ஞாயிறு, ஜனவரி 30, 2011

அய்யோ


காத்திருக்கும் கழுகுக்கும்
படமாக்கிய கலைஞனுக்கும் 
கவிதையாக்கிய கல் நெஞ்சனுக்கும் 
யார் சொல்வது 
அது 
அவர்களுக்கான் 
இரை அல்ல என்று. 



புதன், ஜனவரி 26, 2011

புயலடிக்கும் நேரத்திலும்


கண்ணுக்கெட்டும் தூரம் வரை
    கடலு தானுங்க - அது
ஒண்ணு மட்டும் எங்களுக்கு
   உசுரைப்  போலங்க.

ஆழமான கடலுக்குள்ள
  பயணம் போகிறோம் - நாங்க
வாழ வேற வழியில்லாம
   வலையை வீசுறோம்.

புயலடிக்கும் நேரத்திலும்
   பொழைக்கப் போகிறோம்
வயத்துக்காக வாழ்க்கையையே
 அடகு வைக்கிறோம்.

கோடிக்கணக்கில் மீன்களெல்லாம்
   வண்டி ஏறுது - இங்கே
குடிசைக்குள்ள எங்க புள்ள
   பசிச்சு அழுவுது.

தண்ணீரிலே எங்க வாழ்க்கை
   தத்தளிக்குது.- எங்க
கண்ணீராலே கடலு கூட
    உப்புக் கரிக்குது.

மீன்கள் நமக்கு உணவு ஆகும்
   தெரிஞ்ச சேதிங்க - நாங்க
மீன்களுக்கே உணவு ஆன
   கதையும் உண்டுங்க

எல்லைக்குள்ள எங்களுக்கு
  எதுவும் கிடைக்கல - கொஞ்சம் .
எல்லை தாண்டி மீன் பிடிச்சா .
    உசிரு மிஞ்சல .

அரக்கன் போல சுனாமி வந்து
   அள்ளித் தின்றது - நெஞ்சில்
இரக்கமின்றி இலங்கைப் படை
    சுட்டுத் தள்ளுது.

சிங்களரின் துப்பாக்கிகள்
  சுட்டுப் பார்த்திட - அட
எங்களோட உடம்பு தானா
   இலக்கு ஆனது ?

நாங்க என்ன நாட்டையேவா
   புடிக்கப் போகிறோம் ?
ஏங்க இப்படி இலங்கை எங்களை
  காவு வாங்குது ?

புலிகளைத்தான் புடிச்சு எரிச்சு
    புதச்சுட்டாங்களே-வெறும்
எலிகள் நாங்க எங்களை ஏன்
   வதைக்கிறாங்களோ   

வங்கக் கடல் மீனுக்கெல்லாம்
   வெலை உசருது - இங்கே
எங்களோட உசுரு மட்டும்
   சல்லி சாச்சுது.

தாக்குதலை தாண்டி தாங்க
  வலையை வீசுறோம்
கேக்க ஒரு நாதியில்லை
   கெடந்து சாகுறோம்.

கச்சத் தீவை அப்படியே
  தாரை வார்த்தீங்க
மிச்சத்தையும் வார்த்திடுங்க
   தீர்ந்து போகுங்க.

ஓட்டுக் கேட்டு ஓடி வார
   உத்தமரெல்லாம் - கொஞ்சம்
போட்டில் ஏறி கடலுக்குள்ள
   வந்து பாருங்க.

தாக்குதலை நிறுத்தச் சொல்லி
   பேசிப் பாருங்க - எங்க
வாக்குகளை அள்ளித் தாரோம்
   வாங்கிக் கொள்ளுங்க.

தெரியுமுங்க ! வாயை யாரும்
    தெறக்க மாட்டீங்க - நீங்க
எரியுறதில் புடுங்குவீங்க - வேற
    என்ன செய்வீங்க ?

அப்பன் தாத்தா சாவு எல்லாம்
    இந்தக் கடலிலே - ஆனா
அப்புறமும் மீன் புடிப்போம்
   வேற வழியில்ல.

இன்னுமொரு சுனாமி அலை
   எப்ப வருமுங்க ? - வேற
ஒண்ணுமில்ல , ஒரேயடியா
    போயிரலாங்க.      



சனி, ஜனவரி 22, 2011

கண்ணுக்குள் முள்




நானிங்கே படும்பாடு
  உனக்குத் தெரிகிறதா ?
ஊனின்றி உறக்கமின்றி
  உருகுவது புரிகிறதா ?

நாளைக்கே வருவதாக
  நாலைந்து முறையென்னை
சோலைக்குள் முத்தமிட்டு
   சொல்லிவிட்டு  சென்றவனே

நானிங்கே படும்பாடு
  உனக்குத் தெரிகிறதா ?

