வியாழன், ஆகஸ்ட் 15, 2013

கத்தியின்றி இரத்தமின்றி??


கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

இந்திய விடுதலைக்கு இளைஞர்கள் கூட்டமெல்லாம்
சிந்திய இரத்தத்தை அளக்கத் தான் இயன்றிடுமோ ?
பங்கு கேட்டு வந்த பரங்கியரின் எலும்பொடிக்க
எங்கு நோக்கினும் இளைஞர்களின் போராட்டம்
செங்குருதிச் சாற்றாலே விடுதலைக்கு நீரோட்டம்.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

ரத்தத்தை நீராக்கி பொன்னுடலை உரமாக்கி
எத்தனையோ உயிர்ப்பலிகள் எண்ணற்ற தியாகங்கள்.
நித்தம் ஒரு போராட்டம் வெள்ளையனுக் கெதிர் நடத்தி
புத்தம் புது மனைவிக்கும் புன்னகைக்கும் குழந்தைக்கும்
முத்தமிட நேரமின்றி முகம்பார்க்க வழியுமின்றி
சித்தமதை கல்லாக்கி சிறை சென்றோர் எத்தனைபேர்?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

பையிலே காசுமின்றி பகிர்ந்து கொள்ள யாருமின்றி 
தையலை தனிமையில் தவிக்கவிட்டு நாட்டிற்காக 
கையிலே கொடியைத் தாங்கி கண்ணிலே வீரம் தேக்கி 
சண்டைக்கு என்றே வந்த சண்டாளப்  படைகளிடம் 
மண்டையில் அடியை வாங்கி மண்ணிலே வீழ்ந்த போதும் 
என்னை நீ தீயிலிட்டு எரித்தாலும் என்திரு நாட்டு
அன்னையின் மணிக்கொடி தன்னை இழப்பேனோ என முழங்கி 
தன்னையே நாட்டிற் கீந்த குமரனின் இரத்தம் இன்னும் 
திருப்பூரின் சாயப் பட்டறையில் கலந்தோடி 
இருப்பதை நம்மில் எவரேனும் நினைத்தோமா ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


எப்போதும் அஹிம்சையே எமக்குத் துணையென்ற
தப்பான பாதையில் தடம்மாறி நாம்நடந்தால்
ஒப்பாரிப்  பாடலுக்கே உரையெழுத வேண்டிவரும் .
துப்பாக்கிக் குண்டுகளால் துரோகிகளை சாய்த்து அந்த
வெப்பத்தால் என்தாயை குளிர்விப்பேன் என முழங்கி
மாதாவின் விலங்கொடித்து மண்ணை மீட்பதற்கு
நேதாஜி அமைத்திட்ட போர்ப்படைக் கீடேது?
வயல்காட்டில் ஏர் கலப்பை ஏந்தி நின்ற கைகளுக்கு
அயல்நாட்டில் அவனளித்த பயிற்சிக்கு இணையேது?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


தீயாக சுட்டெரித்த தினவெடுத்த வெள்ளையனை 
தீவிர வாதத்தால்தான் தீர்க்க வேண்டும் எனவெண்ணி 
வெறிநாய்க் குணம் கொண்ட ஆஷ் என்னும் வெள்ளையனை  
குறிபார்த்துக்  கொல்லுவதில்  தங்களுக்குள் போட்டியிட்டு 
நாட்டுக் குழைத்திட்ட நல்லோர் குழுவொன்று 
சீட்டுக் குலுக்கியொரு சிங்கத்தை தேர்ந்தெடுத்தது.
பிறந்த நாட்டிற்கு  பெரும்பணி செய்வதற்கு 
சிறந்த வாய்ப்பொன்று கிடைத்ததென அவன் மகிழ்ந்தான்.
நாட்டையே கலக்கிவந்த ஆஷ் என்னும் வெள்ளையனை 
தோட்டாவுக் கிரையாக்கி  தன்னையும் மாய்த்திட்ட 
வாஞ்சிநாதன் அன்றைக்கு வடித்த செங்குருதி 
காய்ஞ்சு தான்  போனதுவோ காற்றிலே மறைந்ததுவோ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


வீர சுதந்திரம் வேண்டி நின்ற  வீரர்களை - நெஞ்சில்
ஈரமின்றி தாக்கிய வெறிகொண்ட வெள்ளையன் முன்
காரமில்லாத் தத்துவத்தால் கடுகளவும் பயனில்லை
சாரமில்லா போராட்டம் சத்தியாக் கிரகமெல்லாம்- உடலை
பாரமென எண்ணுகிற கிறுக்கர்களின் கொள்கையாகும்
தூரத்தே நில்லுங்கள் கோழைக் கூட்டமெல்லாம்.
சூரர்கள் கூட்டமிங்கே சூழட்டும் என முழங்கி
தாக்குதல், போராட்டம் , தோட்டாக்கள் என இறங்கி
தூக்குக்குப் பலியான பகத்சிங்கின் கழுத்தில்
விழுந்து இறுக்கிய  வெள்ளையனின் கயிற்றில் தான்
எழுந்து பறக்கிறது இந்தியக் கொடியின்று.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


