கொஞ்ச நாட்களாய்.....
வெண்ணிலவு வானம் விட்டு
வெளிவருவதே இல்லை
விண்மீன்கள்
தரையில் விழுந்து
தற்கொலை செய்து கொள்கின்றன.
இரவிலும் கூட
சூரியன் சுள்ளென்று
சுட்டெரிக்கிறது.
கருத்த வானம் கூட
கண்ணீர் விட்டு
கதறி அழுகிறது.
என் கொல்லைப்புறத்து
குயில் குஞ்சு
கோபம்கொண்டு
கூவ மறுக்கிறது.
வழக்கமாய்
என்னைப் பார்த்ததும்
வாலாட்டும்
என் செல்ல நாய்
வாலைச் சுருட்டிக்கொண்டு
வள்ளென்று குரைக்கிறது
இப்போதெல்லாம்
எனக்குள் இருக்கும் நான்
என்னோடு
முகம் கொடுத்து
பேசுவதே இல்லை.
அட ஆமாம்....
நான்
கவிதை எழுதி
நாட்கள்
பலவாகிவிட்டது.
-சிவகுமாரன்.
6 கருத்துகள்:
arumai nanba !
செருக்கு. நறுக்.
உண்மைதான் ,
கவிதை எழுத மறந்தாலும்
எழுத நினைத்தாலும்
இரவு பகலாகும்
சூரியன் பனியாய் சிரிப்பான்,
நிலவு நெருப்பாய் தகிப்பான்,
விண்மீன்கள் வெடித்துச் சிதறும்..
உங்கள் கவிதை உள்ளத்தில் ஓங்கி அடிக்கும் அலைகளின் வடிகாலாக
அமைந்திருக்கிறது.
கவிதை மன உணர்வுகளின் வடிகால் . மகிழ்ச்சி கோபம் கவலை பிரிவு போன்ற உணர்வுகள். கவலையை பகிர்ந்தால் கனம் குறையும். மகிழ்வை பகிர்ந்தால் மகிழ்வு இரட்டிபாகுமாம். எழுதுங்கள் நானும் உங்கள் ரசிகை .
அட!!! ஆமாம். கொஞ்சநாள் எழுதலைன்னா எதையோ பறிகொடுத்த மாதிரிதான் இருக்கு :-)). நினைத்ததையெல்லாம் வார்த்தைகளில் வடித்தபின் வரும் திருப்திக்கு ஈடு இணையில்லை.
நிறைய எழுதுங்க சகோ....
//இப்போதெல்லாம்
எனக்குள் இருக்கும் நான்
என்னோடு
முகம் கொடுத்து
பேசுவதே இல்லை.//
அசர வைக்கிற
அட்டகாசம்!
கருத்துரையிடுக