திங்கள், மார்ச் 04, 2013

பாவிகளை மன்னிப்பாய்.



புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு
எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ?

 இனங்காத்த தந்தை இல்லாது போனதனால்
பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா?

வஞ்சக உலகில் வாழ வேண்டாமென
நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா?

நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு
பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா

வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி
தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை  யாடியவை

ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு
மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ?

" அப்பா" வென  அலறியதால்  அச்சமுற்று சிங்களவன்
அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ?

வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென
மலர்ந்ததும் கொன்றாரோ மாபாவிக் கோழையர்கள்

தின்னக் கொடுத்து தீர்த்துக் கட்டியவன்
என்ன பிறப்போ இழிகுலத்து நாய்ப்பிறப்போ ?

சிறுபிள்ளை உனைக்கொன்ற சிங்களவன் நிச்சயமாய்
ஒருதந்தை விந்தணுவில் உதித்திருக்க வாய்ப்பில்லை
                                            ********
இறக்கும் தருவாயில் என்ன நினைத்தாய் ?
பிறப்பேன் மறுபடி பிரபாகரனாய்  என்றா ?

கட்டிச் சுடுகின்ற கருங்காலி நாய்களே
கட்டவிழ்த்து கொடுங்கடா கைத்துப்பாக்கி என்றா?

வங்கக் கடலோரம் வாழும் உறவுகள்
எங்கே போயின இந்நேரம் என்றா ?

புத்தமதப் பேய்களுடன் போர்க்காமம் கொண்டிருந்த
ரத்த உறவுகளின் ரகசியம் அறிந்தாயோ ?

கொலைக்களத்தில் உறவெல்லாம் குற்றுயிராய்க் கிடக்கையிலே
தலைக்கு முக்காடிட்ட தலைவர்களை நினைத்தாயோ?

உடன்பிறப்பே என்று உருகித் தவித்தவர்கள்
கடன்பிறப்பு  என்று கைவிட்டது அறிந்தாயோ?

எப்போதும் நம்பாதே எங்கள்  தமிழினத்தை
ஒப்பாரியைக் கூட ஓசையின்றிப் பாடுவோம்யாம்

கொன்று குவித்தவனை குலவே ரறுத்தவனை
ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் நிற்கின்றோம்.

கொலைகாரப்  பாவிக்கு கூட்டிக் கொடுத்தவரை
தலையாட்டிப் பொம்மைகளை தலைவரென துதிக்கின்றோம்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் வடிக்கின்ற
நீலிக் கண்ணீரை நிஜமென்று நம்புகிறோம்.

இரக்கமின்றி உனைக்கொன்ற ஈழத்துப்  பேய்க்கெதிராய்
உரக்கப்  பேசுவோரில் உத்தமர்கள் யாருமில்லை.

உன்படத்தைப் போட்டு ஓட்டு வாங்க எண்ணுகிற
சின்னபுத்திக் கூட்டம் தான் சிலிர்க்கிறது வேடமிட்டு.

அமெரிக்கத் தீர்மானம் ஆர்ப்பாட்டம் கண்டனங்கள்
திமிர்கொண்ட பக்ஷேயை தீண்டாது அணுவேனும் .

ஆயுதம் விற்பதற்கும் அடக்கி ஆள்வதற்கும்
பாய்கிறது கண்டனங்கள் பச்சைத் தே....த்தனங்கள்.

உன்னினத்தில் ஓர் தலைவன் உதிக்கின்ற நாள்வரையில்
என்னதான் கதறினாலும் எதுவும் நடக்காது.
                                   **********
நிலைகுலைந்து நிற்கின்றோம் நீகிடக்கும் நிலைகண்டு
தலைகுனிந்து நிற்கின்றோம் தமிழராய்ப் பிறந்ததற்கு.

காலம் கடந்து கண்ணீர் வடிக்கின்றோம்
பாலச் சந்திரா பாவிகளை மன்னிப்பாய்.

-சிவகுமாரன் .

(சென்ற வருடம் குமுறியது உன்னை எப்படி மன்னிப்போம் )  


ஞாயிறு, டிசம்பர் 23, 2012

சொல்லக் கொதிக்குதடா



பள்ளிக்குச் செல்லவே பாதுகாப்பு இல்லையே
உள்ளம் கொதிக்குதடா உண்மையில் - கள்ளமிலா
பிஞ்சை சிதைத்த பெரும்பாவிக் காமுகனின்
குஞ்சை நறுக்கியேக் கொல்.

