ஞாயிறு, ஜூன் 28, 2015

ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய  பின்னேதான் நமக்கு உறைக்கிறது

வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.

பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை  கட்டும் மனிதன்  நானில்லை

வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ

சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை  பேசும்படி ஆவேனோ

ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச்  செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்

பாரங்கள் இறக்கிவைக்கப்  பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.

அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்

மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.

 அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன்  பூவுலகில் வாழ்வதற்கு.

இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.

ஒன்றை இழந்தால்தான்  இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ  இழக்கின்றேன்

இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.

சிவகுமாரன் 
22.06.2015


  

22 கருத்துகள்:

 1. //பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்//
  கவலை வேண்டாம் நண்பரே
  பாரங்கள் குறைந்து வாழ்வு சிறக்கும்

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. அண்ணா வணக்கம்.

  எங்கோடிப் போனாலும் எத்திக்குச் சென்றாலும்
  உங்கள் தமிழ்ப்பிள்ளை உமைவிட்டுப் போகாது!

  வெங்கனலில் வேதனையில் விம்மும் பெருமூச்சில்
  சங்கத் தமிழதிரும்! சாட்சிகளாய் யாமிருப்போம்!

  வெம்மைக் கதிருறிஞ்சி வானத்துச் சென்றாலும்
  அம்மை பூமிக்கே அத்துணை மழைநீரும்!

  காடு மேடெல்லாம் கால்கடுக்க நடந்தோய்ந்து
  பாடு படுகின்ற பக்குவத்தில் பா‘எழுக!

  அருள்தேடிக் கொண்ட அண்ணாஉம் கால்வீழப்
  பொருள்தேடி ஓடிவரும்! புன்னகைத்துப் போய்வருக!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மனதின் அழகான வெளிப்பாட்டுப் பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்
  தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்....

  அருமை... அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. தங்கள் பயணம் தங்கள் எதிர்பார்ப்பை
  நிறைவு செய்ய வேண்டுமாய் அன்னை
  மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்
  வாழ்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 8. பொல்லாத பொருள்தேடிப் போகின்ற பொன்மகனே
  இல்லாமை தீர்க்க இனிதாகப் போய்வருக

  சொல்லாமல் சொல்லிட்ட துயரமது நில்லாது
  கொல்லும் நினைவுகள் நீ செல்லாது போனால்

  இல்லாளை நல்மகவை என்றென்றும் காப்பதற்குப்
  பொல்லா வினைமுடித்துப் புகழ்சேர்க்கப் போய்வருக

  வல்லான் துணையிருப்பான் வளம்சேரும் வாழ்விலினி
  எல்லாம் நன்றாகும் ஏங்காமற் போய்வருக

  எல்லா நன்மைகளும் பெற்றுய்ய மனமார வாழ்த்துகிறேன்...! வருந்தாது சென்று வருக !

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாஜூன் 29, 2015 12:31 PM

  which part in Africa are you going to ?

  பதிலளிநீக்கு
 10. அன்பின் சிவகுமாரா, போகும் போது எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதுதான் போதுமென்ற மனமேபொன் செய்யும்மருந்து என்று அறியாதவனா நீ.உல்லாசப் பயணமாக மனையாளோடும் மகனோடும் செல் பொருள் தேடும் அல்லல் வேண்டாம்.
  அருமையான கவிதை. நிகழ்வது போல் எழுதி இருப்பதால் நிகழ்வினைத் தவிர்க்க வைப்பது போல் ஒரு பின்னூட்டம் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்!

  ஆலங் குடியென்ன ஆப்பிாிக்கா நாடென்ன
  கோலத் தமிழ்உன்னுள் கூத்திசைக்கும்! - சாலப்
  பொருள்தேடிச் சென்றாலும் போகுமிடம் எங்கும்
  அருள்சூடி மின்னும் அகம்!

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் அத்தான் என்.டி.ராஜா,மயிலாடுதுறை

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்,
  ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்,,,,
  உண்மைதானே
  நலமுடன் வளமுடன் திரும்ப வாழ்த்துக்கள்,
  தங்கள் தளம் வலைத்தளத்தில் கண்டு வந்தேன்,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வேதனை எதற்கு காலம் காயங்களை மாற்றும்.

  பதிலளிநீக்கு
 15. இன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
 16. இன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
 17. அருமை...சரி நீங்கள் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள்? நான் கேட்டது தவறு என்றால் மன்னித்துவிடுங்கள்...சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா. இதில் எதற்கு மன்னிப்பு ? உகாண்டாவில்., காடுகளை அழித்துவிட்டு கரும்பு பயிரிட்டு , சர்க்கரை ஆலை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

   நீக்கு
 18. திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இருக்கிறேன் சிவகுமாரன். கருத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் நலமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெகிழ்ந்து போகிறேன் , சகோதரி தங்களின் அன்பில்.

   நீக்கு