ஞாயிறு, ஜூலை 03, 2011

ஒத்திகை

 பிஞ்சுக்கால் கையுதைத்து
   பிள்ளையது அழுகிறது
நெஞ்சினிலே ஈவிரக்கம்
   இல்லாதோர் வாழுகின்ற
வஞ்சனை உலகுக்கு
   வந்துவிட்ட கோலமெண்ணி
அஞ்சியஞ்சி அழுகிறது
   அன்னைக்குப் புரியவில்லை 

தாய்ப்பாலும் தாலாட்டும் 
   தாவென்று அழவில்லை 
நோய்கண்டு துயருற்று
   நொந்துபோய் அழவில்லை
நாய்பட்ட பாடுபின்னர்
   படப் போகும் நிலையெண்ணி
வாய்விட்டு அழுகிறது
   வஞ்சிக்குத் தெரியவில்லை .   
நாளைய உலகம்
   நமக்கெதிராய் இருந்திடுமோ
வேளை பிறந்திடுமோ
   வேதனைதான் வளர்ந்திடுமோ
காளையாய் வளர்ந்தபின்
   கையேந்தும் நிலைவருமோ ?
தாளைப் பணிந்து
   தலைவணங்கும் நிலைவருமோ ?

இல்லறம் இனித்திடுமோ 
   இனிப்பின்றி போய்விடுமோ
நல்லதொரு பெண்ணொருத்தி 
   நமக்காக வருவாளோ 
பொல்லாத சூர்ப்பனகை
   போலொருத்தி வருவாளோ
எல்லாமே யோசித்து 
   இப்போதே அழுகிறது.

சத்தியமும் தர்மங்களும் 
  இல்லாத இந்நாட்டில் 
எத்தனை துயர்வருமோ
   எவ்வளவு இடர்வருமோ
இத்தனையும் தம்மால் 
   எதிர்கொள்ள இயன்றிடுமோ
அத்தனையும் யோசித்து 
   அழுகிறது அக்குழந்தை

 தாய்மனமோ தவிக்கிறது
   தன்பிள்ளை அழுகுரலால்
வாய்விட்டு அழுவதெல்லாம்
   வாழ்க்கையெனும் நாடகத்தில்
ஓய்வின்றி  அழுவதற்கு 
   ஒத்திகைதான் என்பதை 
போய்க்கொஞ்சம் அவளிடமே 
   பொறுமையாகச் சொல்லுங்கள் . 



-சிவகுமாரன்
  1990- ஏப்ரல் 

33 கருத்துகள்:

  1. உலகத்தில் சகிக்க முயாதது குழந்தையின் அழுகை
    அந்த அழுகையை பற்றி
    இப்படி ஒரு சிறந்த கவிதையை உங்களால் மட்டுமே எழுதமுடியுன் நண்பரே
    அற்புதம்

    பதிலளிநீக்கு
  2. //வாய்விட்டு அழுவதெல்லாம்
    வாழ்க்கையெனும் நாடகத்தில்
    ஓய்வின்றி அழுவதற்கு
    ஒத்திகைதான்//

    அழகான வரிகள். அழும் குழந்தைகளின் படங்களும் மிகப்பொருத்தமாக.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. 'நாய்பட்ட பாடு' மிகவும் ரசித்தேன். அத்தனை தொலைநோக்கா குழந்தைக்கு? நல்ல கற்பனை.

    (எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்பதை தன் பாணியில் சொல்கிறதோ சொல் வராத பிள்ளை ஒரு வேளை?)

    பதிலளிநீக்கு
  4. அற்புதம் தோழரே,

    //நாய்பட்ட பாடுபின்னர்
    படப் போகும் நிலையெண்ணி
    வாய்விட்டு அழுகிறது
    வஞ்சிக்குத் தெரியவில்லை . //

    உண்மையான மெய்ஞ்ஞான கருத்தும் இதுவே..

    இதை அழகாக கவியாக்கிய தங்களின் திறத்திற்கு தலைசாய்க்கிறேன்..

    வாழ்க வளர்க .. சிவனருள் முன் நிற்க...

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராஜகோபாலன்,
    நன்றி
    வை.கோ.சார்,
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. நன்றி அப்பாஜி.
    நாசூக்காய் சொல்லிவிட்டீர்கள்.
    பாரதியின் கருத்து தான் என்னுடையதும்.
    இந்தக் கவிதை எழுதிய போது எனக்கு Pessimistic thoughts அதிகமாக இருந்தது உண்மை தான். இன்றைய மனநிலையில் இந்தக் கவிதை எனக்கு பிடிக்கவில்லை.இதை பதிவிடத் தூண்டியதே நீங்கள் தான். (பார்க்க முந்தைய பதிவின் பின்னூட்டங்கள் ).