சிவகுமாரன் 

புதன், நவம்பர் 21, 2012

எழுதாக் கவிதை

அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.

மூச்சுவிட நேரமின்றி
ஓடுகிற ஓட்டத்தில்
கைக்கு எட்டாமலும்
கண்ணுக்குத் தெரியாமலும்
கரைந்து போகின்றன
விரிந்த மலரிலிருந்து
வெளிப்படும் மணமாய்
நுகரப்படாமலேயே.

ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து  நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய நூல்கண்டின்
சிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி.
சிவகுமாரன் 

சனி, அக்டோபர் 27, 2012

தேன் வந்து பாயுது


மாநகராட்சிப் பள்ளியில்
மந்திரியின் பேரன்.

தமிழ்வழிக் கல்வியில்
தானைத்தலைவரின்
தங்க வாரிசுகள்.

அமைச்சருக்கு மாரடைப்பு
அவசர சிகிச்சை
அரசு மருத்துவமனையில் .

பதினான்கு மணி நேர மின்வெட்டு.
" வெக்கை தாங்க முடியல"
வேதனைப்படுகிறார்
மாண்புமிகு முதல்வர்.

ரேசன்கடையில் நெரிசல்.
வரிசையில்  நின்றதால்
மீட்டிங்கு லேட்டு.
அலுத்துக் கொள்கிறார்
ஆளுங்கட்சி  எம்.எல்.ஏ.


கூடங்குளத்தில்வீடுகட்டி
குடியேறினர்
அணு உலை திறக்கச் சொல்லும்
அறிவியல்வாதிகள் .

எல்லோரும் ஓர்நிறை
எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.


திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

இதுவும் ஒரு யாகம்




நாதஸ்வரம்:
அடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்  
  அதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும் 
படியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது 
  பலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.

மேளதாளம்:
மேளமென்றும்  தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம் 
  மெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.
தாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத் 
  தாரணியில் இசை என்றும்  அழியாமல் தங்கும்.

நாதம்:
மூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும் 
  முன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும் 
பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு 
  பாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்

தாளம்:
பத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும் 
  பழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம் 
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
  இறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.

நாதம்:
காலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி 
  கண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும் 
மேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி?- நாம் 
  மேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி  நாட்டி.

தாளம்:
நாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.
  நாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம் 
வேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று 
   வேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம். 


-சிவகுமாரன் 
ஏப்ரல் 1993 
வாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.

இதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு  பெற்ற கவிதை.
சிந்தையை  மயக்குதடி 
அவள்:

சித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே  
   சேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும் 
மொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்
   முன்னதாகப் போயிடனும் மச்சானே 
அவன்:

கரும்பு தின்னக் கூலி கேட்டு  கச்சிபேசித் திரிவதுண்டோ 
   கண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ
தருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித் 
   தவிலெடுத்து  முழக்கிடுவேன்  கண்ணம்மா.

அவள்:

நாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே 
   நயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன் 
நூதனத் திறமைமிக்க மேள இசை  கேட்டு" நந்தி"
   நூறுதரம் தலையசைப்பார் மச்சானே.

அவன்:

 நாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள் 
    நர்த்தனங்கள் ஆடுமடி  கண்ணம்மா - அதில் 
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்      
    சிந்தையை மயக்குதடி கண்ணம்மா 

அவள்:

எத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும் 
   இடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி 
அத்தனை சபை நடுவே ஆலாபனை  செய்து நின்ற 
    அடிமை ஒழிந்ததின்று மச்சானே 

அவன்:

உண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்கு 
   உயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல 
நன்மைகள் அளித்த மேதை "இராஜரெத்தினம் பிள்ளை"யை 
   நன்றியுடன் கும்பிடணும்  கண்ணம்மா 

                                                                                                                          -சுந்தரபாரதி 





வியாழன், ஆகஸ்ட் 30, 2012

கவிலைகள்



வேலை நிமித்தம்
வீடு மாற்றுகிறேன் 
எப்படிச் சொல்லி அனுப்பவது ,
அமாவாசைக்கு வரும்
அப்பா காக்கைக்கு ?

