ஞாயிறு, ஜூலை 31, 2011

ததும்காததும் 3


தலைப்பை பார்த்து  பயந்து விட்டீர்களா ?
வேறொன்றுமில்லை .
அன்புச்  சகோதரி மஞ்சுபாஷினியின்  வேண்டுகோளுக்கிணங்க முத்தான மூன்று பதிவு தான் இது. எனக்குப் பிடித்ததும் , பிடிக்காததும் .ததும்காததும்.

எல்லாவற்றையும்  மூன்றுக்குள் அடக்குவதும் , சிலவற்றில் இரண்டுக்கே திணறுவதுமாய்.... கவிதை  தான் எனக்கு சுலபமாய் இருக்கிறது.
இனி..

1. பிடித்த விஷயங்கள் 
 கடவுள் நம்பிக்கை 
 கவிதையோடு வாழ்க்கை 
 கம்யூனிசக் கொள்கை 

2. பிடித்த உறவுகள்
உலகைக்  காட்டிய அம்மா
உயிரில் கலந்த மனைவி 
உணர்வில் ஒன்றிய சகோதரர்கள்

3. பிடித்த உணர்வுகள் -1 (செய்வது)
விட்டுக் கொடுத்தல் 
தட்டிக் கொடுத்தல் .
கட்டுப் படுதல்

4. பிடித்த உணர்வுகள்-2 ( செய்ய நினைப்பது)
விட்டுப் பிடித்தல்
தட்டிக் கேட்டல் 
கட்டறுத்தல்  

5. பிடிக்காத உணர்வுகள் 
குற்றம் பார்த்தல்
பற்ற வைத்தல் 
வெ(ற்)றுப் பேத்தல் .

6. முணுமுணுக்கும் பாடல்கள் .
மோகம் என்னும் தீயில்

7. பிடித்த பாடல்கள்
காற்றில் எந்தன் கீதம்
ஏழிசை கீதமே
என்னுள்ளே எங்கோ


8. பிடித்த பாடகர்கள்
ஜேசுதாஸ்
என் தம்பி
என் அம்மா 


9 .பிடித்த திரைப் படங்கள்.
மறக்க முடியாத "கர்ணன்" - நெஞ்சை 
உருக்கிய  எங்கள் "பாரதி" - கண்ணீர் 
சுரக்க வைத்த "தவமாய் தவமிருந்து

10. ரசித்த திரைப்படங்கள் 
பாட்ஷா
எந்திரன்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி  

11ரசித்துப் பார்ப்பவை 
கால்பந்து 
காமெடி 
கார்ட்டூன் (வேறு வழி?)



12. பிடித்த பொன்மொழிகள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 

எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம் 
சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் .

எங்கே விழுந்தாயென பார்க்காதே   
எங்கே வழுக்கினாயென பார் 

13. அன்புத் தேவைகள்
பலன் எதிர்பாரா உறவு
நலம் நாடும் நட்பு
வளம் தரும் இறையருள்.

14. வலிமையை அழிப்பவை
நையப் புடைக்கும் நோய்  
அய்யோ பாவம்....வாய் 
பொய்யாய் இரைக்கும் புகழ் 


15. வெற்றி பெற வேண்டியவை
நிறைய முயற்சி
திறமை
இறையருள்

16. கற்க விரும்புவது
புல்லாங் குழல் வாசிக்க
தில்லாய் கார் ஓட்ட
நல்லா கணிணி இயக்க

17. சோர்வு நீக்கத் தேவையானவை
"பா"க்கள்
ஊக்கம்
தூக்கம்

18. பயமுறுத்தும் பயங்கள்.
இறங்க மறுக்கும்  விலைவாசி   
இரவுநேரத் தொலைபேசி
இணையத்தில் பிள்ளைகள் பெறும் தேர்ச்சி

19. எரிச்சல்  ஊட்டுபவை .
நரம்பின்றி பேசும் நாக்கு
வரம்பின்றி நுழைக்கும் மூக்கு
அரசியல்வாதியின் வாக்கு.

20. புரிந்தும் புரியாது குழப்புவது 
ஜோதிடம்
மரணமிலாப் பெருவாழ்வு
அரசியல் கூட்டணி 


21. இனிமையானவை
தமிழ்
மழலை
இசை.

