செவ்வாய், ஜனவரி 31, 2017

கிளிஞ்சல் பொறுக்கிய நாட்கள்


என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?

நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.

தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.

கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச்  சேர்ப்பது
கணக்கில்?

வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
இறைவா படைத்துவிடு
ஈசலாய் .

சிவகுமாரன் 

25 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏனிந்த சோகம்...?!

KILLERGEE Devakottai சொன்னது…

இதுவும் கடந்து போகும் கவிஞரே....
த.ம.2

Nagendra Bharathi சொன்னது…

வேதனை

ஏகாந்தன் ! சொன்னது…

கவிதையைப் படித்ததும் இப்படித் தோன்றியது என்னில்:

எப்படியெல்லாமோ செல்கிறது வாழ்க்கை வண்டி
இப்படியாகச் செல் என்றால் கேட்டால்தானே
அப்படியும் இருக்குமோ ஒருவேளை என நினைக்கையில்
இப்படித் திரும்பி அப்படி வளைந்து
எங்கெங்கோ ஓடுகிறது
நான் ஒரு பயணி
ஓட்டுபவன் அல்ல
ஓட்டுபவன் யாரோ என நினைத்து
வாட்டப்போவதில்லை மனதை
காட்டினால் காட்டட்டும் தன்னை-கனவுபோல்
ஓட்டினால் ஓட்டட்டும் என்னை
கவலையில்லை
சொல்வதற்கு ஏதுமின்றியும்
செல்லலாம் காலம்
போகிறபடி போகட்டும்
ஆகிறபடி ஆகட்டும்

**

G.M Balasubramaniam சொன்னது…

எதுவுமில்லாததால்தானே பக்கங்கள் எழுதப் படாமல் இருகிறதுகிழிஞ்சல் பொறுக்கிய நாட்கள் பிற்காலத்தில் இனிமை தரும் எண்ணங்களில்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

என்ன நண்பரே
ஏனிந்த சோகம்
காலம் மாறும்

ஸ்ரீராம். சொன்னது…

சிலசமயங்களில் ஒவ்வொரு கணத்துக்கும் அர்த்தம் தேட முடியாது. அர்த்தமில்லா மகிழ்ச்சி கணங்களும் உண்டு!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....இதுதான் வாழ்க்கை. எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.

சிவகுமாரன் சொன்னது…

அது வரும் போகும்.

சிவகுமாரன் சொன்னது…

ஆம் ஜி. காலம் தான் சர்வதுக்க நிவாரணி

சிவகுமாரன் சொன்னது…

இது எல்லோருக்கும் ஏற்படும் விரக்தி நிலை தான்.

சிவகுமாரன் சொன்னது…

ஆகா ஏகாந்தன் அய்யா. நீங்கள் சொல்வது போலத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை வண்டி. சிலசமயம் மெதுவாகவும் சில சமயம் தறிகெட்டும் ஓடுகிறது. லகான் நம் கையில் இல்லை என்பது தான் வலிதரும் உண்மை.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா.
அவ்வப்போது பாரதி கனவில் வந்து தேடிச்சோறு நிதந்தின்று என்று பாடி பரிகசிக்கிறான்.

சிவகுமாரன் சொன்னது…

ஒன்றுமில்லை அய்யா. இது ஒரு தனிமை இரவின் தன்னிரக்கம். எழுதிக் கிழித்தெறிந்து விடுவது வழக்கம். மாறாய் இம்முறை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே.

சிவகுமாரன் சொன்னது…

நிச்சயமாய்.ஆனாலும் அர்த்தமில்லாப் பொழுதுகள் அதிகமாகிவிடக் கூடாதே.
இன்பமும் துன்பமும் நமக்குள்ளே தான் இருக்கின்றன.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆம்...ஆனால் சில சமயம் சோகம் கூட நினைக்கும் போது இன்பம் தரும்....இப்படியான தருணங்கல் கடந்து விடும்....

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா. என்ன போட்டி?வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

ஆம். நினைத்துப் பார்க்க ஏதுமில்லாமல் கடந்துபோகும் காலங்கள் வருத்தமளிக்கவே செய்கின்றன.என்ன செய்ய?

நிலாமகள் சொன்னது…

சூன்யமாய் இருப்பதும் சும்மா இருப்பதும் வெகு சிரமம் தான். சில நேரங்கள் சூழ்நிலைக் கைதியாய்...

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம் சகோதரி.
தனிமை
வெறுமை
கொடுமை
கொடுமை.

இராய செல்லப்பா சொன்னது…

"கனவிலும் சாதிக்காமல் //கடந்துசென்ற காலத்தை //எப்படிச் சேர்ப்பது
கணக்கில்?" என்ற வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்!

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா

பெயரில்லா சொன்னது…

உோடு இருதை ரசிக்க முடியுமானால் தைவிடொரு சானையுோ

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பொருள் பொதிந்த கவிதை. சிந்தித்துப் பார்த்தால் வாழ்வின் பெரும்பகுதி நீக்கப் படவேண்டியதாக இருக்கும் போலிருக்கிறதே

பெயரில்லா சொன்னது…

அற்புதம்