வெள்ளி, டிசம்பர் 05, 2014

கொள்வோர் கொள்க


பண்டாரம் என்றே பரிகசித்துக் கைகொட்டி
கொண்டாடும் அன்பர் குரைக்கட்டும் - திண்டாடிப்
போவதில்லை எந்தன் புலமைப் பெரும்பயணம்
ஆவதில்லை ஒன்றும் அதற்கு.
சிவகுமாரன் 
04.12.2014

செவ்வாய், டிசம்பர் 02, 2014

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

புதன், நவம்பர் 26, 2014

ஆரண்ய கண்டம்!!!



பாதுகையை வைத்துப்  பரதன் அரசாண்டான் 
போதுமய்யா அந்தப் பழங்கதைகள் - மாதுகளின் 
லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே 
பிஞ்ச செருப்புக்கும் பேறு.

சிவகுமாரன் 

புதன், நவம்பர் 19, 2014

பிள்ளைக் குறள் 40



உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள்.

அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.

போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.

உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும்  காண்.

காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.

விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!

சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.

கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.

கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.

அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர்.                                     40.
தொடரும்....

சிவகுமாரன் 

ஞாயிறு, நவம்பர் 16, 2014

நன்றி


என்னிதய நன்றிகளை எப்படி நானுரைப்பேன்?
கன்னித் தமிழ்க்கவியைக் காதலித்து- தன்னிதயக் 
கூட்டில் குடிவைத்துக் கொண்டாடும் அன்பருக்கென் 
பாட்டைப் படைத்தேன் பணிந்து.

கன்னல் கவிஞர் களத்தில் பலரிருக்க 
என்னதான் கண்டாரோ என்னிடத்தில் - சின்ன
மடுவை மலையாய் மதித்துப் பரிசை 
நடுவர் அளித்தார் நயந்து.

                                                                                                                       -சிவகுமாரன்

குறிப்பு : ரூபன்& யாழ் பாவாணன்  நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.



புதன், நவம்பர் 12, 2014

சேராதோ


வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே
நாதன் ஒருவனென்ற நாமந்தான் - மோதல்கள்
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச்
சேராதோ நெஞ்சமே சொல்.

சிவகுமாரன்
06.12.1992

திங்கள், நவம்பர் 03, 2014

பிள்ளைக் குறள் 30


இறைவன் கொடுத்தவை எண்ணில் அடங்கா!
நிறைவாய் மனதில் நினை.

நினைத்திடு எப்போதும் நீயாய் பிறரை!
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.

அன்பால் நெருங்கி அறிவால் கவர்ந்திடு!
உன்புகழ் பேசும் உலகு.

உலகே வியக்க உயர்ந்தாலும் என்றும்
தலைக்கனம் வாரா திரு.

இருப்பாய் நிலவாய்! எதிர்ப்போர்க்குக் கொஞ்சம்
நெருப்பாய் முகங்காட்டி நில்.

நில்லாமல் ஓடிடும் நேரம்! தவறினால்
சொல்லாமல் ஓடும் சுகம்.

சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.

அறிவால் பொருளீட்டி அன்பால் பகிர்ந்து
செறிவாய்ச் செயல்களை செய்
.

செய்த தவறை திரும்பவும் செய்யாதே.
தெய்வமும் மூடும் திரு.

திருவருள் காட்டிடும் தெய்வம்! மனதை
ஒருமுகம் ஆக்கி உழை.  
                                                          30.

தொடரும் ....


சிவகுமாரன் 

திங்கள், அக்டோபர் 27, 2014

நானும் என் கவிதைகளும்


நான்

உச்சிமலை மீதிருந்து
  ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
  பாடிவரும் பூங்குருவி.

காடுமலை மேடுகளைக் 
  கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
  உடைத்துவரும் பெருவெள்ளம்.

காரிருளைக்  கதிர்வீசி
  கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
  சுற்றிவரும் வான்மேகம்.

பாலைவனப் பெரும்புழுதி
  கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச்  சுகந்தங்கள்
  சுமந்துவரும் இளந்தென்றல்.

பார்த்தவற்றைக்  கவிதைக்குள்
  பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
  வரங்கேட்கும் கவிச்சித்தன்.

என் கவிதைகள் 


உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு 
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற 
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.

வீறிட்டு வெளிக்கிளம்பி 
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .

பொங்கிவரும் அலைநடுவே 
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத 
  காலாவதி பழஞ்சரக்கு 
அடைகாக்க முடியாத 
  ஆனையிட்ட பெருமுட்டை.

வர்ணங்கள் வெளுத்திட்ட 
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன 
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற் கடகு வைக்க 
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
  கவிதையல்ல சத்தியமாய்
-சிவகுமாரன்

26.10.14 அன்று மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில், பதிவர்கள் சுய அறிமுக நேரத்தின் போது , நான் வாசித்த கவிதை.






அய்யா கரந்தை ஜெயக்குமார் , முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோருடன் - பதிவர் விழாவில்


திங்கள், அக்டோபர் 20, 2014

பிள்ளைக் குறள் 20


கண்டு பிடிப்பாய்! கடவுள் பெருங்கருணை
உண்டு முழுதாய் உனக்கு
.                     
உனக்கென்ற ஒன்றை உனையன்றி யாரும்
தனக்கென்று சொல்லத் தகாது.

தகாத பழக்கங்கள் தன்னுடைய வாழ்வில்
புகாமல் கவனித்துப் போ.

போனதை எண்ணி புலம்பாதே! சாதிக்க
வானளவு வாய்ப்புண்டு வா.

வாவென்றால் முன்னின்று வாய்பொத்தி நிற்காதோ!
நீவென்ற பின்னே நிதி.

நிதிக்கு உலகில் நிகருண்டு! உந்தன்
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.

மாற்றம் பிறக்கும்! மனதில் துணிவிருந்தால்
வேற்றாய் மலரும் விதி.

விதியை எதிர்கொள்ளும் வீரம் இருந்தால்
எதிர்க்க எவருண்டு இங்கு.

இங்குனக்கு ஆண்டவன் ஈந்ததை நீபிறர்க்கு
தங்கு தடையின்றி தா.

தாராளம் காட்டிடு தர்மச் செயல்களில்!
ஏராளம் காட்டும் இறை.                                                                 20

                                                                                                                                      தொடரும்....

சிவகுமாரன்




திங்கள், அக்டோபர் 13, 2014

பிள்ளைக் குறள் 10


தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!
ஊரே வியக்கும் உனை.

உனைவெல்ல  இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.

நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.

சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.

கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.

தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!

கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.

புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.

தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.

இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு.                            10.

                                                                                      தொடரும்.....
-சிவகுமாரன்


அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை.  விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான  மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக  ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, இன்னும் எழுதிக் கொண்டே---யிருக்கிற  குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள்.  என்  மகனைப் போன்ற, இளமையில்  பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.