22. ஆசைப்படுவது
ஒரே பிள்ளையின் உயர்கல்வி - கர்வப்படுவதாய்
ஒரேயொரு காவியம் - கவிதையாய்
ஒரேயொரு முறை காசி - கால்நடையாய்

23. அடைய விரும்புவது
தடம் பதிக்கும் வாழ்க்கை
கடன் இல்லா மரணம்
பிறவா வரம்.
                                                                               -சிவகுமாரன் 


இந்தத் தொடருக்கு என்னை அழைத்த சகோதரி மஞ்சுபாஷினிக்கு என் நன்றிகள்.
சக பதிவர்கள் பலரும் பதிவிட்டு முடித்ததால் விடுபட்டவர்கள் யாவரும் தொடரலாம் 

சனி, ஜூலை 23, 2011

முட்கள் முளைத்ததடா


பாருக்குள்ளே நல்ல நாடெங்கள் நாடென்று 
   பாரதி சொன்னானடா - அந்தப்
   பாவலன் பாடிய லட்சியங்க ளின்று
   பழங்கதை ஆனதடா   
சேரனும் சோழனும் பாண்டிய வேந்தனும் 
   ஆண்டதோர் தேசமடா - இன்று
    சில்லறப் பேய்களின் சட்டைப்பைக் குள்ளது 
    சிக்கிக் கிடக்குதடா .


மண்டை உடையுது இரத்தம் பெருகுது 
   மானுடம் வேகுதடா - இந்த 
   மண்ணில் தினந்தினம் மக்களின் கூக்குரல் 
   விண்ணைப் பிளக்குதடா .
சண்டையில் மோதலில் சாதிக் கலவரம்
   சந்தி சிரிக்குதடா - சாதிச் 
   சங்கம் வளர்த்தவன் மூட்டிய தீயினில் 
    சந்ததி சாகுதடா .


*குண்டு வெடிக்குது குடல் சிதறுது 
   குலை நடுங்குதடா - வாயில் 
   கோரப் பற்கள் கொண்டு இரத்தம் குடிக்கிற 
   கூட்டம் சிரிக்குதடா .
அண்டைய தேசத்தின் அக்கிர மத்திற்கோர் 
    அளவின்றி போனதடா - அதன் 
    ஆட்டம் நிறுத்திட ஆளும் வர்க்கத்திற்கு
    அருகதை இல்லையடா .

கட்சிக் கொடிகட்டி காரினில் மந்திரி
   ஊர்வலம் போகுதடா - அவன்
   காரில் மிதிபட்டு வண்ண மலரெல்லாம் 
   கண்ணீர் வடிக்குதடா 
முட்சர மேடையில் ஏழையின் பாதங்கள் 
   நர்த்தனம் ஆடுதடா - அவன் 
   முக்கள் முனகலை வான்முட்டும் கோஷங்கள் 
   மூடி மறைக்குதடா.

விக்கித் தவிக்கிற வாய்க்குத் தண்ணீரில்லை 
    வேதனை மிஞ்சுதடா - தினம் 
    வீதிக் குழாயடி சண்டையில் மங்கையர்
    வீரம் தெரியுதடா 
தக்கத் திமிதிமி தக்கத் திமிதிமி 
    தாளங்கள் கேட்குதடா - இந்த 
    தேசத்தின் சந்தோசக் கூச்சலில்லை -அவை
    தண்ணீர் குடங்களடா 


தாலாட்டும் இல்லாமல் தாய்ப்பாலும் இல்லாமல் 
   தளிரொன்று வாடுதடா - அதன் 
   தாய்தந்தை பெண்ணென்ற காரணத்தா லதைத்
   தூக்கி எறிந்தாரடா.
பாலூட்டும் அன்னைக்கே பச்சிளம் பிள்ளைகள் 
   பாரமாய்ப் போனதடா - இந்தப் 
   பாரத நாட்டுக்கு வந்திட்ட கேடென்ன,
   பாரே சிரிக்குதடா 


*பள்ளிக் குழந்தைகள் செய்வதறி யாமல் 
   திக்கித் திணறுதுடா - அவர்  
   பாடத்தில் கைவைத்த பாவியர் செய்கையால் 
   பாதை குழம்புதடா 
துள்ளித் திரிகிற காலத்தில் பாரங்கள் 
   தூக்கிச் சுமக்குதடா - அவர்
   தோளில் சுமையேற்றி தோல்வி பயமூட்டி 
    தூக்கம் பறித்தோமடா .


*எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின் 
   வங்கியில் தூங்குதடா - இங்கே 
 ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள் 
   இறுக்கமாய்த் தொங்குதடா 
தங்கமும் வைரமும் பூட்டி வைத்து எங்கள்
   சாமி சிரிக்குதடா - எங்கள் 
   தங்கையர் மூக்குத்தி துவாரத்தில் ஈர்க்குச்சி 
   மின்னி சிரிக்குதடா . 


