ஞாயிறு, ஜூன் 28, 2015

ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய  பின்னேதான் நமக்கு உறைக்கிறது

வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.

பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை  கட்டும் மனிதன்  நானில்லை

வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ

சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை  பேசும்படி ஆவேனோ

ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச்  செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்

பாரங்கள் இறக்கிவைக்கப்  பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.

அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்

மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.

 அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன்  பூவுலகில் வாழ்வதற்கு.

இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.

ஒன்றை இழந்தால்தான்  இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ  இழக்கின்றேன்

இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.

சிவகுமாரன் 
22.06.2015


  

வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்


திங்கள், ஏப்ரல் 13, 2015

பிள்ளைக்குறள் 60


துரத்திவரும் வெற்றி, தொலைந்திடும் தோல்வி!
சிரத்தையாய் உன்பணியைச் செய்.

செய்யத் துணிந்தால் சிகரம் தொலைவில்லை
தொய்வின்றி ஏறித் தொடு
.
தொடுவானை நீண்டுபோய்த் தொட்டுத் திரும்பும்.
கடும்முயற்சிக் கொள்வாரின் கை.

கைகூடும் நிச்சயம் காணும் கனவெல்லாம்்
கைவிடாமல் நீமுயலுங் கால்.

கால்போன போக்கில் கடக்காமல் வாழ்க்கையை
நூல்பிடித்தாற் போன்றே நடத்து.

நடத்தையும் செய்கையும் நன்றெனில் உந்தன்
இடத்தைப் பறிப்பவர் யார்?

யாருக்கும் சார்பின்றி யாரோடும் ஒத்துவாழ்
நீருக்கு உண்டோ நிறம்?

நிறம்மாறும் பச்சோந்தி போன்றொரு வாழ்க்கை
அறவழி அல்ல அறி.

அறியாமை, சோம்பல், அலட்சியம் மூன்றும்
குறிக்கோளை.வீழ்த்தும் குழி.

குழிகளும் மேடுகளும் கொண்டதே வாழ்க்கை.
வழிதனை நீயே வகு.          60.

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

காதல் வெண்பாக்கள் 47


உன்பாதம் போகும் வழியெல்லாம் பின்தொடர்ந்து
என்பாடல் கேட்குமடி எந்நாளும் - வெண்பாவில்
பாடுகிறேன் உன்னழகை! பாடும் கவியினிலும்
தேடுகிறேன் உன்னைத் தினம்.

தினமுன்னைக் கண்டாலும் தீர்ந்திடாது உன்மேல்
மனங்கொண்ட காதல் மயக்கம் - சினங்கொண்டு
பார்த்தாலும் போதுமடி! பாலை நிலந்தன்னில்
நீர்த்துளிபோல் கொள்வேன் நினைத்து.

சிவகுமாரன் 

திங்கள், டிசம்பர் 08, 2014

பிள்ளைக் குறள் 50




தவிர்ப்போரை நீயும் தவிர்த்திடு! பின்னால்
தவிப்பார் அவர்கள் தனித்து.

தனித்த திறம்தான் தலைமை வகிக்கும்.
தனித்தே நிமிர்வாய் தலை.

தலைவணங்கு! ஆனால் தலைகுனிவால் வாழ்வில்
நிலைகுலைந்து போகாமல் நில்

நில்லாதே எங்கும்! நிறுத்தாதே ஓட்டத்தை!
வெல்லாமல் ஓய்வெனில் வீண்.

வீணாக்கும் நேரத்தில் வெற்றிச் சுவடுகள்
காணாமல் போகும் கரைந்து.

கரைதொட்ட பின்னே களைப்பாறு! உண்டோ
இரைதேடிச்  சோர்ந்த எறும்பு? 

எறும்பாய் உழைப்பாய்! இரும்பாய் இருப்பாய்!
அறும்,பார்!  தடைகள் அகன்று.

அகன்றுசெல் தீயவர்  அண்டுமிடம் விட்டு!
நகர்ந்துகொள் தேவையில்லை நட்பு.

நட்பெனக்  கொள்ளுமுன் நன்மையும் தீமையும்
நுட்பமாய் ஆராய்ந்து நோக்கு.

நோக்கம் நிறைவேறும் நாள்வரை சோம்பலும்
தூக்கமும் தூரத் துரத்து.                                                                        50
 தொடரும் ....

சிவகுமாரன் 


வெள்ளி, டிசம்பர் 05, 2014

கொள்வோர் கொள்க


பண்டாரம் என்றே பரிகசித்துக் கைகொட்டி
கொண்டாடும் அன்பர் குரைக்கட்டும் - திண்டாடிப்
போவதில்லை எந்தன் புலமைப் பெரும்பயணம்
ஆவதில்லை ஒன்றும் அதற்கு.
சிவகுமாரன் 
04.12.2014

செவ்வாய், டிசம்பர் 02, 2014

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

புதன், நவம்பர் 26, 2014

ஆரண்ய கண்டம்!!!



பாதுகையை வைத்துப்  பரதன் அரசாண்டான் 
போதுமய்யா அந்தப் பழங்கதைகள் - மாதுகளின் 
லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே 
பிஞ்ச செருப்புக்கும் பேறு.

சிவகுமாரன் 

புதன், நவம்பர் 19, 2014

பிள்ளைக் குறள் 40



உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள்.

அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.

போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.

உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும்  காண்.

காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.

விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!

சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.

கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.

கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.

அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர்.                                     40.
தொடரும்....

சிவகுமாரன் 

ஞாயிறு, நவம்பர் 16, 2014

நன்றி


என்னிதய நன்றிகளை எப்படி நானுரைப்பேன்?
கன்னித் தமிழ்க்கவியைக் காதலித்து- தன்னிதயக் 
கூட்டில் குடிவைத்துக் கொண்டாடும் அன்பருக்கென் 
பாட்டைப் படைத்தேன் பணிந்து.

கன்னல் கவிஞர் களத்தில் பலரிருக்க 
என்னதான் கண்டாரோ என்னிடத்தில் - சின்ன
மடுவை மலையாய் மதித்துப் பரிசை 
நடுவர் அளித்தார் நயந்து.

                                                                                                                       -சிவகுமாரன்

குறிப்பு : ரூபன்& யாழ் பாவாணன்  நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.