சனி, ஜூலை 23, 2011

முட்கள் முளைத்ததடா


பாருக்குள்ளே நல்ல நாடெங்கள் நாடென்று 
   பாரதி சொன்னானடா - அந்தப்
   பாவலன் பாடிய லட்சியங்க ளின்று
   பழங்கதை ஆனதடா   
சேரனும் சோழனும் பாண்டிய வேந்தனும் 
   ஆண்டதோர் தேசமடா - இன்று
    சில்லறப் பேய்களின் சட்டைப்பைக் குள்ளது 
    சிக்கிக் கிடக்குதடா .


மண்டை உடையுது இரத்தம் பெருகுது 
   மானுடம் வேகுதடா - இந்த 
   மண்ணில் தினந்தினம் மக்களின் கூக்குரல் 
   விண்ணைப் பிளக்குதடா .
சண்டையில் மோதலில் சாதிக் கலவரம்
   சந்தி சிரிக்குதடா - சாதிச் 
   சங்கம் வளர்த்தவன் மூட்டிய தீயினில் 
    சந்ததி சாகுதடா .


*குண்டு வெடிக்குது குடல் சிதறுது 
   குலை நடுங்குதடா - வாயில் 
   கோரப் பற்கள் கொண்டு இரத்தம் குடிக்கிற 
   கூட்டம் சிரிக்குதடா .
அண்டைய தேசத்தின் அக்கிர மத்திற்கோர் 
    அளவின்றி போனதடா - அதன் 
    ஆட்டம் நிறுத்திட ஆளும் வர்க்கத்திற்கு
    அருகதை இல்லையடா .

கட்சிக் கொடிகட்டி காரினில் மந்திரி
   ஊர்வலம் போகுதடா - அவன்
   காரில் மிதிபட்டு வண்ண மலரெல்லாம் 
   கண்ணீர் வடிக்குதடா 
முட்சர மேடையில் ஏழையின் பாதங்கள் 
   நர்த்தனம் ஆடுதடா - அவன் 
   முக்கள் முனகலை வான்முட்டும் கோஷங்கள் 
   மூடி மறைக்குதடா.

விக்கித் தவிக்கிற வாய்க்குத் தண்ணீரில்லை 
    வேதனை மிஞ்சுதடா - தினம் 
    வீதிக் குழாயடி சண்டையில் மங்கையர்
    வீரம் தெரியுதடா 
தக்கத் திமிதிமி தக்கத் திமிதிமி 
    தாளங்கள் கேட்குதடா - இந்த 
    தேசத்தின் சந்தோசக் கூச்சலில்லை -அவை
    தண்ணீர் குடங்களடா 


தாலாட்டும் இல்லாமல் தாய்ப்பாலும் இல்லாமல் 
   தளிரொன்று வாடுதடா - அதன் 
   தாய்தந்தை பெண்ணென்ற காரணத்தா லதைத்
   தூக்கி எறிந்தாரடா.
பாலூட்டும் அன்னைக்கே பச்சிளம் பிள்ளைகள் 
   பாரமாய்ப் போனதடா - இந்தப் 
   பாரத நாட்டுக்கு வந்திட்ட கேடென்ன,
   பாரே சிரிக்குதடா 


*பள்ளிக் குழந்தைகள் செய்வதறி யாமல் 
   திக்கித் திணறுதுடா - அவர்  
   பாடத்தில் கைவைத்த பாவியர் செய்கையால் 
   பாதை குழம்புதடா 
துள்ளித் திரிகிற காலத்தில் பாரங்கள் 
   தூக்கிச் சுமக்குதடா - அவர்
   தோளில் சுமையேற்றி தோல்வி பயமூட்டி 
    தூக்கம் பறித்தோமடா .


*எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின் 
   வங்கியில் தூங்குதடா - இங்கே 
 ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள் 
   இறுக்கமாய்த் தொங்குதடா 
தங்கமும் வைரமும் பூட்டி வைத்து எங்கள்
   சாமி சிரிக்குதடா - எங்கள் 
   தங்கையர் மூக்குத்தி துவாரத்தில் ஈர்க்குச்சி 
   மின்னி சிரிக்குதடா . 