பார் அதிரக் கவிதை கொண்டு பரங்கியரை எதிர்த்திட்டான் 
பாரதி எனும் புலவன் பாரதத்தின் தவப் புதல்வன் 
ஆயுதக்கணை  கொண்டு ஆர்ப்பரித்த வெள்ளையனை 
காகிதக் கணை தாங்கி கலக்கிட்ட வீரனவன்.
அழுத்தக் குணம் கொண்ட ஆங்கிலேயக் கூட்டத்தை 
எழுத்துக் குவியலினால் எதிர்த்திட்ட சூரனவன்.
மண்ணை அடகுவைத்து மனதில் கவலையின்றி 
கண்ணை மூடி  கனவில் மிதந்தவரை
விண்ணை முட்டுகிற வீரக் கவிதைகளால்  
எண்ணித் தெளியவைத்து எழுச்சி அடைய வைத்தான்.

 எத்தனை இளைஞர் கூட்டம் இன்னுயிர் நீத்தனர் 
அத்தனையும் சரித்திரம் அப்படியே மறைத்ததன்றோ ?

ஏந்திய கொள்கைக்காக இறந்திட்ட பேரை மறந்து 
காந்தியும் நேருவும் தான் கட்டினர் சுதந்திரம் என்றும் 
பாரத சுதந்திரம் எங்கள்  பாட்டனால் வந்ததென்றும் 
நாரத கூட்டமொன்று இன்று நாட்டிலே குதிக்கிறது. 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

                                                                   - சிவகுமாரன் 


(15.08.1988 அன்று என் 18 வயதில்  ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சுதந்திர தின விழாவில்  - கவிஞர் சுந்தரபாரதி தலைமையில்.நான் ஏறிய முதல் கவியரங்க மேடையில் - வாசித்த கவிதையின் ஒரு பகுதி )

4 கருத்துகள்:

  1. வீரமிகு (சாட்டையடி) வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சிவகுமரன்.

    வித்து விளையும்போதே நல்வித்தாக விளைந்திருக்கிறது. அதுவும் அரிய முத்தாகவே பளிச்சிடுகிறது. 18வயதிலேயே இந்தப் பக்குவம் கவிதைகளில் அடர்வாகப் புலப்படுகிறது. சரியாகவே வந்திருக்கிறீர்கள். தமிழுக்குத் தொண்டுசெய்வோம் சாவதில்லை என்றான் பாவேந்தன்.நாமெலலாம் இன்னுமிருந்து செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

    ஒவ்வொரு வாக்கியத்திலும் தொடரிலும் ஆழமான தேசத்தின் மீதான அக்கறை உறுதிப்படுகிறது. வெற்று வார்த்தைகளால் அலைகிற விடலைப் பருவத்திலேயே விவேகமாகவும் கவிஞனாகவும் பரிமளித்திருக்கிறீர்கள் சிவகுமரன்.

    உங்கள் பெற்றோரை வணங்குகின்றேன். நல்லதொரு கவிஞனையும் பொறுப்பான தேசப் பற்றாளனையும் ஈன்றமைக்காக.

    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. புத்தம் புது மனைவிக்கும் புன்னகைக்கும் குழந்தைக்கும்
    முத்தமிட நேரமின்றி முகம்பார்க்க வழியுமின்றி
    சித்தமதை கல்லாக்கி சிறை சென்றோர் எத்தனைபேர்?.....
    தூக்குக்குப் பலியான பகத்சிங்கின் கழுத்தில்
    விழுந்து இறுக்கிய வெள்ளையனின் கயிற்றில் தான்
    எழுந்து பறக்கிறது இந்தியக் கொடியின்று.......
    ஆயுதக்கணை கொண்டு ஆர்ப்பரித்த வெள்ளையனை
    காகிதக் கணை தாங்கி கலக்கிட்ட வீரனவன்....
    ஏந்திய கொள்கைக்காக இறந்திட்ட பேரை மறந்து
    காந்தியும் நேருவும் தான் கட்டினர் சுதந்திரம் என்றும்
    பாரத சுதந்திரம் எங்கள் பாட்டனால் வந்ததென்றும்
    நாரத கூட்டமொன்று இன்று நாட்டிலே குதிக்கிறது.
    (ஆம். இந்த சுதந்திரம் என்னவோ, காந்தி, நேரு குடும்பச் சொத்து போலவே அவர்களால் தான் நமக்கு கிடைத்தது என்ற புரட்டு செய்தி திட்டமிட்டே பரப்பபட்டிருக்கிறது.)

    பதிலளிநீக்கு