நீதொட்ட இடமெல்லாம்
  நெருப்பாய்க் கொதிக்கிறது.
தீபட்ட புண்ணைப்போல்
   தேகமெலாம் எரிகிறது.

உன்வரவை தினந்தோறும்
  எதிர்பார்த்துக் காத்திருந்து
என்னுடைய விழியிரண்டும்
   இருட்டாகிப் போனதையா .

ஊர்வாயில் நம்பேச்சு
   உதைபட்டுத்  தவிக்கிறது
பேர்சொல்லி பின்னாடி
   பேசிச் சிரிக்கிறது.

தங்கச்சி ஒருத்தி
  தறுதலையா சுத்தினான்னு
எங்கக்கா கல்யாணம்
  என்னாலே நின்னுடுச்சு

நடுத்தெருவில் கால்வச்சு
  நான்நடந்து போகையிலே
குடும்பத்து மானமெல்லாம்
   கொடிகட்டிப் பறக்குதையா .

உன்னினைவை அடியோடு
   உதறிவிட நினைச்சாலும்
கண்ணுக்குள் முள்விழுந்த
    கதையாக இருக்குதையா

கைவச்சு முள் எடுக்கும்
  கலைஎனக்குத் தெரியவில்லை
தைச்ச வலி தாங்குகிற
   சக்தியும் எனக்கில்லை

தூசிவந்து விழுந்திருந்தா
   துடச்சிவிட்டுப்  போயிருப்பேன்
ஊசிபோல முள்விழுந்து
   உறுத்துதையா என்கண்ணை. .

உனக்கென்ன ஆண்பிள்ளை
   ஊர்கவலை உனக்கில்லை
எனக்குத்தான் அவமானம்
   ஏமாற்றம் எல்லாமே.

உன்னழகில் உன்பேச்சில்
  உள்ளத்தை பறிகொடுத்து
இன்னொருத்தி பணக்காரி
   எப்படியோ கிடைச்சிருப்பா

கூழுக்கே தினந்தோறும்
  சதிராட்டம் போடுகிற
ஏழைக்குக் காதலிக்க
  இல்லை உரிமையின்னு

அன்னைக்கே எங்கம்மா
  அடிச்சு சொன்னதெல்லாம்
இன்னைக்குத் தானய்யா
    எனக்குப் புரிகிறது.

தூக்க மாத்திரையோ
   தூக்கு மாட்டிக்கிட்டோ
போக்கிக்கலாம் என்னுயிரை
   போனதெல்லாம் வந்திடுமா ?

ஒத்தப்  பனைமரமா
    உலக்கைக்கு நெல்லுமியா
செத்த பொணம்போல
   சீரழிஞ்சு நிக்கிறே(ன்)யா

உயிருந்தன் நிழல்தேடி
   ஊரெல்லாம் சுத்துதையா
உடல்மட்டும்   இங்கிருந்து
  உருகித் தொலைக்குதையா 

  



திங்கள், ஜனவரி 17, 2011

அழுதுண்டு வாழ்வாரே......


கடவுள் என்பவன் கால வயலில் 
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில்  வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும்  மேட்டுப் புறமும்
எந்த சூழலில் இருந்த போதும்
சோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்
சேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.
உழவர் நாங்கள் தின்ற மிச்சமே
உலகம் உண்ட காலமும் உண்டு.
புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.
ஏர்முனைப்  பேனா எடுத்த நாங்கள்
கூர்மணற் காகிதம் குத்திக்  கிழித்து
எழுதிய கவிதைக்  கீடாய் எவரும்
எழுதிய தில்லை இல்லவே இல்லை.
இன்றோ..
சுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்
கழன்று கொண்டார் காலப் போக்கில்.
எழுதிக்  கிழிக்க ஏர்முனை  இல்லை
உழுது விளைக்க காகிதம் இல்லை.
பச்சை வயல்கள் பட்டா வாகி
மச்சு வீடாய் மாறிப் போயின.
உழுது விளைத்த உழவு மாடுகள்
அழுது போயின அறுபட கேரளம்
பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்

பிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை
உழைக்க வேண்டிய அவசியம்  இல்லை.
தலையில் அடித்து தலைவர் சொன்னார்
ஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில் 
இலவசம் தொடரும் இலவசம் தொடரும்
செலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.
ரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி
வாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.
அடுத்த வருடம் இன்னும் வசதி 
அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்
கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
தைத் திருநாளே ஆண்டின் முதலென 
வைத்தார் தலைவர் வாழ்க வாழ்க 
நாடு செழிக்க நல்லோர் வாழ 
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் 
பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.   