*சிங்களத் தீவினில் எங்கள் தமிழினம் 
   செத்து மடியுதடா - எங்கள் 
   சிங்கத் தமிழினம் சென்ற விடமெல்லாம் 
   சிந்துது இரத்தமடா
பொங்கும் நுரையோடு எங்கள் கடலோரம் 
    பிணம் ஒதுங்குதடா - எங்கள்
    பொங்கு தமிழர்க்கு இன்ன லென்றோம் - அட 
    சங்காரம் எப்போதடா ?    


ரத்தச் சுவடுகள் தேச வளர்ச்சியின் 
   முத்திரை ஆனதடா - சில 
   ராட்சசப் பேய்களின் பற்களில் தேசத்தின்
   இரத்தம் வ்டியுதடா 
புத்தனும் காந்தியும் போதனை செய்தவை 
   பூமிக்குள் போனதடா - அன்று
   பூக்கள் மலர்ந்திட போட்ட விதையினில 
   முட்கள் முளைத்ததடா    


                                                    -சிவகுமாரன் 


 (1992 ஆம் ஆண்டு எழுதி, த மு.எ,ச கலை இரவில் பாடப்பட்டது. 
  *குறியிட்டவை பிற்சேர்க்கைகள் ) 

  

36 கருத்துகள்:

 1. வரிகளில் சுமூகத்தின் அவல நிலையை பற்றிய உங்களின் கோபம் வெளிபட்டுள்ளது

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. படித்து பத்து நிமிடமாச்சு..உறுமல் இன்னும் நிற்கவில்லை..

  பதிலளிநீக்கு
 3. அடா அடா என்று ஆங்காங்கே முடியும் இந்தக்கவிதை அடடா .. வெகு அருமை.

  சலங்கை கட்டிய மாட்டு வண்டிப்பயணம் போல படு ஜோரான நடை.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாஜூலை 23, 2011 2:45 AM

  பாரதியே நேரே வந்துட்டாரோ ... வரிகள் அனல் ...

  பதிலளிநீக்கு
 5. மீண்டும் மீண்டும் சப்தமாகப் படித்து
  சந்த அமைப்பில் வார்த்தை விளையாட்டில்
  கவியின் கருவில்
  அக மகிழ்ந்து போனேன்
  தரமான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அருமை என்ற ஒற்றைச் சொல்லில் சொல்ல மனமில்லை. சந்தங்கள் இனிமை. ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாஜூலை 23, 2011 7:15 AM

  *எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின்
  வங்கியில் தூங்குதடா - இங்கே
  ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள்
  இறுக்கமாய்த் தொங்குதடா
  தங்கமும் வைரமும் பூட்டி வைத்து எங்கள்
  சாமி சிரிக்குதடா - எங்கள்
  தங்கையர் மூக்குத்தி துவாரத்தில் ஈர்க்குச்சி
  மின்னி சிரிக்குதடா . ///


  சமுதாய அவலங்களை சாடி நிற்கிறது கவிதை... வாடியும் நிற்கிறது.. வாழ்த்துக்கள் அன்பரே!

  பதிலளிநீக்கு
 8. என்னதான் மொழி ஆளுமை இருந்தாலும், உள்ளத்தில் கனல் இல்லாவிடில் இத்தகைய பாடல்கள் எழுத முடியாது. நினைத்து மகிழ என்று ஏதுமில்லாமல் இருப்பதுதான் கொடுமை. நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் நாடே முட்காடாக மாறியிருக்கும். பாட்டில் அவலங்களை பட்டியலிட்டு அன்றே எழுதிய பாடல்களுக்கு துணை போக இன்னும் அவலங்கள் கூடுவது காலத்தின் கோலம்.

  பதிலளிநீக்கு
 9. உள்ளக் குமுறல்கள் இங்கு
  கவியாகி சுரக்கிறது..

  அதிலும் தங்களிடம் உள்ள ஒரு சிறப்பு
  பழமையும் புதுமையும் இணைத்து
  கவியாக்குவது..

  வாழ்த்துக்கள்.


