சிவகுமாரன்.
நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
செவ்வாய், அக்டோபர் 01, 2024
கபீரும் நானும் 40
செவ்வாய், ஆகஸ்ட் 27, 2024
காதல் மனையாள்
அவளெந்தன் காதல் மனையாள்
ஐம்பதைத் தாண்டும் இணையாள்
தவறேதும் செய்தி டாமல்
தண்டனை பெற்ற வினையாள்
கவலைகள் மறைத்துச் சிரிக்கும்
கலையினைக் கற்ற துணையாள் .
சிவனவன் அருளால் எதையும்
சிரிப்புடன் கடக்க முனைவாள்.
பிறந்தநாள் கேடா என்பாள்
பிறந்தென்ன கண்டேன் என்பாள்
பிறந்ததால் என்னைக் கண்டாய்
பேறென்ன வேண்டும் என்பேன்
இறந்திட வேண்டும் என்பாள்
இருக்கிறேன் உனக்காய் என்பேன்.
சிறந்ததோர் வாழ்க்கை தன்னை
சீக்கிரம் காண்பாய் என்பேன்.
பட்டமேற் படிப்பு கற்று
பலனென்ன கண்டேன் என்பாள்
பட்டறிவு தன்னைப் பிள்ளை
பெற்றதே உன்னால் என்பேன்
நட்டமே என்வாழ் வென்பாள்
நானுந்தன் இலாபம் என்பேன்
கட்டளை இட்டால் போதும்
கைகட்டிச் செய்வேன் என்பேன் .
நரம்பினில் சக்தி இல்லை
நடையினில் துள்ளல் இல்லை
கரம்பற்றி வந்த நாளாய்
கவலைக்குப் பஞ்சம் இல்லை.
வரம்புக்குள் விதித்த நாட்கள்
வாழ்ந்தென்ன ஆவதென்பாள்
வரம்வாங்கிப் பெற்ற பிள்ளை
வெல்வதைக் காண வென்பேன்.
நோயுடன் தினம்போ ராட்டம்.
நொடிக்குநொடி மனதில் மாற்றம்.
ஆயுள் இனி போதும் என்னும்
அலுப்புடன் பேச்சில் வாட்டம்
ஓயுமோ தேக்கி வைத்த
உள்ளத்தின் ஆசை ஓட்டம்
தாயுள்ளம் மட்டும் தானே
தாங்கிடும் விதியின் ஆட்டம் .
இன்னும் சில கடமை உண்டு
இறையருள் கொஞ்சம் உண்டு
முன்னே நாம் கண்ட தெல்லாம்
முடிந்தவை முடிந்து போக,
பின்வரும் நாட்களில் நாம்
பிடித்ததைச் செய்து வாழ்வோம்
அன்பிற்கு பஞ்சம் இல்லை.
அதுவரை ஆயுள் காப்போம்.
பிறந்த நாள்
வாழ்த்துகள்
அன்பே .
Have a Blessed Birthday
வியாழன், ஜனவரி 04, 2024
பிராப்தம்
குருவிக்குஞ்சாய்
கூட்டில் தவிக்கையில்
முளைக்காத சிறகுகள்,
கரையானாய்
புற்றில் இருக்கையில்
முளைத்துத் தொலைக்கிறது.
வாழ்வதற்கு கேட்ட வரங்கள்
வந்து சேர்கிறது
சாவதற்கு முன்.
திங்கள், ஜனவரி 01, 2024
சபதம் எடுப்போமா
ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது
அல்லல் போயிற்றா? - பல்ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
மேன்மை தெரிகிறதா ? - இல்லை
மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
மேலும் தொடர்கிறதா?
நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
நாளைக்கென்ன பயன்? - அட
நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்
நிலத்திற் கென்ன பயன் ?
காற்றைப் போலே காலம் எல்லாம்
வீசிட வேண்டாமா? - நம்
காலம் முடிந்து போனதும் நம்மைப்
பேசிட வேண்டாமா ?
நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நமக்கு பங்கென்ன ? - அட
நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு
நகர்வோம் வேறென்ன ?
மாற்றம் பிறக்க மகேசன் என்ன
மண்ணில் பிறப்பானா ? - நம்
மந்தையை மேய்க்க மாயக் கண்ணன்
மறுபடி வருவானா ?
ஆண்டு பிறந்ததை கொண்டா டிடவோர்
சபதம் எடுப்போமா ? - நமை
ஆண்டு கொழுத்திடும் அரக்கரின் மேலொரு
அம்பு தொடுப்போமா ?
கூண்டினில் ஏற்றி அவர்தம் முகத்திரை
குத்திக் கிழிப்போமா ? - நமை
கொள்ளை அடிப்போர் கூடாரத்தை
கூடி அழிப்போமா ?
ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
உதறிட வேண்டாமா ?
நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம்
வாங்கிடத் துணிவாரா ? -இந்த
நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை
நசுக்கிட வேண்டாமா ?
