ஞாயிறு, மார்ச் 13, 2011

வேண்டாம் தாயே


இயற்கைத் தாயே இயற்கைத் தாயே 
பயத்துடன் உன்னை பணிந்தோம் தாயே
இனிதாய் இதமாய் சுமந்த நீயே 
மனிதரைத் தின்ன மனந்  துணிந்தாயே  
குச்சுக் குடிசையில் குடியிருந் தோரை
மச்சு வீட்டில் மகிழ்ந்திருந் தோரை
வேறு பாடின்றி வெறிகொண் டெழும்பி 
கூறு போட்டரிந்து கொலைவெறி யோடு 
கொஞ்சம் கூட மனமில் லாமல் 
நெஞ்சைப் பிளந்து நீ தின்றாயே !
வறுமைப் பேய்கள் வாட்டும் நோய்கள் 
குறுகிய மனங்கள் குதர்க்க மதங்கள்
அரசியல் அரக்கன் அணு உலை மிரட்டல்
குரல்வளை நெரிக்கும் ஓசோன் ஓட்டை 
எடுத்தது போக எஞ்சிய இரத்தம்
நீகுடித்  தாயே நியாயம் தானா?
பாவம் செய்யும்  மனிதரைக் கண்டு
கோவம் கொண்டு நீ கொஞ்சம் திமிறி
விரலசைத் தாலே வீணாய்ப் போவோம்
குரலெழுப் பாமல் கொன்று போட்டாயே
உன்னிலே பிறந்து உன்னால் வளர்ந்து
உனக்குள்ளே தான் உறங்கிப் போவோம்.
உண்மை தானவை மறுத்தோம் இல்லை.
ஆனால் தாயே அதற்குள் எம்மை 
அடியோ டழிக்கும் அவசரம் ஏனோ ?
தாயே தனது தாகம் தீர்க்க 
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு 
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் . 



-சிவகுமாரன்

32 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//தாயே தனது தாகம் தீர்க்க
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் .//


காலத்திற்கேற்ப அருமையான கவிதை.

நேற்று நம் நெஞ்சைப்பிளந்த காட்சிகள் கண்டதில் கலங்கித்தான் போனோம்.

நிரந்தரமற்ற வாழ்க்கையை நினைத்தால் அஞ்சத்தான் வேண்டியுள்லது.

இருக்கும் வரை ஒருவடோரொருவர் பாசமும் நேசமுமாகப்பழகி, அன்பு செலுத்து, உதவியாய் இருப்போம்.

meenakshi சொன்னது…

உருக்கமான கவிதை!

சிவகுமாரன் சொன்னது…

\\\நிரந்தரமற்ற வாழ்க்கையை நினைத்தால் அஞ்சத்தான் வேண்டியுள்லது////

ஆமாம் வை.கோ.சார்.

எனக்கு அச்சமெல்லாம் இது போன்ற பேரழிவுகள் ஒட்டு மொத்தமாய் வராமல் கொஞ்சம் கொஞ்சமாய் அழிப்பதுதான் . பேரழிவுகளில் இறந்தவர்களைக் காட்டிலும் பறிகொடுத்தவர்கள் நிலை தான் கொடுமையானது. உண்மையில் இந்தக் கவிதையை 1-10-93 இல் குஜராத்தில் பூகம்பம் வந்த போது எழுதினேன். 2004 இல் சுனாமி வந்த போது இன்னும் சில வரிகள் சேர்த்து கண்ணீருடன் எழுதி வாய் விட்டே கடவுள் முன் படித்தேன். மறுபடியும் ஈரானில் பூகம்பம் வந்தபோது அந்தக் கவிதையை கோபத்துடன் ஒருமுறை படித்துவிட்டு கிழித்து விட்டேன். நேற்று மீண்டும் அதே கோரம். கிழித்துப் போட்டாலும் கவிதை வரிகள் மறக்கவில்லை. அவளுக்குத் தான் என் கவிதை கேட்கவில்லை. செவிட்டுத் தாயவள்.