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜானகிராமன்

    \\உண்மையான மெய்ஞ்ஞான கருத்தும் இதுவே..//

    மெய்ஞ்ஞானம் எதுவும் இல்லாத காலத்தில் 21 வருடங்களுக்கு முன்னர் எழுதியது. உண்மையை சொல்லுங்கள் இந்தக் கவிதையின் பின்னணியில் ஒரு குரூர மனம் தெரியவில்லையா ?

    \\சிவனருள் முன் நிற்க..//
    மிக்க நன்றி. அந்த சிவனருள் தான் என்னை வழி நடத்துகிறது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சிவகுமாரன்,

    //மெய்ஞ்ஞானம் எதுவும் இல்லாத காலத்தில்//

    எனக்கு ( அதாவது சிவகுமாரனுக்கு )
    மெய்ஞ்ஞானம் எதுவும் இல்லாத காலத்தில் என்று குறிப்பிட வேண்டும்...

    இல்லையேல் பொருள் தவறாகிவிடும்...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சிவகுமாரன்,

    //உண்மையை சொல்லுங்கள் இந்தக் கவிதையின் பின்னணியில் ஒரு குரூர மனம் தெரியவில்லையா ? //

    எதை குரூர மனம் என்று சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை..

    எனக்கு ஆங்கில அறிவும் குறைவு..

    Pessimistic thoughts என்றால் சோர்வு மனப்பான்மை என்ற பொருளில் கையாண்டிருக்கிறீர்களோ அல்லது நம்பிக்கை இல்லாத குணம் என்ற பொருளில் கையாண்டிருக்கிறீர்களோ தெரியவில்லை..

    எவ்வாறாயினும்..

    தங்களுடைய இந்த " ஒத்திகை " யில்
    குரூர மனம் என்பது எங்கே இருக்கிறது என்பது புரியவில்லை..

    சமுதாயத்தின் மீதான ஒரு பயம் அல்லது சாடல் என்று வேண்டுமானாலும் கருதலாமே தவிர,

    இதை குரூர மனம் என்று கருதுவதற்கு இல்லை..

    உண்மையான,
    இறைசிந்தனையாளர்களுக்கு இந்த
    குரூர மனம் என்றுமே வராது
    என்பது என் கருத்து..

    மேலும்,

    ஒரு தாயின் கருவிலிருக்கும் போது 9 ஆம் மாதத்திலேயே குழந்தையின் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலான அந்தக்கரணங்கள் செயல்படத் துவங்கிவிடும் என்பது ஞான நூல் துணிபு..

    அந்த ஒன்பதாம் திங்களிலேயே குழந்தை சிந்திக்குமாம்..

    அடடா இப்படி வந்து ஒரு கருப்பையில் மாட்டிக் கொண்டோமே ?
    இனி ஓர் அன்னை கருப்பை வாராமல் இருக்க என்ன வழி என்று சிந்திக்குமாம் ..

    ஆனால் மண்ணில் பிறந்தவுடன் மாயையை பற்றியவுடன் அந்த எண்ணம் போய்விடுகிறது என்பது வேறு விசயம்..

    ஆக எவ்வாறு நோக்கினும் தாங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள் என்பது எம் கருத்து.


    நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ஜானகிராமன் அவர்களே. பொருள் மாறித்தான் போகிறது.எனக்கு மெய் ஞானம் இல்லாத காலத்தில் ...என்பதே சரி.
    அப்போது நான் தெளிவில்லாத மனநிலையில் இருந்தேன். கம்யூனிசம் பேசிக்கொண்டு நாத்திகம் பக்கம் நோக்கி போய்க்கொண்டிருந்த காலமது.
    Pessimistic thoughts என்பது தாழ்வு மனப்பான்மை அல்லது எதிர்மறையான என்ற பொருளில் சொன்னேன்.
    \\\\உண்மையான,
    இறைசிந்தனையாளர்களுக்கு இந்த
    குரூர மனம் என்றுமே வராது
    என்பது என் கருத்து..////

    இந்தக் கவிதை எழுதிய காலத்தில் எனக்கு இறைசிந்தனை இல்லை என்பதே உண்மை.