கோடிக் கணக்கில் கொள்ளை அடித்துக்
குவித்ததை மீட்போமா ?- அங்கே
குவிந்ததை எல்லாம் கொணர்ந்துநம் வறுமைக்
கோட்டை அழிப்போமா ?
கூடித் திருடும் கொள்ளையர் வீழ
குழிபறித் திடுவோமா - வெறுங்
கூச்சல் போட்டுப் பலனிலை ; அதற்கோர்
கொள்கை வகுப்போமா ?
காசுக் காக நீதியை விற்கும்
கயமை எதிர்ப்போமா ?-அவள்
கண்ணில் கட்டிய கறுப்புத் துணியை
கழற்றி எறிவோமா ?
கோசம் வேண்டாம் கோர்ட்டுகள் வேண்டாம்
குற்றம் தடுப்போமா -அந்தக்
கொள்ளையர் தம்மைக் கண்டால் கையில்
கோலை எடுப்போமா ?
கட்டும் வரிகள் போவது எங்கே
கணக்குகள் அறிவோமா - பெரும்
கார்ப்பரேட் டுகளின் கைக்கூ லிகளை
களைந்து எறிவோமா ?
கொட்டும் மழையாய் குவிந்த வரியில்
கொடுத்ததை கேட்போமா - புதுக்
கொள்கைக் கூட்டணி கொண்டுநாம் வென்று
கோட்டையை மீட்போமா
மதத்தை வைத்து மனிதரைப் பிரிப்போர்
முகத்திரை கிழிப்போமா- அந்த
மந்தையில் ஆடாய் மயங்கும் மனிதரின்
மடமை அழிப்போமா ?
விதைத்தது தானே முளைக்கும் - விசத்தை
வெட்டி எறிவோமா - நம்
விழுதுகளேனும் சமூக நீதியில்
வேர்விடச் செய்வோமா ?
அண்ணா பெரியார் கலைஞர் வழியில்
அரசியல் காண்போமா - இனி
ஆரிய சங்கிகள் அட்டூழியத்தை
அடியோ டறுப்போமா
மண்ணாள் வதுநம் மக்களின் முடிவெனும்
மகத்துவம் உணர்வோமா ? - இனி
மந்தை ஆடாய் வேண்டாம் , பாதையை
மாற்றத் துணிவோமா ?
வியாழன், ஜூலை 06, 2023
செவ்வாய், மே 30, 2023
வளையும் கோல்
வளைந்த செங்கோல்
உங்கள்
செங்கோலின் முன்னே.
உயிர்ப்பயமே இன்றி
வளைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மாமன்னரே.
வெள்ளி, அக்டோபர் 07, 2022
கனவுக்கடத்தல்.
வாய்பிளந்து கிடக்கின்றன
எல்லாச் சிப்பிகளும்.
இடப்படுகின்றன
முட்டைகள்..
பொரித்துத் தின்ன அல்ல
விட்டுவந்த கன்றுகளில்
முளைத்து வருகிறது
வெட்டப்பட்ட
தோரண வாழையின்
ஏக்கங்கள்.
வேர்களின் தாகத்திற்கு
தண்ணீர் குடிக்கின்றன
விழுதுகள்.
தலைமுறைகள் தாண்டி
கடத்தப்படுகின்றன
கனவுகள்.
புதன், செப்டம்பர் 21, 2022
கடவுளைக் காட்டியவன்
உன்னால் தான்
நான்
சாமி கும்பிட்டேன்.
இடுப்பில் துண்டு கட்டி
கோயிலுக்கு வெளியே
நின்றவர்களை
ஆலயம் நுழைய வைத்தவன் நீ.
நீ கடவுளே இல்லை என்றாய்.
உன்னால் தான்
கடவுளே எங்களை கண்டுகொண்டார்.
இது பெரியார் பூமியா
ஆன்மீக பூமியா எனும்
கேள்வி எனக்கு இல்லை.
இது
பெரியார் உருவாக்கிய
ஆன்மீக பூமி.
நீ
கடவுளை மறக்கச் சொன்னாய்.
மனிதனை நினைக்கச் சொன்னாய்.
நாங்கள்
யாரையும் மறக்கவில்லை.
என் பார்வையில்
இராமானுஜர்
வள்ளலார்
அடிகளார்...
இந்த வரிசையில்
ஆன்மீகப் புரட்சி செய்த
பெரியார் நீ
எங்கள் கடவுள்கள்
இருக்கும் வரை
நீயும் இருப்பாய்.
வாழ்க நின் புகழ்.
சிவகுமாரன்
17/09/2022
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2022
தாய்க்கிழவி
களவாணிப் பயலுகளோடு
கூட்டு சேர்ந்துகிட்டு
பூர்வீகச் சொத்தையெல்லாம்
வித்து திங்குது
ஊதாரிப் புள்ளை.
எழுபத்தஞ்சு வயசாச்சு
என்ன செய்வா பாவம்
தாய்க்கிழவி...
சிவகுமாரன்.








.jpeg)