புதன், ஏப்ரல் 09, 2014

ஓட்டுக் கேட்டு வாராங்களே














தேர்தல் நெருங்கிருச்சு
திருவிழா போல் ஆகிருச்சு
ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டி
விளம்பரங்க பெருகிருச்சு 
ஓட்டுக் கேட்டு வாராங்களே செல்லையா - அதில
ஒருத்தன் கூட உருப்படியா இல்லைய்யா.


வெள்ளை வேட்டி துண்டு போர்த்தி 
விதவிதமா மீசை வச்சு 
கள்ளப்பணம் கருப்புப்பணம்
கரன்சியாக மாத்திக்கிட்டு
கொள்ளைக்காரன் ஒட்டுக் கேட்டு வார்றாம்மா- அவன்
கொள்ளையில உனக்கும் பங்கு தார்றாம்மா.

முடிச்சவிக்கிப் பயல்களெல்லாம்
முகமூடி போட்டுக்கிட்டு
அடிச்ச கொள்ளை போதாதுன்னு
அரசியலில் புகுந்துகிட்டு
நடிக்கிறானே  நல்லவன்போல் செல்லையா   -அவனை
நம்பி மோசம் போகலாமோ சொல்லய்யா.

காடு கழனியெல்லாம்
காசாக்கி வித்துப்புட்டான்
ஆடு மேச்ச புறம்போக்கு
நெலத்த எல்லாம் அமுக்கிப்புட்டான் 
வீடு தேடி வாராண்டி செல்லம்மா - நீ
வெளக்கமாத்தை கையிலெடுத்து நில்லம்மா.

தோளில துண்டு போட்ட
தோழரெல்லாம் சீட்டுக்காக
காலில மானம்கெட்டு
கவுத்து விழுந்து கெடக்குறாக,
ஆளில்லாம போயிட்டோமே  கண்ணையா -இப்ப
அனாதையா ஆகிட்டோமே  என்னய்யா.

காடு வெளையவில்லை
கழனி நெறையவில்ல
ஆடுமாடு மேய்க்க கூட
ஆத்தாடிவழியுமில்லே
மாடுபோல ஒழைக்கிறோமே செல்லம்மா-நம்மை
மனுசனாக மதிக்க யாரும் இல்லம்மா.


வடிக்க அரிசி தந்தான் 
எரிக்க விறகு இல்ல
படிக்க கம்ப்யூட்டர் தந்தான்,
கனெக் ஷனுக்கு கரண்ட் இல்ல'
குடிசையில கொடுத்ததெல்லாம் சின்னய்யா - உன்னை 
குடிக்க வச்சே புடிங்கிட்டானே என்னய்யா. 

அஞ்சு வருஷம் நம்மை
அடிமையாக நடத்திப்புட்டு
கொஞ்சநஞ்சம் இருப்பதையும்
கொள்ளை அடிக்க திட்டம் போட்டு 
பஞ்சமா பாவி வாரான் செல்லம்மா - நீ
பாத்துக் கொஞ்சம் சூதனமா நில்லம்மா.

                                                                                                     -சிவகுமாரன்

பாடியிருப்பவர்கள் : பிரபு  & விக்கி 


சனி, மார்ச் 22, 2014

ஒப்பனை



ஒப்பனைகளில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது 
வயது.

கவிதைக்கு அழகு 
கற்பனை எனில் 
உடலுக்கு அழகு 
ஒப்பனை.

வழித்து எறிந்து 
ஒழித்து விட நினைத்தாலும் 
கடமை முடியும் முன் 
கணக்கை முடிக்க வரும்  
காலனின் வருகையை 
கண் மறைப்பதில் 
வெற்றி கண்டு விடுகிறது.
ஒவ்வொரு முறையும் 
ஒப்பனை.

உண்மையை மறைப்பதால் 
தலை குனிந்தாலும் 
தன்னம்பிக்கை தருவதால் 
தலை நிமிர்ந்து விடுகிறது 

ஒப்பனை 
அதற்கு 
ஒப்பிலை.

சிவகுமாரன் 

சனி, பிப்ரவரி 22, 2014

ஒருத்தனையுங் காணலியே!



