சனி, டிசம்பர் 11, 2010

பாரதி


பாரதி....
உன்
முறுக்கு மீசையினில் முண்டாசு மடிப்புகளில்
எரிக்கும் விழியிரண்டில் எத்தனை கவிநயங்கள்.

வானத்துச் சூரியனை வரவழைத்துப் பொடியாக்கி - தன்
கானத்தில் கலந்துவிட்ட காவியச் சித்தன் நீ.

ஊருக்குக் கவியெழுதி   உணர்ச்சிகளில் உயிர்வாழ்ந்து 
யாருக்கும் பயமின்றி நடைபோட்ட சிங்கம் நீ.

ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப்  போராடி 
சாகாத கவிபடைத்த  சரித்திர நாயகன் நீ.

மண்ணை அடகுவைத்து  மனதில் கவலையின்றி
விண்ணைத் தொட்டுவிடும் வீணான கதைபேசி

கண்ணை மூடி கனவில் மிதந்தவரை 
எண்ணித் தெளியவைத்த எழுச்சிக்  கவிஞன் நீ.

மன்னனை அவன்வீட்டு மங்கையரின் பேரழகை 
சின்ன வீட்டுப் பெருமைகளை சித்தரித்துக் கவியெழுதி 

பொற்கிழிக்கும் புகழுக்கும் பைந்தமிழின் பெருமையெலாம் 
விற்கத் துணிந்திருந்த வீணர்களின் மத்தியிலே 

காசுக்கு அடிமையாகி கால்பிடித்து வாழாமல் 
தேசத்தின் நலனொன்றே தேவையென எண்ணியவன்.

அலியாய் தமிழனெல்லாம் அவதரித்த காலத்தில் 
புலியாய்ப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் நீ.

ஆண்டாண்டு காலம் அடிமைகளைப் பெற்றுவிட்டு 
மாண்டுவிட எண்ணி மரணத்தின் வாயிலிலே 

தமிழ்த்தாயோ தனைமறந்து தலைசாய்ந்து கிடந்திட்டாள்
உமிழ்ந்திட்டார் அவர்முகத்தில் உலகத்து மாந்தரெலாம்

உனைப்பெற்ற பின்னால்தான் உயிர்பெற்று எழுந்திட்டாள்
எனைவெல்ல எவனிங்கே என்றவளும்   முழங்கிட்டாள்

நீகொடுத்த கவி  குடித்து நிமிர்ந்திட்டாள் தமிழ்ப் பெண்ணாள்
தீயாக சுட்டெரித்தாள் தினவெடுத்த மாந்தர்களை.

தீபறக்கும் நின் கவியைத் தினந்தோறும் படிக்கின்றேன்,
நீபிறந்த இந்நாளில் நின்பாதம்  தொழுகின்றேன்.

28 கருத்துகள்:

 1. நல்கவிதை. பாரதியை வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
 2. இது வெற்றுப் பிறந்தநாள்க் கவிதையின் கூட்டத்தில் சேராமல் தனித்து நிற்கிறது-பாரதியின் கவிதைகளைப் புரிந்துகொண்ட ஒரு ரசிகனின் நினைவுகூறலாய்.

  பதிலளிநீக்கு
 3. //தீபறக்கும் நின் கவியைத் தினந்தோறும் படிக்கின்றேன்,
  நீபிறந்த இந்நாளில் நின்பாதம் தொழுகின்றேன்//
  Nice! :-)

  பதிலளிநீக்கு
 4. அந்தக்காலத்தில் பள்ளியில் படிக்கும்பொது அடி, தளை சீர் என்றெல்லாம் படி படி என தமிழாசிரியர் வேண்டுகையில் புரியாமல் புறம் தல்ளிவிட்டோம். உன் கவிதைகள் இப்போது என்னை தூண்டுகின்றன.நானும் யாப்பிலக்கணம் படித்து உன்னைப்போல் கவிதை எழுத முயற்சிப்பேன்.வாழ்த்துகள் சிவகுமாரா.

  பதிலளிநீக்கு
 5. //நீபிறந்த இந்நாளில் நின்பாதம் தொழுகின்றேன்.//
  உங்களுடன் இணைந்து நாங்களும்!
  மிகச் சிறப்பான கவிதை

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. என் அன்பு சிவா ! பாரதியை அணுவணுவாய் ரசித்து , சித்தமெல்லாம் அந்த வித்தகக் கவியின் ஜாலத்தில் கிறங்கி, பாரதிமயமான பக்தன் ஒருவனுக்கே இந்த விதம் கவிதை எழுத முடியும். உன் உச்சிதனை முகராமலேயே எனக்குள் கர்வம் ஓங்கி வளருதடா என் தம்பி!

  பதிலளிநீக்கு
 9. சிவா,பாரதியின் கவிகளை உள் வாங்கியதின் தீவிரம், உங்கள் அத்தனை வரிகளிலும் இருந்தது...தமிழ்த்தாயை எழுப்பியதோடு ,நிறைய கவிஞர்களையும் உருவாக்கி அவர்கள் உள்ளும் உள்ளான் மஹாகவி...

