நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
புதன், நவம்பர் 12, 2014
திங்கள், நவம்பர் 03, 2014
பிள்ளைக் குறள் 30
இறைவன் கொடுத்தவை எண்ணில் அடங்கா!
நிறைவாய் மனதில் நினை.
நிறைவாய் மனதில் நினை.
நினைத்திடு எப்போதும் நீயாய் பிறரை!
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.
அன்பால் நெருங்கி அறிவால் கவர்ந்திடு!
உன்புகழ் பேசும் உலகு.
உன்புகழ் பேசும் உலகு.
உலகே வியக்க உயர்ந்தாலும் என்றும்
தலைக்கனம் வாரா திரு.
தலைக்கனம் வாரா திரு.
இருப்பாய் நிலவாய்! எதிர்ப்போர்க்குக் கொஞ்சம்
நெருப்பாய் முகங்காட்டி நில்.
நெருப்பாய் முகங்காட்டி நில்.
நில்லாமல் ஓடிடும் நேரம்! தவறினால்
சொல்லாமல் ஓடும் சுகம்.
சொல்லாமல் ஓடும் சுகம்.
சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.
அகத்துள் உளதாம் அறி.
அறிவால் பொருளீட்டி அன்பால் பகிர்ந்து
செறிவாய்ச் செயல்களை செய்.
செறிவாய்ச் செயல்களை செய்.
செய்த தவறை திரும்பவும் செய்யாதே.
தெய்வமும் மூடும் திரு.
தெய்வமும் மூடும் திரு.
திருவருள் காட்டிடும் தெய்வம்! மனதை
ஒருமுகம் ஆக்கி உழை. 30.
ஒருமுகம் ஆக்கி உழை. 30.
தொடரும் ....
சிவகுமாரன்
Labels:
அந்தாதி,
இலக்கொலி (Slogan),
கவிதை,
குறள் வெண்பா,
பிள்ளைக்குறள்
திங்கள், அக்டோபர் 27, 2014
நானும் என் கவிதைகளும்
நான்
உச்சிமலை மீதிருந்து
ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
பாடிவரும் பூங்குருவி.
காடுமலை மேடுகளைக்
கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
உடைத்துவரும் பெருவெள்ளம்.
காரிருளைக் கதிர்வீசி
கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
சுற்றிவரும் வான்மேகம்.
பாலைவனப் பெரும்புழுதி
கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச் சுகந்தங்கள்
சுமந்துவரும் இளந்தென்றல்.
பார்த்தவற்றைக் கவிதைக்குள்
பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
வரங்கேட்கும் கவிச்சித்தன்.
என் கவிதைகள்
உணர்வுகளின் போராட்டம்
உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு
மடைதிறக்கும் நீரோட்டம்.
கனவுலகின் வீதிகளில்
கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
நம்பிக்கை வேரோட்டம்
நரம்புகளின் முறுக்கேற்றம்
நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற
வார்த்தைகளின் அரங்கேற்றம்.
கருத்தரித்த சிறுகுழந்தை
காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
உள்ளடக்கும் தாய்முனகல்.
வீறிட்டு வெளிக்கிளம்பி
வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
பெருங்கோபத் தீப்பிழம்பு.
ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
உலகளக்கும் சிறகோசை .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
குருவிகளின் சிறு கூச்சல் .
பொங்கிவரும் அலைநடுவே
புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
காசிநகர் சிறு கலயம் .
கடைவிரிக்க இயலாத
காலாவதி பழஞ்சரக்கு
அடைகாக்க முடியாத
ஆனையிட்ட பெருமுட்டை.
வர்ணங்கள் வெளுத்திட்ட
கர்ணனுக்கு மறந்துபோன
கடைசிநேர அஸ்திரங்கள்.
அவசரத்திற் கடகு வைக்க
ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
கவிதையல்ல சத்தியமாய்
கவிதையல்ல சத்தியமாய்
திங்கள், அக்டோபர் 20, 2014
பிள்ளைக் குறள் 20
.
உனக்கென்ற ஒன்றை உனையன்றி யாரும்
தனக்கென்று சொல்லத் தகாது.
தனக்கென்று சொல்லத் தகாது.
தகாத பழக்கங்கள் தன்னுடைய வாழ்வில்
புகாமல் கவனித்துப் போ.
புகாமல் கவனித்துப் போ.
போனதை எண்ணி புலம்பாதே! சாதிக்க
வானளவு வாய்ப்புண்டு வா.
வானளவு வாய்ப்புண்டு வா.
வாவென்றால் முன்னின்று வாய்பொத்தி நிற்காதோ!
நீவென்ற பின்னே நிதி.
நீவென்ற பின்னே நிதி.
நிதிக்கு உலகில் நிகருண்டு! உந்தன்
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.
மதிக்கில்லை இன்னுமோர் மாற்று.
மாற்றம் பிறக்கும்! மனதில் துணிவிருந்தால்
வேற்றாய் மலரும் விதி.
வேற்றாய் மலரும் விதி.
விதியை எதிர்கொள்ளும் வீரம் இருந்தால்
எதிர்க்க எவருண்டு இங்கு.
எதிர்க்க எவருண்டு இங்கு.
இங்குனக்கு ஆண்டவன் ஈந்ததை நீபிறர்க்கு
தங்கு தடையின்றி தா.
தங்கு தடையின்றி தா.
தாராளம் காட்டிடு தர்மச் செயல்களில்!
ஏராளம் காட்டும் இறை. 20
தொடரும்....
சிவகுமாரன்
Labels:
அந்தாதி,
இலக்கொலி (Slogan),
கவிதை,
குறள் வெண்பா,
பிள்ளைக்குறள்
திங்கள், அக்டோபர் 13, 2014
பிள்ளைக் குறள் 10
உனைவெல்ல இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.