  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  பதிலளிநீக்கு
 10. பின்னிரவில் இடுகையிட்டதால் முக்கியமான ஒரு பாடல் விடுபட்டுப் போயிற்று. இப்போது இணைத்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 11. *எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின்
  வங்கியில் தூங்குதடா - இங்கே
  ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள்
  இறுக்கமாய்த் தொங்குதடா //

  எல்லா அவலங்களும் கவிதையாகிப் போனது...

  பதிலளிநீக்கு
 12. கவிதை நடை அருமை.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 13. "சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோர்ருக்கே வந்ததிப்பஞ்சம்"
  "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே"
  என்ற பாரதியின் வரிகள் நூற்றாண்டுக்குப்பின்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதைப்போல தங்களின் இருபது வருடங்களுக்கு முந்தைய கவிதை வரிகளின் சூடு சற்றும் தணிந்து விடவில்லை. இன்றைய தேவையான இணைப்பும் கூடத்தான்.
  என்றென்றும்,
  திலிப் நாராயணன்.

  பதிலளிநீக்கு
 14. //எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின்
  வங்கியில் தூங்குதடா - இங்கே
  ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள்
  இறுக்கமாய்த் தொங்குதடா //தரமான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. காலத்துக்கேற்ற பிற்சேர்க்கைகளுடன் கனமான கவிதை.நன்று.

  பதிலளிநீக்கு
 16. மீண்டும் ஒரு பாரதி பிறந்தனன்...வாழ்த்துக்கள்!
  கனல் தெரிக்கும் வார்த்தைகளில் உள்ள நிதர்சனம் அருமை.
  தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 17. பாவேந்தரும் பாரதியும் ஒன்றாயக் கூடி
  பாடினரோஎனச்சொல்லசொற்கள் தேடி
  நாவேந்தே சிவக்குமர உம்மை நாடி
  நடந்தல்ல வருகிறது ஓடி ஓடி

  ஒவ்வெரு வரியும் அருமை! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 18. வரிகள் எல்லாம் அற்புதம்.....

  பதிலளிநீக்கு
 19. ரௌத்திர தாண்டவமாய் கவிதை... கவிதைக்கேற்ற பாரதி ஓவியம்...

  பதிலளிநீக்கு
 20. உள்ளே இருக்கும் கனல் கவிதையில் தெறிக்கும். அந்த ரௌத்திரத்தின் முன்பு வார்த்தைகள் மண்டியிடும்.. சந்தங்கள் சேவை புரியும்.. என் பாரதியின் அக்கினிக் குஞ்சுகளில் என் தம்பியும் ஒருவன்.

  பதிலளிநீக்கு
 21. இன்று
  சில்லறப் பேய்களின் சட்டைப்பைக் குள்ளது
  சிக்கிக் கிடக்குதடா .
  veera vatikal..thaan...
  Vetha.Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 22. கையில் ஒரு சாட்டையும் எடுத்து பாரதியாய் மீசை துடித்து வரிகளில் நெருப்பு தெறிக்க நாட்டை அழகாய் வைத்திருக்காமல் போனதற்கு இதோ இதோ இதோ இவர்கள் தானென்று கோரப்பற்களால் குத்தி கிழித்து நாட்டை சூறையாடும் இவர்களின் புத்தியில் உறைப்பது போல் சாட்டையால் அடித்துச்சொல்லப்பட்ட வரிகள் அத்தனையும் சிறப்பு சிவகுமார் அன்பு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 23. ரத்தச் சுவடுகள் தேச வளர்ச்சியின்
  முத்திரை ஆனதடா - சில
  ராட்சசப் பேய்களின் பற்களில் தேசத்தின்
  இரத்தம் வ்டியுதடா
  புத்தனும் காந்தியும் போதனை செய்தவை
  பூமிக்குள் போனதடா - அன்று

  பூக்கள் மலர்ந்திட போட்ட விதையினில
  முட்கள் முளைத்ததடா

  வலிதரும் நிஜவரிகள்.அருமையான சந்தங்களுடன்
  பிரமாதம்!.........வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. அருமை பாஸ்! வழமை போலவே!

  பதிலளிநீக்கு
 25. அன்று

  பூக்கள் மலர்ந்திட போட்ட விதையினில
  முட்கள் முளைத்ததடா//

  2012 தாண்டினாலும் நிலை மாறாதோ என்ற ஆதங்கமும் 'என்ன செய்யப் போகிறோம் நாம்?' என்ற ஆயாசமும் தாண்டி எழுச்சி ஊட்டுகிறீர்கள் கவிதை வழி.