செவ்வாய், ஜனவரி 11, 2011

ஹைக்கூ முத்தங்கள் 40



கூட்டுக்கு இரை கொணர்ந்த
குருவியின் அலகு
தந்தையின் முத்தம்.





                              
                              
                              
                                   வறண்ட நிலவெடிப்பில்
                                   வானின் மழைத்துளி
                                   தாயின் முத்தம்.












விரிந்த பூவிதழில் 
விழுந்த பனித்துளி
மழலையின் முத்தம்.









              வெண்ணெய் தடவிய
              வெண்ணிலாக் கீற்று 
              காதலி முத்தம் 






சூரியக் கதிரில்
சொட்டும் தேன்துளி
மனைவியின்  முத்தம்

சனி, ஜனவரி 08, 2011

உசிரோ .......உசிரு



# நம்ம சமூகம் நசிஞ்சு கெடக்குது
  போராட வேணுமின்னு போனாக அவுக.
  இரும்பு போல இருந்த மவராசா
  அடிக்கு பயந்து ஆத்துல விழுந்தாக.
  சங்க ஆபீஸில சட்டம் போட்டு தொங்குது
  அவுக படம் !


# தலைவருக்கு தண்டனை
  தந்தாகன்னு சொல்லி
  பத்த வச்சுகிட்டு  பரிதவிச்சு செத்தான்
  தவமிருந்து பெத்த தங்க மகன். 
 "தியாகியை பெத்த தாயே"ன்னு சொல்லி
  ஆறுதல் வார்த்தையும்
  அஞ்சாயிரமும் தந்துபுட்டு
  காரில ஏறிட்டாரு கட்சித் தலைவரு !


# காலேசில் படிச்ச கடைக்குட்டி மகளை
   பஸ்சோடு வச்சு பொசுக்குனாக சிலபேரு.
   இரக்கப்பட்டு வந்தாக எதிர்க்கட்சிகாரவுக.
   போட்டோ எடுத்துக்கிட்டு போனவுக
   ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி
   ஓட்டு கேட்டாக!


# ஒப்புரான சத்தியமா
   உளமார சொல்லுறேன்
   கொன்னு போட்டுப்புட்டு
   கொடியைக் கட்டலாம்.
   உசுரோட  எரிச்சுப்புட்டு
   ஓட்டு கேட்கலாம்
   செத்தபிறகு சிலையா வைக்கலாம்.
   யாருக்காவது வேணுமின்னா சொல்லுங்க
   ஒண்ணுக்கும் உதவாம
    உசிரு ஒண்ணு இருக்குது.
      
                                                   -சிவகுமாரன்  
(இது மீள்பதிவு. பதிவுலகில் நுழைந்த புதிதில் இடுகையிட்டது. அதிகம் கவனிக்கப்படாததால் மீண்டும் இந்த ஏலம்.)

திங்கள், ஜனவரி 03, 2011

கனலாய்ப் பிறக்கட்டும்



                         ( வெண்பா )

இளங்கவிஞா  ஏடெடுத்து ஏழை மனிதர்
உளங்களிலே நம்பிக்கை ஊற்று - வளங்கொழிக்கும்
நன்மை தரு(ம்)விதைகள் நானிலத்தில் நீவிதைத்தல்
உண்மையெனில் பின்தொடரும் ஊர்.

காப்பியங்கள் எல்லாம் கனலாய்ப்  பிறக்கட்டும்
தீப்பிழம்பு சொல்லில் தெறிக்கட்டும் - யாப்பிழந்து
போனதெனில் போகட்டும்! போலிகளின் நாவறுக்க
ஆனதெனில் காவியமே ஆம்.


கருப்புப் பணமுதலைக் காலிகளை உந்தன்
செருப்பால் மிதித்துவிடு! சீறும்- நெருப்பு
தெறிக்கட்டும் உன்கவியில்! தீயோர் எலும்பை
முறிககட்டும் உன்கவிதை மூச்சு.

போர்க்குணமே இல்லா புலவனது பாட்டெல்லாம்
யார்க்குதவப் போகிறது ? எட்டிமரம் - ஊர்க்குள்
எழுந்தென்ன  ஆகிறது ? ஆழ்கடலில் நீரும்
விழுந்தென்ன எல்லாமே வீண்.
 


விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
எழுந்தால் தொடுவாய் இமயம்- அழுந்தும்
புதைமணல் வாழ்வினி போதும்! விதிக்குச்
சிதையினை மூட்டிச் சிரி.

                                                          

                                                    -சிவகுமாரன்