போர்முனையில் புறமுதுகு காட்டா வீரன்
மார்புதனில் வேல்பாய்ந்து மாண்டு போனான் .
பீடுநடை போட்டவனை பிணமாய்த் தூக்கி
வீடுதனில் கூடத்தில் கிடத்தி வைத்தார் .
கண்ணெதிரே பிணமாக .. கட்டியவன்.
பெண்ணவளோ சிலையாக நின்றிருந்தாள்.
மண்ணதிர விழவில்லை , மயங்கவில்லை
சின்னதொரு சலனமில்லை , தேம்பவில்லை .
காலமெல்லாம் படப்போகும் கொடுமை எண்ணி
ஓலமிட்டு குரலெழுப்பி அழவுமில்லை
நிலைகுத்திப் போன அவள் விழிகள் பார்த்து
குலைநடுங்கிப் போனார்கள் உறவினர்கள்
கொஞ்சமேனும் குரலெழுப்ப வில்லையெனில்
நெஞ்சமது வெடித்துவிடும் ! மாண்டு போவாய் .
அழுதுவிடு, அழுதுவிடு அவலம் சொல்லி
கழுவிவிடு கவலைகளை கண்ணீர் கொண்டு.
பேச்சின்றி பேய்போல் நீ விழித்திருந்தால்
மூச்சடைத்துப் போவாயே முட்டாள் பெண்ணே .
எவ்வளவோ எல்லோரும் சொன்னார், ஆனால்
அவ்வளவும் அவள் காதில் விழவேயில்லை.
இறந்தவனின் பெருமைகளை ஒருத்தி சொன்னாள்
மறந்துபோன நினைவெல்லாம் வரட்டும் என்று.
உண்மையான வீரனவன் போர்முனையில் .
மென்மையான மனம் கொண்ட மனிதனவன்.
சிப்பாய் தான் ஆனாலும் சிரித்த முகம்
எப்போதும் பழகுதற்கு இனிய குணம்.
இப்படியாய் இறந்தவனின் பெருமைகளை
ஒப்பாரிப் பாட்டில் அவள் ஒப்புவித்தாள்.
கொஞ்சமேனும் அவள்முகத்தில் சலனமில்லை
நெஞ்சமென்ன கல்லாகிப் போனதுவோ ?
சேடிப்பெண் மெதுவாக எழுந்து வந்தாள்
மூடிவைத்த முகத்துணியை விலக்கி வைத்தாள்.
வீறிட்டுக் கிளம்பியது ஓலமெங்கும்.
ஏறிட்டும் பார்க்கவில்லை அவள் எதையும் .
தொண்ணூறு வயதான பெண்ணொருத்தி
முன்னொரு நாள் தாதியவள். எழுந்து வந்தாள்
தவழ்ந்துவந்த அவன்பிள்ளை தன்னைத் தூக்கி
இவள்மடியில் போட்டுவிட்டு எங்கோ போனாள்.
கோடையிடி போல இவள் குரலெழுப்பி
வீடதிர விண்ணதிர கத்தித் தீர்த்தாள்.
அய்யோ..... ! என் செல்லமே நான் என்ன செய்வேன்
பொய்யாகிப் போனதடா வாழ்க்கை இனி .
சிந்தையை நான் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்
தந்தையின்றி உனை வளர்த்து காட்ட வேண்டும்.
எனக்கென்று ஏதுமில்லை வாழ்வில் பாக்கி.
உனக்காக வாழ்ந்திருப்பேன் உயிரைத் தேக்கி.
-சிவகுமாரன்
(நேற்று ஓர் ஆங்கிலக் கவிதையை படித்தவுடன் , அதை மொழிபெயர்க்கத் தோன்றியது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் , நான் கண்ட, என்னைப் பாதித்த நிகழ்வினை அடிப்படையாய்க் கொண்டு, இக்கவிதையை எழுதினேன்.
மூலக் கவிதையை சிதைக்காமல் எழுதி இருக்கிறேனா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது என் கன்னி முயற்சி. )
மூலக் கவிதை
Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.
Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.
Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee
-Alfred Lord Tennyson