  பதிலளிநீக்கு
 26. முத்தான மூன்று முடிச்சு பதிவு தொடர்ந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சிவகுமாரன்.

  பதிலளிநீக்கு
 27. ஐயா உங்கள் மற்றுமோர் முகத்தை பார்த்ததில் சந்தோசம்...

  பதிலளிநீக்கு
 28. சிவா

  பலமுறை படித்தேன். வரிகள் அனல் கக்கும் சாட்டையடி.

  நானும் சமுதாய பார்வையில் எழுதுவேன் (உளருவேன்). ப்ளாக் ஆரம்பித்த புதியதில் ஐந்து / பத்து எழுதியுள்ளேன்.

  ஆனால், உங்கள் வரிகள், தமிழ் வீச்சு அற்புதம்.

  - சாய்

  பதிலளிநீக்கு
 29. இளமுருகன்ஜூலை 25, 2011 11:12 PM

  கனல் தெறிக்கிறது.

  அடுத்ததாக, நாட்டில் உள்ள நல்ல விசயங்களைப்பற்றி ஒரு கவிதை எழுதுங்கள் (காதல் கவிதைகளைத்தவிர :-) :-)

  பதிலளிநீக்கு
 30. //தங்கமும் வைரமும் பூட்டி வைத்து எங்கள் சாமி சிரிக்குதடா - எங்கள்
  தங்கையர் மூக்குத்தி துவாரத்தில் ஈர்க்குச்சி மின்னி சிரிக்குதடா . //

  அட அட அடா...!

  படிக்கப்படிக்க குருதிக்குள் உரமேறுகிறது.
  கவிதைக்கான படத்தேர்வு....!

  ஒரு வேதனையைப் பாருங்களேன். நாட்டு நடப்பைக் கண்டு கவிதையெழுதி இருவது ஆண்டுகளாகியும்,
  இன்றும் பொருந்திப்போகும் அளவுக்கு நம் நாட்டின் “பெருமை” இருக்கிறது.

  சமகால நிகழ்வுகளும் கவிதையில் அடங்கி வலுவேற்றி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 31. எத்தனை முறை படித்தாலும் புதிதாக முறுக்கேற்றும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 32. பெயரில்லாஜூலை 29, 2011 9:16 PM

  சமூக சாடல் கொண்ட வரிகள் ஒவ்வொன்றிலும் வீரியம்...

  அருமை!

  பதிலளிநீக்கு
 33. பெயரில்லாஜூலை 30, 2011 2:02 AM

  தங்களின் வலைத்தளம் இன்று தான் மேவினேன், அனைத்துக் கவிதைகளும் வெண்பாக்களும் மிக அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 34. சமூகத்தின் சீரழிவுகள் மேல் உங்கள் கோவம் அனலாய் கவிதையில் தெரிகிறது. பள்ளிக் குழந்தைகளின் மன அழுத்தத்தைச் சரியாய் இரண்டே வரிகளில் கூறியிருக்கிறீர்கள்.

  //துள்ளித் திரிகிற காலத்தில் பாரங்கள்
  தூக்கிச் சுமக்குதடா - அவர்
  தோளில் சுமையேற்றி தோல்வி பயமூட்டி
  தூக்கம் பறித்தோமடா //.

  பதிலளிநீக்கு
 35. கொதி நிலை உயர்ந்து கொண்டே போகிற இந்த கவிதை எதையாவது நல்ல விஷயத்தை செய்யும் துடிப்பை அதிகரிக்கிறது. எழுத்தின் வலுவிற்கு வேறென்ன வேண்டும்?

  பதிலளிநீக்கு
 36. சேரனும் சோழனும் பாண்டிய வேந்தனும் ஆண்டதோர் தேசமடா இன்று சில்லறைப் பேய்களின் சட்டைப் பைக்குள்ளது சிக்கி தவிக்குதடா.
  அருமையான வரிகள்.காலத்தின் சூழலை கண்ணியமாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள், நன்றி சிவா.
  அனபுடன் எழிலன்

  பதிலளிநீக்கு