சிவகுமாரன் சொன்னது…

இது போன்று கவிதை எழுதி கடவுளிடம் முறையிடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடிகிறது இயற்கையை மீறி நம்மால்?

நீங்கள் என் புதிய வலைத்தளத்துக்கு வரவில்லையே ஏன் மீனாட்சி மேடம்? /
www.arutkavi.blogspot.com

Unknown சொன்னது…

//விரலசைத் தாலே வீணாய்ப் போவோம்
குரலெழுப் பாமல் கொன்று போட்டாயே//
அருமை.

சரிதான் இயற்கையை மீறி என்ன செய்ய முடியும் நம்மால்?

எல் கே சொன்னது…

என்னுயிர் அழிக்க முனைந்தாய்
என் குழந்தைகளை
வெட்டினாய் - உன்
குலத்திற்கொர் பிரச்சனை எனில்
என் கால் பிடிக்கிறாய் - இனி
நான் சாந்தம் கொள்வதாய் இல்லை

Sriakila சொன்னது…

இயற்கைக்கு முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

தாக்கமான கவிதை தக்கதொரு தருணத்தில் !

geetha santhanam சொன்னது…

ஜப்பான் நில நடுக்கம், சுனாமி பற்றி பார்த்ததிலிருந்து மனம் பதைத்துக் கிடக்கிறது. இயற்கை சீற்றத்தை நினைத்து மனம் நடுங்குகிறது.

சென்னை பித்தன் சொன்னது…

//தாயே தனது தாகம் தீர்க்க
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் //
அருமை சிவகுமாரன்!உங்கள் வேண்டுகோள் இயற்கைத்தாயின் செவியில் விழட்டும்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இயற்கையின் எதிரே நாம் எம்மாத்திரம்? சரியான நேரத்தில் சரியான கவிதை!

thendralsaravanan சொன்னது…

இத்தனை நடந்தும் மனிதன் மாறவில்லையே!

thendralsaravanan சொன்னது…

போட்டி,பொறாமை,அடிதடி சண்டை என்று...எப்பொழுது மாறுவான்?!

G.M Balasubramaniam சொன்னது…

தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட்டே தீர வேண்டும் குமாரா. ஓங்கி குரல் கொடுத்தாலும் செவி சாய்க்க அவ்ளாலும் முடியாது யாராலும் முடியாது. வேண்டுமானால் மனப்பாரம் குறையலாம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

எல்.கே.யை நான் தொடருகிறேன்.

பண்ணும் தப்பையெல்லாம் பண்ணிவிட்டு தாயே தாயே என்று கூவுவது என்ன நியாயம் சிவா?

அக்கிரமம் கண்டு பொங்கும் இயற்கையின் குணம் நமக்கு வர வேண்டும்.

meenakshi சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் சிவகுமாரன். அந்த பதிவையும் படித்தேன், கேட்டேன், ரசித்தேன். செவிக்கும், மனதிருக்கும் இதமாய் இருந்தது. மிகவும் நன்று.

ரிஷபன் சொன்னது…

எங்கள் பிரார்த்தனையும்..

பெயரில்லா சொன்னது…

இருக்கும் இடம்
போதவில்லையென்றா;
எங்கள் வீதியில் வந்து
விளையாடினாய்?!

http://shenisi.blogspot.com/2007/01/blog-post_3732.html

தமிழகத்தை சுனாமி தாக்கியபோது கடல் நீர் என்று தலைப்பிட்டு விழைந்த வரிகள்

வலிக்கிறது உங்கள் கவிதை...

வசந்தா நடேசன் சொன்னது…

//வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் . //

வேண்டாம்..

நல்ல கவிதை, நன்றி.

R. Gopi சொன்னது…

வருத்தம் தரும் விஷயம்.இயற்கையை நாம் சீண்டாமல் இருக்கவவேண்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது

ஹேமா சொன்னது…

பூமித்தாய் பொறுமையானவள் என்கிறோம்.கோபம் கொண்டாள் அவளின் கோரத்தாண்டவம் தாங்கமுடியாதது !

vimalanperali சொன்னது…

இயற்கையை மீறி எதுவும் இல்லை என்பதுதான் திரும்பத்திரும்ப நிரூபணமாகிறது.

kashyapan சொன்னது…

சிவகுமரா! குஜராத்தில்,இந்துமாக் கடலில்,ஈரானில்,"பசுபிக்" பச்சைக்கடலில் நெஞ்சைப்பிளந்த சோகம் உன் கவிதையாய் விரிந்துள்ளது. கவிஞனுக்கு கால,தேச, வர்த்தமானங்கள் இல்லை.மனிதம் மட்டுமே உண்டு என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் கவிஞரே!---காஸ்யபன்

அன்புடன் மலிக்கா சொன்னது…

அழிவுகள் ஆங்காங்கே
அதைகண்டு அச்சப்படாமல்
அனுதினமும்
அச்சமற்று சுழல்கிறான்
அத்துமீறும் பாவத்தில்..

அருமையான கவிதை மனதை நெகிழசெய்தது..

Muruganandan M.K. சொன்னது…

”....பாவம் செய்யும் மனிதரைக் கண்டு
கோவம் கொண்டு நீ கொஞ்சம் திமிறி
விரலசைத் தாலே வீணாய்ப் போவோம்..”
காலத்திற்கு ஏற்ற கவிதை.
இயற்கையை நாம் நாம் மதிக்கவும், அதனை பாழாக்காதிருக்வும் வேண்டும். இதை உணர்த்திய நல்ல கவிதை.

அண்ணாமலை..!! சொன்னது…

"
தாயே தனது தாகம் தீர்க்க
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல்"

கிண்ணத்தின் அடியில் தங்கிடும் சாற்றின் சுவை!
சோகத்தில் கூட!

"
இயற்கையைக் கொய்தால் இயற்கையும் கொய்யும்!
நயத்தினை மனிதர் நன்கறிந் திடணும்!
"
அவ்வளவே!

ஆயிஷா சொன்னது…

அருமையான கவிதை.வரிகள் மனதை தொட்டன.

சிவகுமாரன் சொன்னது…

அந்தக் குள்ள தேசம் மீண்டெழுந்து உயிர்த்தெழ பிரார்த்திப்போம்.
மீண்டும் நிகாழதிருக்க விழைவோம்.
வரம் பெற மரம் வளர்ப்போம்.
ஒரு மரம் வெட்டினால் நூறு மரம் நடுவதென உறுதி கொள்வோம்.
மாசு தடுப்போம். தடுக்க இயலாதிருப்பினும், பேரழிவுகளுக்கு நாம் காரணமாய் இல்லாதிருப்போம்.
கருத்துரையிட்ட அனைவர்க்கும் நன்றிகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

தாயின் சாபம் மட்டுமா
தாயின் கோபம் கூட
தாங்க முடியாததே
இதை என்று உண்ரப்போகிறோம்?
அவளை சூடேற்றும் செயல்களை
என்றுதான் நிறுத்தப் போகிறோம்?
நல்ல சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சுந்தரா சொன்னது…

//தாயே தனது தாகம் தீர்க்க
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் .//

நெஞ்சை உருக வைக்கிற கவிதை சிவகுமாரன்.

இயற்கையன்னை இனிமேலாவது நம்மீது இரக்கம்காட்டவேண்டும்.

சமுத்ரா சொன்னது…

கெஞ்சினாலும் நடக்காது...every action has a reaction ..
nature responds when we love her
nature reacts when we hurt her

எஸ்.கே சொன்னது…

தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_6398.html