                                                         கவிஞர்.சுந்தரபாரதி 

காரு போட்டு  ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு 
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி  
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா - இப்போ 
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

சாதி நம்ம சாதியின்னா தாயே சரணமின்னா 
ஒங்க வீட்டுப்  புள்ளையின்னா ஓட்டுப்போட வேணுமின்னா 
ஓட்டுப்போட்ட கையோட சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமா கொடியைக்கட்டி 
சாலையெல்லாம் தூள்பறக்க சரஞ்சரமா "பிளேசர்" விட்டு
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

மல்லுவட்டுத் துண்டு போட்டு மைக்குவச்சு விளம்பரங்க
வாழ்வு  மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுயின்னா பொடலங்காயைப் பாத்துயின்னா
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

ஏழை எளியதுக எல்லார்க்கும் நன்மையின்னா
வேலை கெடைக்குமின்னா வெலைவாசி குறையுமின்னா
சாலை தெருவிளக்கு சர்க்காரு வசதியின்னா
போட்ட வெளக்கு  கூட சின்னாத்தா -இப்போ
பொசுக்குன்னு நின்னுபோச்சே என்னாத்தா? 

தாலிக்குத் தங்கந்தாரேன், தாளிக்க  வெங்காயந் தாரேன்
கூலிக்கு வேலை தாரேன் கூப்பிட்டாக்க ஓடிவாரேன்
ஆட்சிக்கே வந்துட்டாக்க அத்தனையும் செஞ்சு தாரேன்
ஓட்டுபோட வேணுமின்னா சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வானம்  மழை பெய்யவில்லை வயக்காடும் வெளயவில்லை
கையிலே காசுமில்லை கடங்கொடுக்க யாருமில்லை
குண்டி கழுவக் கூட சின்னாத்தா -இப்போ
குளத்திலயும் தண்ணியில்லே என்னாத்தா?

குடிக்க இப்போக் கூழுமில்லே குடிசையில வெளக்குமில்லே
கோதுமைக்கும் மண்ணெண்ணைக்கும் கூட்டம் குறையவில்லை
அங்காடிக் கார்டுக்கு அரிசி கெடைக்கவில்லை
எறகு மொளச்ச விலை இன்னும் இறங்கவில்லை
ஓட்டுக்  கேக்க வந்தாங்களே சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?
   

வியாழன், அக்டோபர் 24, 2013

வளி வலி




பலூனுக்குள் நுழையும் காற்றாய் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
பருக்கும் சுகத்தை நுகரவும் 
வெடிக்கும் தருணத்தை உணரவும் 
முடியாமல்.

உணர்ச்சியற்று 
ஊதும் உதடுகளுக்கும் 
கைகுலுக்க காத்திருக்கும் 
காற்று வெளிக்கும் 
தெரிவதேயில்லை 
நுரையீரல் காற்றின் 
நுண்ணிய வலிகள்

சிவகுமாரன் 

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

கத்தியின்றி இரத்தமின்றி??


கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

இந்திய விடுதலைக்கு இளைஞர்கள் கூட்டமெல்லாம்
சிந்திய இரத்தத்தை அளக்கத் தான் இயன்றிடுமோ ?
பங்கு கேட்டு வந்த பரங்கியரின் எலும்பொடிக்க
எங்கு நோக்கினும் இளைஞர்களின் போராட்டம்
செங்குருதிச் சாற்றாலே விடுதலைக்கு நீரோட்டம்.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

ரத்தத்தை நீராக்கி பொன்னுடலை உரமாக்கி
எத்தனையோ உயிர்ப்பலிகள் எண்ணற்ற தியாகங்கள்.
நித்தம் ஒரு போராட்டம் வெள்ளையனுக் கெதிர் நடத்தி
புத்தம் புது மனைவிக்கும் புன்னகைக்கும் குழந்தைக்கும்
முத்தமிட நேரமின்றி முகம்பார்க்க வழியுமின்றி
சித்தமதை கல்லாக்கி சிறை சென்றோர் எத்தனைபேர்?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