நினைவில் இதனை நிறுத்து.
நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.
சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.
கூர்ந்து கவனித்துக் கொள்.
கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.
தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!
கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.
புனித வழியாய்ப் புரிந்து.
புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.
தெரிந்தோர் தயவால் தெளி.
தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.
எளிதாய் அடைவாய் இலக்கு.
இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு. 10.
கலங்காதே வீணரைக் கண்டு.
தொடரும்.....
-சிவகுமாரன்
அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை. விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, இன்னும் எழுதிக் கொண்டே---யிருக்கிற குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள். என் மகனைப் போன்ற, இளமையில் பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.
Labels:
அந்தாதி,
இலக்கொலி (Slogan),
குறள் வெண்பா,
பிள்ளைக்குறள்
செவ்வாய், செப்டம்பர் 30, 2014
ஒரு தேவதையும் சில தெய்வங்களும்.
கொள்ளையர்களின் கூடாரங்கள்
கோயிலாய் பரிமளிப்பதால்
குற்றவாளிகள் கும்பிடப்படும்
காலமிது.
கர்ப்பக்கிரகம் கதவடைக்கப்பட்டதில்
பரிதவித்துப் போகிறார்கள்
பக்தர்கள்.
பாவம்....
பிரசாதம் தின்றே
பிழைப்பு நடத்தியவர்கள்.
உழைத்துப் பிழைக்க
வழி தெரியாதவர்கள்
வன்முறை முகம்காட்டி
வழி மறிக்கிறார்கள்.
நீதி தேவதையை
நிந்திக்கிறார்கள்.
ஆனாலும்
நிந்தனைகளாலும்
வந்தனைகளாலும்
நிலை தடுமாறாமல்
நிமிர்ந்து நிற்கிறாள்.
அவள்
அடுத்த வேட்டைக்கு
ஆயத்தமாகிறாள்.
கண்ணில் கட்டிய
கருந்துணியோடும்
கையில் ஏந்திய
கொடுவாளோடும்.
பயந்துபோய் கிடக்கின்றன(ர்)
இன்னும் சில
தினவெடுத்த தெய்வங்களும்
தின்று கொழுத்த பக்தர்களும்.
நீதி தேவதையை
நிந்திக்கிறார்கள்.
ஆனாலும்
நிந்தனைகளாலும்
வந்தனைகளாலும்
நிலை தடுமாறாமல்
நிமிர்ந்து நிற்கிறாள்.
அவள்
அடுத்த வேட்டைக்கு
ஆயத்தமாகிறாள்.
கண்ணில் கட்டிய
கருந்துணியோடும்
கையில் ஏந்திய
கொடுவாளோடும்.
பயந்துபோய் கிடக்கின்றன(ர்)
இன்னும் சில
தினவெடுத்த தெய்வங்களும்
தின்று கொழுத்த பக்தர்களும்.
சிவகுமாரன்
Labels:
கவிதை
சனி, செப்டம்பர் 13, 2014
காதல் வெண்பாக்கள் 45
கவிதை 1
(படத்துக்குக் கவிதை)
பூத்துக் குலுங்குதையா
(வெண்பா அந்தாதி)
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.
பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச் சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.
சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!
வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.
விழித்தால் கனவு விலகுமென எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?
-சிவகுமாரன்
கவிதை 2
(விருப்பக் கவிதை)
கேட்பாரில்லா கீதாஞ்சலி
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.
விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.
எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.
கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக் குடியேற்ற.
கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!
ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.
சிவகுமாரன்
காதல் வெண்பாக்கள் 45
Labels:
அந்தாதி,
கவிதை,
காதல் வெண்பா,
வெண்பா
சனி, ஆகஸ்ட் 30, 2014
ஊடல்
சின்னக் கதிரொளி
சன்னல்வழி வந்து
கன்னத்தைத் தொட்டதடி.
வண்ணக் கனவுகள்
மெல்லக் கலைந்தது
உள்ளமும் சுட்டதடி.
நேற்றுக் கனவினில்
நீயிருந்தாய் - அந்த
நிம்மதி போனதடி.
வேற்று உலகினில்
நாமிருந்தோம் - இன்று
வேதனை மிஞ்சுதடி.
தூக்கக் கனவுக்குள்
நீயிருந்து - எனைத்
தொட்டுத் தழுவுகிறாய்
ஏக்கம் பெருகிட
கண்விழித்தால் - எனை
விட்டு நழுவுகிறாய்
பக்கத்தில் நீமட்டும்
வந்துவிட்டால்- சோகம்
பாதி குறையுமடி
துக்கத்தை உன்னிடம்
சொல்லிவிட்டால் -அந்த
மீதியும் போகுமடி.
கொஞ்சல் மொழிதனை
கேட்டுவிட்டால் -ஒரு
துன்பமும் இல்லையடி
நெஞ்சில் தலைவைத்து
நீபடுத்தால்- மனம்
நிம்மதி கொள்ளுமடி.
ஊடுதல் காமத்திற்(கு)
இன்பமென்று- நான்
உள்ளம் மகிழ்ந்தேனடி
கூடி முயங்கிடும்
காமமில்லை - எனக்
கூறிப் பறந்தாயடி.
ஓயாது உன்பெயர்
சொல்லிச் சொல்லி- என்
நெஞ்சு துடிக்குதடி.
நீயதை ஏனடி
நம்பவில்லை - மனம்
வெந்து துடிக்குதடி,
-சிவகுமாரன்
Labels:
கவிதை
சனி, மே 24, 2014
வியாழன், மே 01, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








.jpg)