    அழும் குழந்தை என்னுடையதென்றால் இப்படி என்னால் எழுதியிருக்க முடியுமா? -- இதைத் தான் குரூர மனம் என்றேன்.
    இந்தக் கவிதைக்கு யாரிடமிருந்தேனும் மாற்றுக் கருத்து வரும் என்று எதிர்பார்த்தேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. வித்யாசமான சிந்தனை . ஆனால் இதற்கும் இறை சிந்தனைக்கும் சம்பந்தம் லேது

    பதிலளிநீக்கு
  12. ஓய்வின்றி அழுவதற்கு
    ஒத்திகைதான் என்பதை
    போய்க்கொஞ்சம் அவளிடமே
    பொறுமையாகச் சொல்லுங்கள்/

    வரிகளும் படங்களும் இயைந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான கவிதை.. ஆனாலும் சின்ன முரண்.. உன் ஆளுமை மீறி நிற்பதாய்த் தோன்றிய பின்தான் கவிதையின் தேதியை நோக்கினேன்.
    இன்னொரு ஒற்றுமை உனக்கும் எனக்கும்..

    உணர்வின் உந்துதலில் எழுதிய சிறுபிராயத்துக் கவிதைகளை செப்பனிட்டு வெளியிட்டால் சிறப்பாய் இருக்கும் என, மாற்று வரிகளும் கருத்துக்களும் தோன்றினாலும் அந்தக் கவிதைகளில் ஒரு காற்புள்ளியைக் கூட மாற்ற ஒப்புவதில்லை மனம்..

    பதிலளிநீக்கு
  14. மிகச் சிறப்பு. குழந்தை அழுகைக்கு இத்தனை விளக்கமா? வாழ்க்கையில் இத்தனையும் இருந்தும் வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். சோதனையும் துன்பங்களும் நிறைந்துதான் இருந்தாலும் சந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தாயவள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. கவிதை நல்லா வந்திருக்கு!ஒத்திகை முடிஞ்சு வாழ்க்கை பயணம் நன்றாக அமையும்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. எல்லாமே யோசித்து
    இப்போதே அழுகிறது.
    படங்களும் வெகு பொருத்தமாய்.

    பதிலளிநீக்கு
  17. குழந்தையின் அழுகைக்கு மொழி அளித்து விட்டீர்கள்!
    ஒரு நொடி எனக்கு- கண்ணதாசனைப் பற்றிய ஒரு கதை நினைவிற்கு வந்து விட்டது... "அவனை எழுப்பாதீர்- அப்படியே தூங்கட்டும்..." என்று அவர் பாடியது...


    brilliant...

    பதிலளிநீக்கு
  18. பொல்லாத சூர்ப்பனகை
    போலொருத்தி வருவாளோ
    எல்லாமே யோசித்து
    இப்போதே அழுகிறது.//

    நூற்றுக்கு நூறு நிஜமான கற்பனை.
    இந்த பாடலை ஷண்முக பிரியா ராகத்தில் கேட்டு ரசிக்க வர்ருங்கள்
    பிச்சுபேரன்/ யு TUBE
    அன்னைக்கு புரிய வில்லை என்று தலைப்பிலே வருகிறது.
    சுப்பு ரத்தினம்

    பதிலளிநீக்கு
  19. கவிதையும், அதற்கான குழந்தையின் படமும் நன்று. குழந்தை பிறந்தவுடனே இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டால் என்ன ஆவது :(

    பதிலளிநீக்கு
  20. மழலையின் அழுகையெனும் ஒரே மொழியை பல சிந்தனைகளாக மொழிபெயர்த்தது கவிதை...

    பதிலளிநீக்கு
  21. குழந்தையின் அழுகைக்கு இத்தனை அர்த்தங்களா.ஆனால் குழந்தைகளின் படங்களைப் பார்க்கவே கஸ்டமாயிருக்கு !

    பதிலளிநீக்கு
  22. அழுகைக்குப் பெரும் பொருள் சொன்ன சிவகுமாரன்! எனக்கென்னவோ 90களின் சிவகுமாரன் அந்தக் குழந்தைகளின் மனதில் புகுந்து பாடினதாய்த்தான் தெரிகிறது.