பையிலே காசுமின்றி பகிர்ந்து கொள்ள யாருமின்றி 
தையலை தனிமையில் தவிக்கவிட்டு நாட்டிற்காக 
கையிலே கொடியைத் தாங்கி கண்ணிலே வீரம் தேக்கி 
சண்டைக்கு என்றே வந்த சண்டாளப்  படைகளிடம் 
மண்டையில் அடியை வாங்கி மண்ணிலே வீழ்ந்த போதும் 
என்னை நீ தீயிலிட்டு எரித்தாலும் என்திரு நாட்டு
அன்னையின் மணிக்கொடி தன்னை இழப்பேனோ என முழங்கி 
தன்னையே நாட்டிற் கீந்த குமரனின் இரத்தம் இன்னும் 
திருப்பூரின் சாயப் பட்டறையில் கலந்தோடி 
இருப்பதை நம்மில் எவரேனும் நினைத்தோமா ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


எப்போதும் அஹிம்சையே எமக்குத் துணையென்ற
தப்பான பாதையில் தடம்மாறி நாம்நடந்தால்
ஒப்பாரிப்  பாடலுக்கே உரையெழுத வேண்டிவரும் .
துப்பாக்கிக் குண்டுகளால் துரோகிகளை சாய்த்து அந்த
வெப்பத்தால் என்தாயை குளிர்விப்பேன் என முழங்கி
மாதாவின் விலங்கொடித்து மண்ணை மீட்பதற்கு
நேதாஜி அமைத்திட்ட போர்ப்படைக் கீடேது?
வயல்காட்டில் ஏர் கலப்பை ஏந்தி நின்ற கைகளுக்கு
அயல்நாட்டில் அவனளித்த பயிற்சிக்கு இணையேது?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


தீயாக சுட்டெரித்த தினவெடுத்த வெள்ளையனை 
தீவிர வாதத்தால்தான் தீர்க்க வேண்டும் எனவெண்ணி 
வெறிநாய்க் குணம் கொண்ட ஆஷ் என்னும் வெள்ளையனை  
குறிபார்த்துக்  கொல்லுவதில்  தங்களுக்குள் போட்டியிட்டு 
நாட்டுக் குழைத்திட்ட நல்லோர் குழுவொன்று 
சீட்டுக் குலுக்கியொரு சிங்கத்தை தேர்ந்தெடுத்தது.
பிறந்த நாட்டிற்கு  பெரும்பணி செய்வதற்கு 
சிறந்த வாய்ப்பொன்று கிடைத்ததென அவன் மகிழ்ந்தான்.
நாட்டையே கலக்கிவந்த ஆஷ் என்னும் வெள்ளையனை 
தோட்டாவுக் கிரையாக்கி  தன்னையும் மாய்த்திட்ட 
வாஞ்சிநாதன் அன்றைக்கு வடித்த செங்குருதி 
காய்ஞ்சு தான்  போனதுவோ காற்றிலே மறைந்ததுவோ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


வீர சுதந்திரம் வேண்டி நின்ற  வீரர்களை - நெஞ்சில்
ஈரமின்றி தாக்கிய வெறிகொண்ட வெள்ளையன் முன்
காரமில்லாத் தத்துவத்தால் கடுகளவும் பயனில்லை
சாரமில்லா போராட்டம் சத்தியாக் கிரகமெல்லாம்- உடலை
பாரமென எண்ணுகிற கிறுக்கர்களின் கொள்கையாகும்
தூரத்தே நில்லுங்கள் கோழைக் கூட்டமெல்லாம்.
சூரர்கள் கூட்டமிங்கே சூழட்டும் என முழங்கி
தாக்குதல், போராட்டம் , தோட்டாக்கள் என இறங்கி
தூக்குக்குப் பலியான பகத்சிங்கின் கழுத்தில்
விழுந்து இறுக்கிய  வெள்ளையனின் கயிற்றில் தான்
எழுந்து பறக்கிறது இந்தியக் கொடியின்று.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


பார் அதிரக் கவிதை கொண்டு பரங்கியரை எதிர்த்திட்டான் 
பாரதி எனும் புலவன் பாரதத்தின் தவப் புதல்வன் 
ஆயுதக்கணை  கொண்டு ஆர்ப்பரித்த வெள்ளையனை 
காகிதக் கணை தாங்கி கலக்கிட்ட வீரனவன்.
அழுத்தக் குணம் கொண்ட ஆங்கிலேயக் கூட்டத்தை 
எழுத்துக் குவியலினால் எதிர்த்திட்ட சூரனவன்.
மண்ணை அடகுவைத்து மனதில் கவலையின்றி 
கண்ணை மூடி  கனவில் மிதந்தவரை
விண்ணை முட்டுகிற வீரக் கவிதைகளால்  
எண்ணித் தெளியவைத்து எழுச்சி அடைய வைத்தான்.