வியந்த மகளின்
விரல் பட்டதும்
பயந்து சுருங்கிய
தொட்டாற்சுருங்கி
எப்போது விரிக்கும்
இலைகளை மீண்டும் ?

கண்ணாடிப் பெட்டிக்குள்
கடனேயென்று நீந்தும்
கலர் மீன்களின்
கனவிலேனும் வருமா
கடலும் ஆறும்?

கண்டம் தாண்டும் பறவை
களைப்பாற வசதியாய் 
எப்போது வளரும்
ஆழக் கடலில் 
ஆலமரங்கள்?

மனிதரைக் கண்டால்
விரைந்து மறைந்து 
உடலைச் சுருக்கி 
ஒளிந்து பயந்து
பயத்தால் கொன்று 
பயத்தால் செத்து 
படமாடும் பாம்பு 
நடமாடுவது எப்போது 
ஏனைய உயிர் போல் 
இயல்பாய் நட்பாய்?


காயம் கொத்தும் 
காகம் விரட்டாது 
கண்ணீர் வடிக்கும் 
காளையின்  வாழ்வில்,
கால்கள் சுருங்கி 
கைகளாய்  மாறும் 
பரிணாம வளர்ச்சிக்கு 
எத்தனை யுகங்கள் 
இன்னும் ஆகும் ?

கோயில் வாசலில்
பிச்சையெடுக்கும்
நாமம் போட்ட
யானைக்கு
எப்போது கிட்டும்
கனவிலிருக்கும்
காடு ?

"கவலைப்படுதற்கு 
காரணம் ஆயிரம் இருக்க 
வெட்டிப் பயலுக்கு 
வேதனையைப் பாரேன்"


விமர்சனம் செய்யும் 
விவரமற்றோர்க்கு
எப்படிப் புரியும் 
புல்லாகிப் பூடாய் 
புழுவாய் மரமாகி 
பல்விருகமாகி  
பறவையாய் பாம்பாய் 
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைக்கும்
என் கவலை ?




-சிவகுமாரன் 

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

மனக் குரல்


ஊக்கம் இல்லா உழைப்பு -  மனதில்
தூக்கிச் சுமக்கும் துயர்..

கரும்பாய் இருந்தால் கசக்குவார் - கடிக்கும்
எறும்பாய் இருப்பாய் இனி.

பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
துணிந்தால் வாராது  துயர்.

தகுதி மறந்து தன்மானம் இழந்து
சொகுசாய் வாழ்வதா சுகம்?

திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
விரும்பிச் செய்யா வேலை?

கொஞ்சமே கிடைத்தாலும் கூனிக் குறுகாமல்
நெஞ்சம் நிமிர்த்தி நில்.

வாடிக் கிடந்தால் வாய்ப்புகள் வாரா.
தேடி அலைந்து திரி

பெற்ற அவமானம், பேச்சுக்கள் எல்லாம்
வெற்றியால் அடித்து விலக்கு .

விதிப்பயன் என்று வீணாய் உழைக்காதே 
மதிப்பில்லா இடத்தில் மாடாய் .

கலகம் செய்யாமல் கழன்றுகொள் எளிதாய்.
உலகம் பெரிதென்று உணர்.


திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



சனி, ஜூலை 07, 2012

ஆலைக்குரல் 20




அற்பமென பாதுகாப்பை அலட்சியம் செய்தல்
தற்கொலை முயற்சிக்குச் சமம் ,

விழிப்புணர்ச்சி இன்றி வேலை செய்வோர்க்கு 
பழிச்சொல் வநதிடும் பார் .

சுமையென்பார் பாதுகாப்பு , சுகமென்பார் விதிமீறல் 
இமைப்பொழுதில் வருவான் எமன், 

எனக்கென்ன என்று இருந்தால் நிச்சயம் 
உனக்கும் வரும்பார் ஊறு..


தள்ளிப் போட்ட காரியம் - கடலில்
அள்ளிப் போட்ட பொருள்.. 

சிவகுமாரன்

மேலும் குரல் கேட்க இங்கே செல்லவும்