  பதிலளிநீக்கு
 10. நன்றி கலாநேசன்,சுந்தர்ஜி, ஜி, சென்னை பித்தன், கனாக்காதலன், GMP சார், சித்ரா,பத்மநாபன் & மோகன் அண்ணா, அம்மா என்ற வார்த்தைக்குள் உள்ள உணர்வுகளை எப்படி விவரிக்க இயலாதோ அப்படித்தான் பாரதி என்ற வார்த்தையும் ஒவ்வொரு தமிழ்க் கவிஞனுக்கும்.

  பதிலளிநீக்கு
 11. துளித்துளியாய் பாரதியின் வரிகளை ரசித்து ருசித்து கவி சமைத்துள்ளீர்கள் தமிழ் வணக்கத்துடன் யாமும் உம்முடன்

  பதிலளிநீக்கு
 12. கவிக்கு ஓர் கவி.இன்றைய தமிழன் நிலைமையில் பாரதி இருந்திருந்தால்...!

  என்றும் தணியும் இந்த சுதந்திர தாகம் என்று அவர் கேட்ட இடத்திலேயே தமிழன் இன்னும் தாகத்தோடே தவிக்கிறானே !

  பதிலளிநீக்கு
 13. ஆமாம் சகோதரி.
  "சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காரடி"
  என்று அப்போதே மனம் வெம்பியிருக்கின்றானே.

  பதிலளிநீக்கு
 14. மகாகவிக்கு இன்னுமோர் கவியின் கவிதாஞ்சலி. உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் கவிதை

  பதிலளிநீக்கு
 15. பாட்டுக்கு ஒரு புலவன்
  பாரதிக்கே கவிதையா?
  பலே..பலே....

  பதிலளிநீக்கு
 16. கவிதையை நிறைத்திடும் வார்த்தைகள் -அவை

  கைகள் சொடுக்கிடும் சாட்டைகள் !! - கவிதை மிக நன்றாக இருந்தது, சிவகுமாரன் அவர்களே...இன்னும் எத்தனை நாள்தான் விடிவுக்காய் காத்திருப்போம்? விழியிரண்டும் வேர்த்து நிற்போம் ? சொல்லடி சிவசக்தி..

  பதிலளிநீக்கு
 17. உங்கள் கவிதை எட்டி உதை உங்கள் வலைப்பக்கத்தில் காணவில்லை என்ற சேதி வருகிறது. என் பதிவு பிறந்த காரணம் தமிழ்மணத்தில் இணைத்தும் அதில் வரக்காணோம். எங்கோ தவறு நேருகிறது.

  பதிலளிநீக்கு
 18. அடடா.. லேட்டா வரேனே...
  பாரதியை அணுஅணுவாக ரசித்தது தெரிகிறது... அற்புதமான கவிதை சிவகுமாரன். பாரதி பக்தன் நீங்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 19. சிவகுமாரன்! உன் தந்தை போல் இந்தப் பின்னுட்டங்களை பார்த்து புளகாங்கிதமடைகிறேன். வேறென்ன சொல்ல!---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 20. @ காஷ்யபன்......
  சத்தியமாய் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறேன் அய்யா. இறந்து போன என் தந்தை என்னை ஆசிவதித்ததாகவே உணர்கிறேன்.இது என் பேறு.
  வலைப்பதிவு தொடங்கியதும் நான் முதலில் தொடர்பு கொண்டது உங்களைத்தான். என் வலைத்தளத்துக்கு வந்த முதல் வாழ்த்தும் உங்களிடமிருந்து தான்.
  நன்றி நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 21. வருகைக்கு நன்றி RVS ஆரண்யவிவாஸ்,Thanklish payan , GMP சார், எல்லென் சார், தினேஷ்குமார், சகோதரி ஹேமா & ராதேஷ்,

  பதிலளிநீக்கு
 22. @ GMP ...
  தவறு என்னுடையது தான், வெளியிட்ட பின் மறுபடி எடிட் செய்தேன், மீண்டும் வெளியிட மறந்து போனேன்.தமிழ் மணம், இன்டலி இதிலெல்லாம் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை

  பதிலளிநீக்கு
 23. எழுச்சிக் கவிஞருக்கு சற்றும் குறையாத எழுச்சி மிக்க வாழ்த்து! பாராட்டுகள் சிவா!!

  பதிலளிநீக்கு
 24. படிக்கப் படிக்கப் பரவசம், சிவகுமாரன்.
  தமிழ்த்தாய் முழங்குவது அருமையான அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 25. இன்னொரு சுற்று சுற்றி மீண்டும் இந்தக் கவிதை படிக்க வந்தேன் சிவகுமாரன். மிக நன்றாக இருக்கிறது.

  'நீகொடுத்த கவி குடித்து' - எத்தனை முறை படித்தாலும் போதை குறையவில்லை ஐயா.

  பாரதியின் மீசையைப் பற்றி ஒரு பா புனையுங்களேன்? பாரதியின் முகப் பொலிவுக்குக் காரணம் அவன் மீசையா கண்களா? எதில் வெப்பம் அதிகம்?

  பாரதியின் கண் திறந்தத் துணிச்சலுக்கு இன்னொரு உதாரணம்: ரீவணன் கதை. படித்திருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 26. ராவணன் கதையா ?
  படித்ததில்லையே
  விவரம்
  சொல்லுங்கள் அப்பாஜி.

  பதிலளிநீக்கு