புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
செங்குருதிச் சாற்றாலே விடுதலைக்கு நீரோட்டம்.
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
எத்தனையோ உயிர்ப்பலிகள் எண்ணற்ற தியாகங்கள்.
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
எப்போதும் அஹிம்சையே எமக்குத் துணையென்ற
தப்பான பாதையில் தடம்மாறி நாம்நடந்தால்
ஒப்பாரிப் பாடலுக்கே உரையெழுத வேண்டிவரும் .
துப்பாக்கிக் குண்டுகளால் துரோகிகளை சாய்த்து அந்த
வெப்பத்தால் என்தாயை குளிர்விப்பேன் என முழங்கி
மாதாவின் விலங்கொடித்து மண்ணை மீட்பதற்கு
நேதாஜி அமைத்திட்ட போர்ப்படைக் கீடேது?
வயல்காட்டில் ஏர் கலப்பை ஏந்தி நின்ற கைகளுக்கு
அயல்நாட்டில் அவனளித்த பயிற்சிக்கு இணையேது?
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
தீயாக சுட்டெரித்த தினவெடுத்த வெள்ளையனை
தீவிர வாதத்தால்தான் தீர்க்க வேண்டும் எனவெண்ணி
வெறிநாய்க் குணம் கொண்ட ஆஷ் என்னும் வெள்ளையனை
குறிபார்த்துக் கொல்லுவதில் தங்களுக்குள் போட்டியிட்டு
நாட்டுக் குழைத்திட்ட நல்லோர் குழுவொன்று
சீட்டுக் குலுக்கியொரு சிங்கத்தை தேர்ந்தெடுத்தது.
பிறந்த நாட்டிற்கு பெரும்பணி செய்வதற்கு
சிறந்த வாய்ப்பொன்று கிடைத்ததென அவன் மகிழ்ந்தான்.
நாட்டையே கலக்கிவந்த ஆஷ் என்னும் வெள்ளையனை
தோட்டாவுக் கிரையாக்கி தன்னையும் மாய்த்திட்ட
வாஞ்சிநாதன் அன்றைக்கு வடித்த செங்குருதி
காய்ஞ்சு தான் போனதுவோ காற்றிலே மறைந்ததுவோ?
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரர்களை - நெஞ்சில்
ஈரமின்றி தாக்கிய வெறிகொண்ட வெள்ளையன் முன்
காரமில்லாத் தத்துவத்தால் கடுகளவும் பயனில்லை
சாரமில்லா போராட்டம் சத்தியாக் கிரகமெல்லாம்- உடலை
பாரமென எண்ணுகிற கிறுக்கர்களின் கொள்கையாகும்
தூரத்தே நில்லுங்கள் கோழைக் கூட்டமெல்லாம்.
சூரர்கள் கூட்டமிங்கே சூழட்டும் என முழங்கி
தாக்குதல், போராட்டம் , தோட்டாக்கள் என இறங்கி
தூக்குக்குப் பலியான பகத்சிங்கின் கழுத்தில்
விழுந்து இறுக்கிய வெள்ளையனின் கயிற்றில் தான்
எழுந்து பறக்கிறது இந்தியக் கொடியின்று.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
பார் அதிரக் கவிதை கொண்டு பரங்கியரை எதிர்த்திட்டான்
பாரதி எனும் புலவன் பாரதத்தின் தவப் புதல்வன்
ஆயுதக்கணை கொண்டு ஆர்ப்பரித்த வெள்ளையனை
காகிதக் கணை தாங்கி கலக்கிட்ட வீரனவன்.
அழுத்தக் குணம் கொண்ட ஆங்கிலேயக் கூட்டத்தை
எழுத்துக் குவியலினால் எதிர்த்திட்ட சூரனவன்.
மண்ணை அடகுவைத்து மனதில் கவலையின்றி
கண்ணை மூடி கனவில் மிதந்தவரை
விண்ணை முட்டுகிற வீரக் கவிதைகளால்
எண்ணித் தெளியவைத்து எழுச்சி அடைய வைத்தான்.
எத்தனை இளைஞர் கூட்டம் இன்னுயிர் நீத்தனர்
அத்தனையும் சரித்திரம் அப்படியே மறைத்ததன்றோ ?
ஏந்திய கொள்கைக்காக இறந்திட்ட பேரை மறந்து
காந்தியும் நேருவும் தான் கட்டினர் சுதந்திரம் என்றும்
பாரத சுதந்திரம் எங்கள் பாட்டனால் வந்ததென்றும்
நாரத கூட்டமொன்று இன்று நாட்டிலே குதிக்கிறது.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.
- சிவகுமாரன்
(
15.08.1988 அன்று என் 18 வயதில் ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சுதந்திர தின விழாவில் - கவிஞர் சுந்தரபாரதி தலைமையில்.நான் ஏறிய முதல் கவியரங்க மேடையில் - வாசித்த கவிதையின் ஒரு பகுதி )