*சிங்களத் தீவினில் எங்கள் தமிழினம் 
   செத்து மடியுதடா - எங்கள் 
   சிங்கத் தமிழினம் சென்ற விடமெல்லாம் 
   சிந்துது இரத்தமடா
பொங்கும் நுரையோடு எங்கள் கடலோரம் 
    பிணம் ஒதுங்குதடா - எங்கள்
    பொங்கு தமிழர்க்கு இன்ன லென்றோம் - அட 
    சங்காரம் எப்போதடா ?    


ரத்தச் சுவடுகள் தேச வளர்ச்சியின் 
   முத்திரை ஆனதடா - சில 
   ராட்சசப் பேய்களின் பற்களில் தேசத்தின்
   இரத்தம் வ்டியுதடா 
புத்தனும் காந்தியும் போதனை செய்தவை 
   பூமிக்குள் போனதடா - அன்று
   பூக்கள் மலர்ந்திட போட்ட விதையினில 
   முட்கள் முளைத்ததடா    


                                                    -சிவகுமாரன் 


 (1992 ஆம் ஆண்டு எழுதி, த மு.எ,ச கலை இரவில் பாடப்பட்டது. 
  *குறியிட்டவை பிற்சேர்க்கைகள் ) 

  

திங்கள், ஜூலை 18, 2011

காதல் வெண்பாக்கள் 22

          மாப்பு

பாதை தடுமாறும்   
  பார்வை வழிமாறும்
போதை தலைக்கேறும்,
   போடா,போ- காதல்
தொடங்கிற்றா ? போயிற்றா 
  தூக்கம் ? இனிமேல்
அடங்கப்பா நீயும் 
   அடங்கு .


           ஆப்பு

அம்மா உனக்கினி 
   அ​​​​​ந்நியம் ஆகிடுவாள்
சும்மா வரும்கோபம் 
   சுர்ரென்று - தம்மால்
முடிந்தவரை பொய்சொல்வாய், 
   மோகம் தொடங்கிற்றா
அடித்தாய் உனக்கேநீ 
   ஆப்பு.

ஞாயிறு, ஜூலை 03, 2011

ஒத்திகை

 பிஞ்சுக்கால் கையுதைத்து
   பிள்ளையது அழுகிறது
நெஞ்சினிலே ஈவிரக்கம்
   இல்லாதோர் வாழுகின்ற
வஞ்சனை உலகுக்கு
   வந்துவிட்ட கோலமெண்ணி
அஞ்சியஞ்சி அழுகிறது
   அன்னைக்குப் புரியவில்லை 

தாய்ப்பாலும் தாலாட்டும் 
   தாவென்று அழவில்லை 
நோய்கண்டு துயருற்று
   நொந்துபோய் அழவில்லை
நாய்பட்ட பாடுபின்னர்
   படப் போகும் நிலையெண்ணி
வாய்விட்டு அழுகிறது
   வஞ்சிக்குத் தெரியவில்லை .   
நாளைய உலகம்
   நமக்கெதிராய் இருந்திடுமோ
வேளை பிறந்திடுமோ
   வேதனைதான் வளர்ந்திடுமோ
காளையாய் வளர்ந்தபின்
   கையேந்தும் நிலைவருமோ ?
தாளைப் பணிந்து
   தலைவணங்கும் நிலைவருமோ ?

இல்லறம் இனித்திடுமோ 
   இனிப்பின்றி போய்விடுமோ
நல்லதொரு பெண்ணொருத்தி 
   நமக்காக வருவாளோ 
பொல்லாத சூர்ப்பனகை
   போலொருத்தி வருவாளோ
எல்லாமே யோசித்து 
   இப்போதே அழுகிறது.

சத்தியமும் தர்மங்களும் 
  இல்லாத இந்நாட்டில் 
எத்தனை துயர்வருமோ
   எவ்வளவு இடர்வருமோ
இத்தனையும் தம்மால் 
   எதிர்கொள்ள இயன்றிடுமோ
அத்தனையும் யோசித்து 
   அழுகிறது அக்குழந்தை

 தாய்மனமோ தவிக்கிறது
   தன்பிள்ளை அழுகுரலால்
வாய்விட்டு அழுவதெல்லாம்
   வாழ்க்கையெனும் நாடகத்தில்
ஓய்வின்றி  அழுவதற்கு 
   ஒத்திகைதான் என்பதை 
போய்க்கொஞ்சம் அவளிடமே 
   பொறுமையாகச் சொல்லுங்கள் . 



-சிவகுமாரன்
  1990- ஏப்ரல்