    அதுபோகட்டும். எட்டுக் குழந்தையும் எட்டு விதமாய் அழுவது பார்க்க(கேட்க அல்ல) சுவாரஸ்யமாக இருக்கிறது. நானும் என் பிள்ளைகள் சின்னதாய் இருக்கையில் இப்படிப் பேய்த்தனமாய் அழுததைப் புகைப்படமாய் எடுத்துவைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. கவிதை அருமை.
    படங்களும் கூடத்தான்....
    மூன்றாவது படம்..."ஐயோ....! அப்படியெல்லாம் சொல்லாதீங்க...காது கொண்டு கேட்க முடியலை..."
    நான்காவது படம்..."செ...என்ன உலகமடா...கண் கோடு பார்க்கவே பிடிக்கலை....!"
    ஏழாவது படம்...(என் மனதை கொள்ளை கொள்கிறது!) "நோ நோ...என்னடா செல்லம்...நான் அபபடி ஒண்ணும் சொல்லவில்லையே....மனம் நோகாதே..." (இது எதிரிலிருப்போர் குரல்!

    பதிலளிநீக்கு
  24. சிவகுமரன்...

    படைப்பாளி சமூகத்திற்கு நம்பிக்கை விதைப்பவன். எனவே நம்பிக்கை தொனியோடு கவிதை எழுதுங்கள். எப்போதும் எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம். எனக்கு இந்த கவிதையின் பொருண்மையிலிருந்து மாறுபடுகிறேன். அழுகையை ரசியுங்கள். அதுகூட அற்புதமான உணர்வுதான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நம்பிக்கைதான் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  25. எனக்கு... என்பதற்குப் பதில் நான் என்று திருத்திக்கொள்ளவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  26. குழந்தையின் அழுகைக்கும் கவிதை படைத்த சிவ குமாரனுக்கு வாழ்த்துக்கள்
    குழந்தயின் படங்களும் கவிதையும் போட்டி போடுகின்றன

    பதிலளிநீக்கு
  27. அஞ்சியஞ்சி அழுகிறது
    அன்னைக்குப் புரியவில்லை

    காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்பது போல இது இதற்காக அழுகிறதோ என்பது போல உள்ளது நல்ல சிந்தனை..வரிகள்.
    http://www.kovaikkavi.wordoress.com
    Vetha.

    பதிலளிநீக்கு
  28. மிக மிக அருமையான கவிதை
    மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
    "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.."
    என்ற கவியரசு அவர்களின் பாடலுக்கு
    இணையான பாடல்
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. ஒரு குழந்தையின் அழுகைக்கு இவ்வளவு அர்த்தங்களா!
    'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' பாடலில் வாழ்கையில் நிம்மதியான உறக்கம் கொள்ள முடியாத நிலைகளை ஒரு தாய் குழந்தைக்கு தாலாட்டாய் பாடுவது போல், உங்கள் கவிதை வாழ்கையில் அழுவதற்கான நிலைகளை சொல்கிறது. ஆனால் ஏனோ ஒரு குழந்தையின் நிலையில் இருந்து இதை ரசிக்க முடியவில்லை. குழந்தை பருவம் ஒன்று மட்டும்தானே எதையும் அறியாத பருவம். அதில் எதற்கு இப்படி ஒரு கற்பனை!
    படங்கள் எல்லாமே ரொம்ப அழகு. அதிலும் நான்காவதும், ஐந்தாவதும் இன்னும் அழகு.

    பதிலளிநீக்கு
  30. நன்றி எல்.கே. இராஜேஸ்வரி மேடன். மோகன் அண்ணா, சந்திரி கௌரி, தென்றல், ரிஷபன், மாதங்கி, சுப்புத்தாத்தா, வெங்கட் நாகராஜ், பத்மநாபன், ஹேமா, சுந்தர்ஜி, ஸ்ரீராம், சரவணன், கவிதை, ரமணி & மீனாட்சி மேடம்

    நன்றி நன்றி நன்றி ,

    பதிலளிநீக்கு
  31. ஹரணி சார்.இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். தங்களது கருத்தோடு முற்றிலும் நான் ஒத்துப் போகிறேன்.நான் பக்குவமடையாப் பருவத்தில் எழுதிய கவிதை இது. மோகன் அண்ணா சொல்வது போல , எதையும் மாற்ற விரும்பவில்லை மனது. முந்தைய பின்னூட்டங்களை படித்தால் புரியும் .

    பதிலளிநீக்கு
  32. அருமையான கவிதைஇ
    "தாய்மனமோ தவிக்கிறது
    தன்பிள்ளை அழுகுரலால்.."

    பதிலளிநீக்கு
  33. ஒரு வருடம் முன்னர் இடுகையிட்ட கவிதையைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி முருகானந்தம் சார்.

    பதிலளிநீக்கு