புதன், மார்ச் 04, 2020

மாடல்ல மற்ற....

கனவெல்லாம்
ஜல்லிக்கட்டு காளையாய்.
வாழ்க்கை என்னவோ
வண்டி மாடாய்.

சனி, ஆகஸ்ட் 03, 2019

(அ)நீதி அரங்கம்


நிலை தடுமாறுகிறது
நீதி அரங்கம்.

சரியென்றும் தவறென்றும்
செயல்களைக் கொண்டல்ல
செய்பவர்களைக் கண்டே
தீர்மானிக்கிறது.

தண்டனைகளை கூட
தகுதி பார்த்தே வழங்குகிறது.

விதிகளை எல்லாம்
வினாக்களைப் போல்
எழுதி வைத்திருக்கிறது.
கோடிட்ட இடங்களை
நிரப்புவதைப் போல்.

அறையெங்கும் தொங்குகிறது
விதிகளோடு
விலைப்பட்டியலும்.

காதுகளையும்
வாயையும்
பொத்திக் கொள்கிறாள்
நீதி தேவதை.

கரன்சி நோட்டுகளால்
கட்டவிழ்க்கப்படுகிறது
கருப்புத்துணி.
               
                          - சிவகுமாரன்.

செவ்வாய், ஜூலை 23, 2019

காற்றோடு


மாறிக் கொண்டே இருக்கிறது
முகவரி.
அழிந்து கொண்டிருக்கின்றன
அடையாளங்கள்.
கால அலைகளில்
கரைந்து செல்கிறது
காலடிச்சுவடு.
இறுதியாய்.....
விட்டுச்செல்லும்
சாம்பலோடு
கைகுலுக்க
காத்திருக்கின்றன
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
கவிதைகள்.

சிவகுமாரன்

சனி, ஜனவரி 06, 2018

ஆப்பிரிக்கக் காடு


நெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.
   நெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.
குடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும்
   குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
திடுதிடென பேரருவி திமிராட்டம் போடும்
   திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
அடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்?
   அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.



சடசடென மழையொன்று உடல்நனைத்துப் போகும்.
   சட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.
தடதடென சிற்றோடை நீர்தளும்பிப் பாயும்
   தலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.
படபடென கிளிக்கூட்டம் படையெடுக்கும் வானை.
   படையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை
கடகடென புறப்பட்டு ஆப்பிரிக்கா 
வாரீர்.
 கண்கொள்ளா காட்சிகளைக் காட்டுக்குள் பாரீர்.


                                                                                                             
சிவகுமாரன்


.