திங்கள், நவம்பர் 08, 2010

இணையில்லாத் தமிழ்

முல்லை இதழ்விரிக்கும் அழகும் - வான்
  முகில்கள் நடைபயிலும் விதமும் -கடல்
எல்லை கடந்து நிற்கும் எழிலும் - மலை
  எங்கும் படர்ந்து நிற்கும் பனியும்- கருங்
கல்லை கனிய வைக்கும் இசையும் - மங்கை 
  கண்கள் வீசும் பேரொளியும் - என்றும்
இல்லை தமிழுக்கிணை இல்லை - இதை 
  எங்கும் பறையறைந்து சொல்வோம்.


புல்லை நிமிர வைக்கும் புறமும் - கொடும்
  புலியை நெகிழ வைக்கும் அகமும் -எதையும் 
வெல்லும் திறம் படைத்த குறளும் - பாண்டி 
  வேந்தன் உயிர் குடித்த சிலம்பும் - பெரும்
வில்லை உடைத்தெறிந்த  இராமன் - தன்
  வீரம் உணர்த்தும் கம்பன் கவியும் - என்றும்
நில்லும் உலகம் உள்ள மட்டும்  - இதை
  நினைக்கும் தமிழர் நெஞ்சம் நிமிரும்..


மண்ணின் கவிஞன் பா ரதியின் - சிந்தை 
  மயக்கும் பாடல்களின் சுவையும்-அந்த
விண்ணை கவிதை கொண்டு இடித்த- பா
  வேந்தன் படைத்த தமிழ் அமுதும்- எங்கள் 
கண்ண தாசன் என்னும் கவிஞன் - அன்று
  கலக்கிக் கொடுத்த தமிழ் மதுவும்-தினம்
உண்டு உடம்பு தனை வளர்த்தோம் - எங்கள்
  உயிரை  தமிழுக்கென நினைத்தோம், 

விண்ணில் மிதக்கும் மீனியலும் - அங்கு 
  வெடித்துச் சிதறும் கோளமைப்பும் - நாம்
பண்ணும் காரியங் களெல்லாம்  - நொடிப்
  பொழுதில் முடிக்கும் கணிப் பொறியும்- இன்னும்
என்ன புதுமையெல்லாம் உண்டோ - அவை
  எல்லாம் தமிழில் வரச் செய்து - இந்த
மண்ணின் மூலை முடுக்கெல்லாம் -தமிழ்
  முழக்கம் கேட்கும்வகை செய்வோம்.  

முன்னைப் பழம்பெருமை பேசி - வெறும்
  மேடைக்  கூட்டமிட்டு முழங்கி - முன்பு
சொன்ன கதைகளையே மீண்டும் - தினம்
  சொல்லிப் புலம்பித் திரியாமல் - இனி
இன்னும்   இலக்கியங்கள் கோடி- உயர்
  இன்பத் தமிழ்மொழியில் ஆக்கி - தமிழ்
அன்னைத்  திருவடியில் சாற்றி  - அதை
  அகிலம் தலை வணங்கச் செய்வோம்.

இந்தி தெலுங்கு மலை யாளம் - போன்ற
  எல்லா மொழிகளுக்கும் தாயாய் - என்றோ
முந்திப் பிறந்த எங்கள் தமிழை - யாரும்
  மூடிப் புதைத்துவிட நினைத்தால் - வரும்
எந்தத் தடைகளையும் தாண்டி - வெறி
  எழும்பி எதிர்த்துப்  போராடி- இரத்தம்
சிந்தி உயிர்கொடுத்தும் எங்கள் - உயர்
  செம்மைத் தமிழ் மொழியை காப்போம்.

                                                               -சிவகுமாரன்

( எட்டாவது  உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளியானது

4 கருத்துகள்:

  1. மிக அருமையாக உள்ளது நண்பரே..!

    பதிலளிநீக்கு
  2. தேனிலும் இனிய தமிழ் க்கவிதைகண்டு சுவைத்தேன் மகிழ்ந்தேன். தேன்...... தேன் .........தெவிட்டாத தேன். ..

    பதிலளிநீக்கு
  3. அருமையும் எளிமையும் உடையது இக்கவிதை. நன்றாக இருக்கிறது சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு