செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

எப்போது வருவாய்?

உன்
காதல் கணைகள் பட்டுத் தெறித்து
என்
கவிதைக் கிறுக்கல் கசக்கி எறிந்து
குப்பைக்கூளமாய் ஆனது மனசு.
எப்போது வருவாய் கூட்டிப் பெருக்க?

உன்
ஈர இதழின் எச்சில் பட்டு
என்
இதயத் திரியின் நெருப்பில் விழுந்து
இருட்டாய்ப் போனது இதய வீடு.
எப்போது வருவாய் விளக்கை ஏற்ற?

அக்கம் பக்கம் பார்த்து பார்த்து
அடுத்தவர் சொல்லுக்கு அடங்கி நடந்து
இறுகிப் போனது இதயக் கதவு.
எப்போது வருவாய் இழுத்துத் திறக்க?

நீ
வீசிச் சென்ற காதல் வித்து
விழுந்து முளைத்து எழுந்து வளர்ந்து
வாடிக்  கிடக்குது வானம் பார்த்து.
எப்போது வருவாய் மழையாய்ப்  பொழிய?

மூச்சுக் காற்றின் உஷ்ணம் கொண்டு-நீ
மூட்டிச் சென்ற மோக நெருப்பில்
பற்றிப் பரவி எரியுது தேகம்.
எப்போது வருவாய் தீயை அணைக்க?

முகத்தைத் தேடி முகவரி தொலைத்து
மூலை இடுக்கில் முடங்கிக் கிடந்து
உறங்கிக் கிடக்குது உள்ளம் ஒன்று.
எப்போது வருவாய் உலுக்கி எழுப்ப?

தனியே வானில் தவித்துப் பறந்து
துணையைத் தேடி துடித்து அலைந்து
துவண்டு போனது சின்னச் சிறகு.
எப்போது வருவாய் இணைந்து பறக்க?

                                             -சிவகுமாரன்

3 கருத்துகள்:

  1. மிக அருமை..இணை தேடி அலையும் இதயத்திற்கு துணை கிடைக்க .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சூப்பராயிருக்கு பாஸ்! நீங்கள் முன்பு எழுதிய பல கவிதைகளை மீள்பதிவு போட வேண்டும் எனத் தோன்றுகிறது! இது எனது கருத்து!!! :-)

    பதிலளிநீக்கு
  3. நான் நினைத்ததை சொல்லியிருக்கீங்க ஜி நன்றி

    பதிலளிநீக்கு