் நின் புகழ் நாற்றிசையும். அருமை அருமை ! தங்கள் குரலில் மேலும் மிளிர்ந்தது கவிதை! வாழ்க வளமுடன் ....!

  பதிலளிநீக்கு
 22. ஒற்றுப் பிழைகளை சுட்டிக் காட்டித் திருத்திய நண்பர் விஜு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. நன்றி ஸ்ரீராம் சார் தங்களின் தொடர் வருகைக்கு.

  பதிலளிநீக்கு
 24. நன்றி பாலகணேஷ் சார். நாடறிந்த எழுத்தாளரான தங்களைப் போன்றவர்களை சந்திக்கவும், என்னை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் தளம் அமைத்துக் கொடுத்த மதுரை வலைப்பதிவாளர் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. நன்றி ஜம்புலிங்கம் அய்யா. தங்களைப் போன்ற இலக்கிய, வரலாற்று ஆய்வாளர்களின் அறிமுகம் கிடைத்தது என் பேறு.

  பதிலளிநீக்கு
 26. நன்றி புலவர் அய்யா. தாங்கள் என் ரசிகன் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை அய்யா. நான் உண்மையில் பெருமைப் படுகிறேன்- கற்றறிந்த தங்களின் வாயால் வாழ்த்துப் பெற்றதற்கு.

  பதிலளிநீக்கு
 27. நன்றி ரத்னவேல் அய்யா . தங்களை சந்தித்தது என் பாக்கியம். முகநூலில் பகிர்ந்திருக்கிறீர்களா நன்றி அய்யா ,

  பதிலளிநீக்கு
 28. நன்றி சகோதரி இளமதி. ஒவ்வொரு முறையும் கவிதையால் வாழ்த்தி என்னைத் திணறடிக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 29. நன்றி முத்துநிலவன் அய்யா. வெண்பாவில் வாழ்த்து - தலை வணங்குகிறேன். பேச்சிழந்து நிற்கிறேன். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது போல் - பல வருடங்களுக்குப் பின்னர் தமிழ் நம்மை இணைத்திருக்கிறது அய்யா.

  பதிலளிநீக்கு
 30. நன்றி அப்பாஜி கவிதை வசிக்கும் போது நீங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே நினைத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி சகோதரி இனியா.தங்களைப் போன்றோரின் பேராதரவு இன்னும் எழுதத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு

 32. அன்பின் சிவகுமாரா, உங்கள் சுய அறிமுககக் கவிதை வாசிப்பை காணொளியில் பதிவாகி இருக்கிறார் என் மனைவி. பார்த்தவற்றைக் கவிதைக்குள் பதுக்கி வைக்கும் பகல் திருடன்தான் நீங்கள்.கவிச் சித்தரே நீங்கள் கேட்கும் வரம் என்றும் கிடைக்கும் . அன்பு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 33. அன்பு GMB அய்யா காணொளியை தங்கள் பதிவில் இணைத்திருக்கிரீர்களா? என் மனைவி காண விரும்புகிறாள். தங்களின் பேராதரவிற்கும் அன்புக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 35. சிவகுமரா ! குரல்,உச்சரிப்பு -அத்தணை நேர்த்தி ! தொகுப்பு வந்து விட்டதா ? வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 36. படித்ததைவிட கேட்டது மிக நன்றாய் இருந்தது. உணர்வுகளில் கலந்தது.

  பதிலளிநீக்கு
 37. உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
  மனத்தீயை அணைப்பதற்கு
  மடைதிறக்கும் நீரோட்டம்.
  உணர்வுகளின் போராட்டம் உள்மனதை வெளிக்காட்ட தவறவில்லை... அழகான அறிமுகம் நேரில் காண இயலாமல் போனது... தொடர்வோம் தமிழாய்.

  பதிலளிநீக்கு
 38. arumai sivakumaran ungal kuralil ungal kavithaikal kettu makiznthen...then. harani

  பதிலளிநீக்கு
 39. மிக்க நன்றி காஷ்யபன் அய்யா. இன்னும் தொகுப்பு வெளிவரவில்லை. தற்போதைய பணியிடத்தில் அது சாத்தியப்படாது. வேறு வேலைக்கு வெகுவாய் முயன்று கொண்டிருக்கிறேன். . விரைவில் வேலை மாறியதும் நூல் வெளியீட்டிற்கான பணியை ஆரம்பிப்பேன்.

  பதிலளிநீக்கு
 40. மீண்டும் வருகைதந்து குரல் பதிவை கேட்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

  பதிலளிநீக்கு
 41. மிக்க நன்றி சகோதரி சசிகலா. கண்டிப்பாய் தொடர்பில் இருப்போம்.

  பதிலளிநீக்கு
 42. சிவா! கொஞ்சம் தாமதித்து வந்து விட்டேன். மிக அற்புதமான் கவிதையும்,குரல் பதிவும். நேரில் வந்திருந்தால் நானல்லவோ சிவா பற்றி பாடியிருப்பேன்? கலைமகள் உன் நாவில் குடியிருக்கிறாள் சிவா! பெருங்கருணை பெருக!

  பதிலளிநீக்கு
 43. \\நேரில் வந்திருந்தால் நானல்லவோ சிவா பற்றி பாடியிருப்பேன்?///
  -சந்திக்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் மோகன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 44. அன்றே மதுரையில் உங்கள் காந்தக் குரல்வளத்தில்
  சீரான உச்சரிப்பில் கேட்டு மகிழ்ந்திருந்தேன்....
  கவிச்சித்தன் நீங்கள்..
  வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மகேந்திரன். பல வருடங்களுக்கு பின் மேடையேறிய அனுபவம் அது. நிகழ்ச்சியை தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் அருமையாக இருந்தது. தாங்கள் என் கையில் மைக் கொடுத்து பேசச் சொல்ல, நான் தங்களின் மேடையை (Dais) கேட்க பெருந்தன்மையாய் விட்டுக் கொடுத்தீர்கள். மனம் நிறைந்த நிகழ்வு அது. மிக்க நன்றி

   நீக்கு