 எத்தனை இளைஞர் கூட்டம் இன்னுயிர் நீத்தனர் 
அத்தனையும் சரித்திரம் அப்படியே மறைத்ததன்றோ ?

ஏந்திய கொள்கைக்காக இறந்திட்ட பேரை மறந்து 
காந்தியும் நேருவும் தான் கட்டினர் சுதந்திரம் என்றும் 
பாரத சுதந்திரம் எங்கள்  பாட்டனால் வந்ததென்றும் 
நாரத கூட்டமொன்று இன்று நாட்டிலே குதிக்கிறது. 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

                                                                   - சிவகுமாரன் 


(15.08.1988 அன்று என் 18 வயதில்  ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சுதந்திர தின விழாவில்  - கவிஞர் சுந்தரபாரதி தலைமையில்.நான் ஏறிய முதல் கவியரங்க மேடையில் - வாசித்த கவிதையின் ஒரு பகுதி )

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

கடவுளே


கவிதை எழுத முயன்று
கண்ணீர் தான் வந்தது.
வற்றிய மார்பில்
வாய் வைத்த
குழந்தை போல்.


செவ்வாய், ஜூலை 02, 2013

தாகம்

மண்ணின் தாகம் வானம் கொட்டும்
  மழையில் தணிகிறது.
விண்ணின் தாகம் வீணாய்ப் போகும்
  கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
  கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
  குருதியில் தணிகிறது.

ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
  எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
  குடிக்க மறுக்கிறது

நீரின் தாகம் பள்ளம் தன்னை
  நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்
  பூமியைப் பிளக்கிறது.

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
  முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
  சிலையாய்ச் செய்கிறது.

நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்
  ஓசையில் தணிகிறது.
குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
  குழியில் சாய்க்கிறது.

கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
  கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
  பிரளயம் நடக்கிறது  .


                                                                 
-சிவகுமாரன் 
1986 கவிதை எழுதிப் பழகிய காலம் .

சனி, ஜூன் 01, 2013

காதல் வெண்பாக்கள் 38




கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப்
பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும்
அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம்
இதர சுவைகள் இனி .




இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே
எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்கும்
அறுசுவை இன்பங்கள் ஆகுமோ அந்த
இறுகிய முத்தத்திற்கு ஈடு?


சிவகுமாரன் 


திங்கள், மே 13, 2013

காய்ச்சியெடுத்த கவி


கரடுமுரடான
கொடுஞ்சிறையில்
கட்டுண்டு கிடக்கிறது
கவனிப்பாரன்றி
கவிதை.

எப்போதாவது
தட்டுத் தடுமாறி
தலைகாட்ட நினைக்கையில்
இழுத்து நிறுத்தி விடுகிறது
இரும்புக்கரம் கொண்ட
இடைஞ்சல்கள்..

மீறிஎழும் போதெல்லாம்
சீறி விழுகிறது
பொங்கிய பாலில்
தெளித்த நீராய்
வாழ்க்கை.

ஆரவாரம்  இல்லாமல்
அடங்கிப் போனாலும்
காலம் கனியுமெனக்
காத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சியக்
கவிதையொன்று.


சிவகுமாரன் 

புதன், மே 01, 2013

வரட்டுமே வறட்டு"மே"



வியர்வைத் துளிகளால்
நிரம்பி வழிகிறது
கோப்பை.

தொழிற் சங்கங்களில்
தோண்டத்  தோண்ட
தங்கச் சுரங்கங்கள்.

சிவகாசி முழுக்க
சிவப்புப் புரட்சி தான்.
பட்டாசும்  இரத்தமுமாய்  .

அழகருக்குத் திறந்த
வைகைத் தண்ணீர்
வயிறு கழுவுமோ ?

விடுமுறை, ஒய்வு
பென்சன், பி.எஃப்
அம்மாவுக்குண்டா ?

மே  ஒண்ணு
ஏப்ரல் ஒண்ணு
எல்லாம் ஒண்ணு.

சிவகுமாரன்